ஜல்லிக்கட்டுக்கு ஆதரவுபெருகிவரும் நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், கடந்த 2015-ம் ஆண்டு எழுதிய கடிதம் தற்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திஉள்ளது. அந்த கடிதத்தில் ஜல்லிக்கட்டை 'புல்ஃபைட்' என மன் மோகன் குறிப்பிட்டுள்ளார். 

காளைகளை மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் 2011-ம் ஆண்டு சேர்த்தது. பின்னர் பீட்டா அமைப்பு தொடர்ந்தவழக்கில்  கடந்த 2014-ம் ஆண்டு, ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்தது. ஜல்லிக்கட்டு ஒரு ஆண்டு நடைபெற வில்லை. 2016ம் ஆண்டு சில கட்டுப்பாடுகளுடன் போட்டியை நடத்தலாம் என மத்திய அரசு உத்தர விட்டது. ஆனால் பீட்டா அமைப்பு உச்ச நீதிமன்றத்தை அணுகித் தடையைபெற்றது. இதனால், ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் போய் விட்டது. 

தற்போது ஜல்லிக்கட்டு நடந்தேயாக வேண்டுமென இளைஞர்கள் தமிழகம்முழுவதும் போராடி வருகின்றனர். எந்த நிலையிலும் ஜல்லிக்கட்டு நடக்கவில்லை என்றால் வீடுதிரும்ப மாட்டோம் என அறிவித்துள்ளனர். உலகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு பெருகிவருகிறது.

ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்க யார் முக்கிய காரணம் என்பதற்கு இன்னும் தமிழக மக்களுக்கு விடை கிடைக்க வில்லை. போட்டி நடைபெறாமல் போனதற்கு தற்போதைய பாரதிய ஜனதா கட்சிதான் காரணம் என்று காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றஞ் சாட்டி வருகின்றன.கடந்த 2011ம் ஆண்டு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சராக ஜெய்ராம் ரமேஷ் இருந்தபோது காளைகள் காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் சேர்க்கப்பட்டது. அப்போது திமுகவும் காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றிருந்தது. இப்போது போராட்டத்தில் ஈடுபடும் திமுகவினருக்கு காளைகளை காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் சேர்த்தால் ஜல்லிக்கட்டு போட்டிக்கு பாதிப்புவரும் என்பது முன்பே தெரிந்திருக்கவில்லையா என்பதே இளைஞர்கள் எழுப்பும்கேள்வி. 

இதற்கிடையே கடந்த 2015ம் ஆண்டு ஜல்லிக் கட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்மோகன்சிங் எழுதிய கடிதத்தை இப்போது இந்தியா டுடே பத்திரிகை வெளியிட்டுள்ளது.  சமீபத்தில்  தமிழகத்தில்  ஜல்லிக்கட்டு நடந்தால், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையை ‘ஹ்யூமன்சொசைட்டி சர்வதேச இந்தியா’ அமைப்பின் மேலாண் இயக்குநர் என்ஜி. ஜெய சிம்ஹா விடுத்திருந்தார். இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும் ஜெய சிம்ஹா கடிதம் எழுதியிருந்தார்.

பீட்டாவைப் போன்றே இந்த அமைப்பும் ஜல்லிக் கட்டுக்கு எதிர்ப்புதெரிவிக்கும் ஒரு அமைப்பு. அதன் தலைவர் ஜெயசிம்ஹாவிற்கு கடந்த 2015ம் ஆண்டு மன்மோகன்சிங் ஒருகடிதம் எழுதியுள்ளார். அதில், ஜல்லிக்கட்டை 'புல்ஃபைட்' என மன்மோகன்சிங் குறிப்பிட்டுள்ளார். 'பொழுது போக்கு என்ற பெயரில் காளைகளை துன்புறுத்தும் ஜல்லிக்கட்டை ஊக்கப்படுத்தக்கூடாது' என்றும் மன்மோகன் சிங் அந்த கடிதத்தில் கூறியுள்ளார். ''உங்களுடைய நோக்கத்தில் வெற்றிபெற வாழ்த்து தெரிவிக்கிறேன்'' என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இருகாளைகள் மோதுவதைத்தான் புல்ஃபைட் என்பார்கள். இங்கே காளைகள் மோதுவதில்லை. காளைகளை ஓட விட்டுப் பிடிப்பதற்குப் பெயர்தான் ஜல்லிக்கட்டு. அதுவும் பலவிதிமுறைகள் வகுத்த பின்னர், ஜல்லிக்கட்டு பாதுகாப்பு மிகுந்த ஒரு விளையாட்டாகவே தெரிகிறது.

Leave a Reply