ஜம்மு-காஷ்மீர் மாநில இளைஞர்கள், வன் முறை, பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவதை கைவிட்டு மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவவேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோள் விடுத்தார்.
காஷ்மீர் பள்ளத் தாக்கையும், ஜம்முவையும் இணைக்கும் மிகநீளமான சுரங்கப்பாதையை திறந்து வைப்பதற்காக, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த பிரதமர் மோடி, உதம்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:


காஷ்மீர் இளைஞர்கள், தங்களது பாரம்பரிய சூஃபி கலாசாரத்தைப் புறக்கணித்தால், அவர்கள் தங்களது நிகழ்காலத்தை இழப்பதுடன், எதிர் காலத்தையும் இருளில் மூழ்கடித்து விடுவார்கள்.
பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் காஷ்மீர் மீது குறிவைத் துள்ளார்கள் என்றாலும் அவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளாத நிலையில் தான் உள்ளனர்.


ஜம்முகாஷ்மீர் மாநிலத்தை வளர்ச்சி பாதையில் புதியஉச்சத்துக்கு கொண்டுசெல்வதே எனது முக்கிய குறிக்கோளாகும். இந்த மாநில வளர்ச்சிக்காக, தோளோடு தோள்கொடுத்து நிற்பேன் என்று உறுதியளிக்கிறேன். எனது நோக்கத்தை செயல்படுத்த மாநிலமக்கள் முழு ஒத்துழைப்புத் தரவேண்டும்.
"காஷ்மீரியம், ஜனநாயகம், மனிதநேயம்' ஆகிய வழிகளில் காஷ்மீர் மக்கள் விடுதலை பெறவேண்டும் என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூறியது நினைவுக்கு வருகிறது.


அதே குறிக்கோளுடன் நல்லிணக்கம், சகோதரத்துவம், பற்றுறுதி ஆகியவற்றுடன் இந்த மாநில இளைஞர்களின் பிரகாசமான எதிர் காலத்தை நிர்ணயிப்பதற்கு மத்திய அரசு பாடுபடும்.


செனானி-நஸ்ரி இடையே தற்போது திறக்கப்பட்டுள்ள 9 கி.மீ. தூர சுரங்கப் பாதை, மாநிலத்தின் தலைவிதியை மாற்றப்போகும் பாதையாகும். இந்தப்பாதை, பயணதூரத்தை குறைப்பது மட்டுமன்றி, வளர்ச்சியில் ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தும்.


மழைக் காலங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு காஷ்மீர் நெடுஞ்சாலை மூடப்படுவதால், விவசாயிகள் தங்களது விளை பொருள்களை சந்தைக்கு கொண்டுசெல்ல முடியாமல் அவதிப்பட்டுவந்தனர். இனி, அந்தப்பிரச்னை இருக்காது. அவர்கள் தங்களது விளைபொருள்களை, இந்த சுரங்கப் பாதைவழியாக சரியான நேரத்தில் சந்தைக்கு கொண்டு செல்ல முடியும். இதனால், அவர்களுக்கு வருவாய் இழப்பும் ஏற்படாது.


மேலும் இந்த சுரங்கப் பாதை திறக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் மாநிலத்துக்கு வருவதற்கு வழிவகுக்கும். நிலச் சரிவுகளால் நெடுஞ்சாலைகள் மூடப்படாலும் அவர்கள் கவலை கொள்ளத் தேவையில்லை.

இந்த மாநிலத்தில் தவறாக வழி நடத்தப்படும் இளைஞர்கள், முதலில் கற்களின் வலிமையை உணரவேண்டும். ஒரு புறம் மாநிலத்தில் தவறாக வழி நடத்தப்படும் பள்ளத் தாக்குப் பகுதி இளைஞர்கள் கற்களை வீசி வன்முறையில் ஈடுபட்டு வருகிறார்கள் என்றாலும் மற்றொருபுறம் அதே காஷ்மீர்மாநில இளைஞர்கள், தங்களது கடின உழைப்பால் இந்த சுரங்கப்பாதையை உருவாக்கியிருக்கிறார்கள் என்பதை நினைத்தால் பெருமையாக இருக்கிறது.


இந்த நேரத்தில், வளர்ச்சியா? பயங்கர வாதமா? இவற்றில் எதைத் தேர்வுசெய்வது என்பதை காஷ்மீர் இளைஞர்கள் சிந்தித்துப்பார்க்க வேண்டும். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, காஷ்மீர் இளைஞர்கள் வன்முறைப்பாதையில் சென்றதால், மாநிலத்தில் ரத்தம் சிந்துதலும் இளைஞர்கள் உயிரிழப்பும் தான் ஏற்பட்டதே தவிர வேறு எந்தப்பலனும் கிடைக்கவில்லை.


ஆனால், அதே 40 ஆண்டுகளில் சுற்றுலாவளர்ச்சிக்கு இந்த மாநிலமக்கள் முக்கியத்துவம் அளித்திருந்தால், உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக இந்தமாநிலம் உருவாகியிருக்கும். எனவே, இந்தமாநில இளைஞர்கள் பயங்கரவாதத்தைக் கைவிட்டு வளர்ச்சி பாதைக்குத் திரும்பவேண்டும் என்றார் மோடி.

Leave a Reply