மக்கள் ஜனநாயக கட்சி, பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்றுவந்த ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முதல் மந்திரியாக பதவிவகித்த முப்தி முகமது சயீத் திடீர் உடல் நலக் குறைவால் கடந்த ஜனவரி மாதம் 7–ந் தேதி மரணம் அடைந்தார். அதைத்தொடர்ந்து அங்கு புதிய அரசு அமைவதில் தாமதம் ஏற்பட்டதால் ஜனாதிபதி ஆட்சி அமலானது.

இந்தநிலையில் டெல்லியில் கடந்த மாதம் 22–ந்தேதி பிரதமர் நரேந்திர மோடியை முப்தி முகமது சயீத்தின் மகள் மெகபூபா சந்தித்துபேசினார். அதைத்தொடர்ந்து காஷ்மீரில் புதிய அரசு அமைக்கும் நடவடிக்கைகள் தொடங்கின.

இந்நிலையில், நீண்ட இழுபறிக்குபின், காஷ்மீர் மாநிலத்தின் முதல் பெண் முதல்மந்திரியாக மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா முப்தி இன்று பதவியேற்றார். ஜம்முவில் நடைபெற்ற இந்த விழாவில் மத்திய மந்திரிகள் வெங்கய்யா நாயுடு, ஜிதேந்திராசிங், காஷ்மீர் முன்னாள் முதல்மந்திரி உமர் அப்துல்லா உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

மாநில துணை முதல்மந்திரியாக பாஜக.வைச் சேர்ந்த டாக்டர் நிர்மல்சிங் மற்றும் இதர மந்திரிகளுக்கு மாநில கவர்னர் என்.என். வோரா பதவி பிரமாணமும், காப்புறுதி பிரமாணமும் செய்துவைத்தார்.

முதல்-மந்திரியாக பதவியேற்றுள்ள மெகபூபாவிற்கும், புதிய அரசிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இது குறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது:-

மெகபூபா முப்தி, நிர்மல்சிங் மற்றும் இன்று பதவிப் பிரமாணம் செய்துகொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள். புதிதாக பதவியேற்றுள்ள புதிய அரசு ஜம்முகாஷ்மீர் மக்களின் கனவுகளையும், லட்சியங்களையும் நிறைவேற்ற பாடுபடட்டும். ஜம்முகாஷ்மீர் மாநிலம் புதிய வளர்ச்சியை எட்டட்டும் இவ்வாறு மோடி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply