ஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் என்.என். வோராவை மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி), பாஜக ஆகியகட்சிகளின் தலைவர்கள் சனிக் கிழமை சந்தித்தனர். அப்போது, மாநிலத்தில் ஆட்சியமைப்பதற்கு பிடிபி தலைவர் மெஹபூபா முஃப்தி முறைப்படி உரிமைகோரினார்.


ஜம்முவில் ஆளுநர் என்.என். வோராவை பிடிபி தலைவர் மெஹ பூபா முஃப்தி சனிக் கிழமை சந்தித்தார். அப்போது ஆளுநரிடம் தன்னை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.,க்களின் பட்டியலை அளித்து, மாநிலத்தில் ஆட்சியமைப்பதற்கு மெஹபூபா உரிமைகோரினார்.


 இதைத்தொடர்ந்து, மெஹபூபா செய்தியாளர்களிடம் பேசியதாவது: எனது தலைமையில் அமையவுள்ள புதியஅரசுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதற்கு பாஜகவுக்கு நன்றிதெரிவித்துக் கொள்கிறேன். ஜம்மு-காஷ்மீரில் அமைதி, நல்லிணக்கம், வளர்ச்சியை ஏற்படுத்துவதே எனது அரசின் நோக்கமாகும் என்றார்.


 அதைத்தொடர்ந்து, ஆளுநர் என்.என். வோராவை சட்டப்பேரவை பாஜக தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான நிர்மல் சிங் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் சந்தித்தனர். அப்போது மாநிலத்தில், பிடிபி ஆட்சியமைக்க பாஜக ஆதரவு அளிப்பதற்கான கடிதத்தை ஆளுநரிடம் நிர்மல்சிங் அளித்தார்.


 ஜம்முகாஷ்மீர் முதல்வர் முஃப்தி முகமது சயீது உடல் நலன் பாதிக்கப்பட்டு, கடந்த ஜனவரி மாதம் உயிரிழந்தார்.
 இதையடுத்து, தொடர் அரசியல் குழப்பத்தால் ஜம்முகாஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப் பட்டது. இந்நிலையில், தில்லிக்கு அண்மையில் வந்த மெஹபூபா முஃப்தி, பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா ஆகியோரை தனித்தனியே சந்தித்து பேசினார். அப்போது, ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் ஆட்சியமைப்பது தொடர்பாக இருகட்சிகளுக்கும் இடையே சுமுக உடன்பாடு எட்டப்பட்டது.  இதையடுத்து, ஸ்ரீநகரில் நடைபெற்ற பிடிபி எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், சட்டப் பேரவை பிடிபி கட்சித் தலைவராக மெஹபூபா தேர்வு செய்யப்பட்டார்.

Leave a Reply