முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியாமல் சொத்து வரி உயர்வு அரசாணை பிறப்பிக்கப் பட்டுள்ளதா?. நகர்ப்புற அபரிமித சொத்துவரி உயர்வு – தமிழக அரசின் அரசாணையை நிறுத்திவைக்க வேண்டும்! சொத்து வரியை உயர்த்த மத்திய நிதிஆணையம் மாநில அரசுக்கு பரிந்துரைசெய்தது எப்போது? 100 முதல் 200 சதவிகிதம் சொத்து வரியை உயர்த்த கட்டளையிட்டதா?.

தமிழக அரசு வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்! வரிவிதிப்புகள் இல்லாமல், அரசு நிர்வாகம் நடைபெறஇயலாது. ஆனால், வரிவிதிப்புகள் மக்கள் தாங்கக்கூடியதாக இருக்க வேண்டும். தாறுமாறான வரிவிதிப்புகள் அபரிமிதமான விலைஉயர்வுக்கும், மக்களின் வாங்கும் சக்தியைக் குறைத்து, அவர்களை வீதிக்குவந்து போராடவும் தூண்டும். கரோனாவினால் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவுகள், ரஷ்ய உக்ரைன் போரால் ஏற்பட்ட பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வுக ளினால் அனைவரும் திண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஐந்துமாநில தேர்தலுக்காக மட்டுமே, கடந்த மூன்று மாதங்களாக உயர்த்தப்படாமல் இருந்த பெட்ரோல், டீசல்விலை கடந்த பத்து தினங்களாக தினமும் 70 முதல் 80 பைசாக்கள் வரை உயர்த்தப் படுகிறது என்ற குற்றச்சாட்டை தி.ஸ்டாக்கிஸ்டுகள் தினமும் கூறிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளினுடைய சொத்துவரிகளை அபரிமிதமாக உயர்த்தி, மார்ச் 30 ஆம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்து இருக்கிறது. ஆனால், ஏப்ரல் 1 ம் தேதி மாலைதான் பத்திரிகைகளுக்குச் செய்தியாகப் பகிரப்படுகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லியில், முகாமிட்டிருக்கின்ற பொழுது, அவருக்குத் தெரியாமலேயே இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டு இருக்குமோ என்று திமுகவின் பிரதானகூட்டணிக் கட்சியின் தலைவர் ஒருவர் ’வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ’ என்று ஒரு அறிக்கையை வெளியிடுகிறார். முதல்வரின் அனுமதிஇல்லாமல் இந்த உத்தரவு எப்படிப் பிறப்பிக்க முடியும்?

மத்திய அரசினுடைய 15வது நிதிக்குழு அறிக்கையின் அடிப்படையிலேயே, தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 142 நகராட்சிகள், 528 பேரூராட்சிகளில் உள்ள குடியிருப்புகள், வணிக வளாகங்கள், காலி மனைகள், கல்விக்கூடங்கள் என அனைத்திற்கும் 100 முதல் 200 சதவிகித வரி அதிகரிப்புசெய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக, இந்த வரி உயர்வை நியாயப்படுத்தி, மொத்த பழியையும் மத்தியஅரசின் மீது சுமத்தி அறிக்கை வெளியிட்டு அமைச்சர் நேரு அவர்கள் தப்பிக்கப் பார்க்கிறார்.

