பிரச்னைகள் சூழ்ந்துள்ள ஜம்முகாஷ்மீர் மாநிலத்தின் மேம்பாட்டுக்காக மத்திய அரசு முன்னெடுக்கும் திட்டங்களானது வளர்ச்சியையும், நம்பிக்கையையுமே அஸ்திவாரமாக கொண்டுள்ளன என பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.


ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதி பர்ஹான் வானி, ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் கடந்த ஜூலை மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு எதிர்ப்புத்தெரிவித்து பர்ஹான் வானியின் ஆதரவாளர்கள் மாநிலம் முழுவதும் பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். பாதுகாப்பு படையினருக்கு எதிராகவும் அவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.


சுமார் மூன்றரை மாதங்களுக்கும் மேலாக நடைபெற்ற இந்த கிளர்ச்சியில் ஏராளமானோர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீரில் அமைதியான சூழலை ஏற்படுத்தும்நோக்கில், அந்த மாநிலத்தின் ஊராட்சித் தலைவர்களுடன் நரேந்திரமோடி சனிக்கிழமை உரையாற்றினார்.


இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஜம்மு-காஷ்மீரின் 4,000 கிராம ஊராட்சி தலைவர்களின் பிரதிநிதிகளை கொண்ட உயர் நிலைக் குழுவினருடன் மோடி கலந்துரையாடினார். அப்போது, ஜம்முகாஷ்மீரில் நிலவிவரும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் விவகாரத்தை மனிதாபிமான முறையில் அணுகவேண்டும் என்று மோடி வலியுறுத்தினார்.


ஜம்மு-காஷ்மீரில் வளர்ச்சியை ஏற்படுத்துவதே தனது பிரதான செயல் திட்டம் எனக்கூறிய மோடி, வளர்ச்சி மட்டுமே மாநில பிரச்னைகளுக்கு சிறந்தத்தீர்வாக அமையும் என்றும் தெரிவித்தார்.மேலும், ஜம்மு-காஷ்மீர் மேம்பாட்டுக்காக மத்திய அரசு முன்னெடுக்கும் திட்டங்களானது, வளர்ச்சியையும் – நம்பிக்கையையுமே அஸ்தி வாரங்களாகக் கொண்டுள்ளது .


ஜம்மு-காஷ்மீரில் பள்ளிகள் எரிக்கப்பட்டதற்கு மோடி கடும்கண்டனம் தெரிவித்தார். முன்னதாக, ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சிக்கு மத்திய அரசு வழங்கிவரும் நிதியுதவிகள், கிராமங்களுக்கு முழுமையாக கிடைக்கப்பெறுவதில்லை என்று பிரதமரிடம் உயர்நிலைக் குழுவினர் புகார் தெரிவித்தனர்.
மேலும், இப்பிரச்னைக்குத் தீர்வு காண, மாநிலத்தின் கிராம ஊராட்சிகளுக்கு அதிகாரம்வழங்கும் அரசமைப்புச் சட்டத்தின் 73 மற்றும் 74-ஆவது சட்டப் பிரிவுகளை ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கும் விரிவுபடுத்த வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

Leave a Reply