1. மத்திய அரசினுடைய 15வது நிதிக்குழு எந்த ஆண்டு, எந்த மாதம், எந்தத் தேதியில் இந்த அறிக்கையை மாநில அரசுக்கு அனுப்பியது என்பது குறித்தும்,

2. 100 முதல் 200 சதவிகிதம் வரியை உயர்த்த வேண்டும் என ஏதாவது கட்டளையை மத்திய அரசின் நிதி கமிஷன் சொல்லியிருக்கிறதா? அப்படி இருந்தால் அது குறித்தும்,

3. மத்திய நிதிக்குழு, நகர்ப்புற சொத்துவரியை உயர்த்த உத்தரவிட்டிருந்தால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக ஏன் அதை அமலுக்குக் கொண்டு வரவில்லை? என்பது குறித்தும்,

4. ஒவ்வொரு செயலுக்கும் மத்தியஅரசை ’ஒன்றிய அரசு’ எனக் குறைத்துப் பேசிக் குற்றம்சுமத்துபவர்கள் மத்திய அரசின் நிதிக்குழு அறிக்கையை மட்டும் சிறிதும் பரிசீலிக்காமலும், மக்களிடம் கருத்துக் கேட்காமலும் ஏன் அவசர அவசரமாக நிறைவேற்ற அரசாணை பிறப்பிக்கபட்டது? என்பது குறித்தும்,
– தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக, வரி உயர்வு செய்யப்படுமேயாயின், அது திமுகவின் வெற்றிக்குப் பாதிப்பை உண்டாக்கும் என்று தானே. ஆட்சிக்குவந்து 10 மாதங்கள் வரையிலும் அதை மூடிமறைத்து இருக்கிறீர்கள். ’மாடல்’ அரசு பற்றி சுயதம்பட்டம் அடித்து கொண்டே, இதுபோன்ற மக்களுக்கான பிரச்சனைகளை மூடிமறைக்கின்ற இந்த அரசை எப்படி அழைப்பது? ’மாடல்’ அரசு என்றா? ’மூடல்’ அரசு என்றா?

வீடுகள், வணிக நிறுவனங்கள், காலிமனைகள் மற்றும் கல்விக் கூடங்களுக்கான வரிவிதிப்பு எந்த அடிப்படையிலானது என்பது குறித்து எவ்வித தெளிவான விளக்கமும் அளிக்கப் படாததால் பொதுமக்கள் இதுவரையிலும் இருளிலேயே வைக்கப்பட்டு இருக்கிறார்கள். Zone-களின் அடிப்படையில் என்று சொல்லி கொண்டு வீதிக்குவீதி, ஊருக்கு ஊர், நகரத்திற்கு நகரம் இஷ்டம்போல் வரி விதிக்கிறார்கள். ஆனால், அந்த Zone-கள் எதன் அடிப்படையில் பிரிக்கப்படுகிறது என்பது குறித்தான விளக்கம் இல்லை.
இந்நிலையில், எவ்விதநியாயமான அடிப்படை காரணங்களும் இல்லாமல் ஏழை, எளிய, நடுத்தர மக்களினுடைய தலையில் பாறாங்கல்லுக்குச் சமமான 100 முதல் 200 சதவிகிதம் வரிஉயர்வைச் சுமத்துவது ஏற்புடையது அல்ல. எனவே, பொது மக்களின் கருத்துக்களை கேட்டறியாமல், கடந்த 30 ஆம் தேதி தமிழகஅரசு வெளியிட்டுள்ள நகர்ப்புற சொத்து வரி உயர்வு அரசாணையை நிறுத்திவைக்க வேண்டுமென தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
ஸ்டாலினுக்கு தெரியாமல் சொத்து வரி உயர்வு அரசாணை பிறப்பிக்க முடியுமா? மக்கள் கருத்தைஅறியாமல் நகர்ப்புற சொத்துவரி உயர்வை அமலாக்கக் கூடாது.சொத்து வரியை உயர்த்த மத்தியநிதி ஆணையம் மாநில அரசுக்குப் பரிந்துரைசெய்தது எப்போது? 100 முதல் 200 சதவிகிதம் சொத்து வரியை உயர்த்த கட்டளையிட்டுள்ளதா? தமிழக அரசு வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்!

நன்றி – டாக்டர் க.கிருஷ்ணசாமி  Ex.MLA
நிறுவனர் & தலைவர்
புதிய தமிழகம் கட்சி

Comments are closed.