ஜிசாட்-19 தகவல் தொடர்பு செயற்கைக் கோளுடன் இஸ்ரோ விஞ்ஞானிகள் புதியசாதனை: குடியரசுத் தலைவர், பிரதமர் பாராட்டு. அதிநவீன ஜிசாட்-19 தகவல் தொடர்பு செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி மார்க்-3 டி-1 ராக்கெட்டை  வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), 4 டன் வரையிலான அதிக எடை கொண்ட செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்துவதற்காக ஜிஎஸ்எல்வி மார்க்-3 டி-1 ராக்கெட்டை ரூ.300 கோடி செலவில் தயாரித்துள்ளது. முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் இன்ஜின் தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்தராக்கெட், ஜிசாட்-19 எனப்படும் அதிநவீன தகவல்தொடர்பு செயற்கைக்கோளுடன் தனது முதல் பயணத்தை  தொடங்கியுள்ளது.

இது 640 டன் எடையும் 43.43 மீட்டர் நீளமும் 5 மீட்டர் விட்டமும் கொண்டது. சி-25 எனப்படும் கிரையோ ஜெனிக் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் திரவஆக்சிஜன் மற்றும் திரவ ஹைட்ரஜன் எரிபொருளாக பயன்படுத்தப் படுகிறது. இது முந்தைய ஜிஎஸ்எல்வி மார்க்-2 ராக்கெட்டை விட இரண்டுமடங்கு அதிக திறன்கொண்டது. மேலும், ஜிஎஸ்எல்வி வகை ராக்கெட்களுள் அதிக திறன் படைத்தது.

இந்த ராக்கெட் மூலம் 4 டன் வரை எடைகொண்ட செயற்கைக் கோள்களை புவிநிலை சுற்றுவட்டப் பாதையிலும் (Geosynchronous Transfer Orbit). 10 டன் வரை எடை எடைகொண்ட செயற்கைக் கோள்களை பூமியின் தாழ்வட்ட பாதையிலும் (Low Earth Orbit) நிலை நிறுத்தலாம். அதிக எடைகாரணமாக இந்த ராக்கெட்டுக்கு ‘குண்டு பையன்’, ‘பாகுபலி ராக்கெட்’ போன்ற பெயர்களை இந்திய ஊடகங்கள் சூட்டியுள்ளன.

அதிநவீன தகவல்தொடர்பு செயற்கைக்கோளான ஜிசாட்-19 மொத்தம் 3,136 கிலோ எடை கொண்டது. இதில் 4,500 வாட்ஸ் திறனுடைய சோலார் பேனல்,2.0 மற்றும் 1.4 மீட்டர் நீளம்கொண்ட 2 ஆன்டெனாக்கள், மற்றும் க்யூ பேண்ட் தகவல்தொடர்பு சாதனம் உள்ளிட்டவை பொருத்தப் பட்டுள்ளன. இந்த செயற்கைக்கோள் தனது சுற்று வட்டப் பாதையில் பூமியிலிருந்து 170 கி.மீ. அருகாமையிலும் 35,975 கி.மீ. தொலைவிலும் சுற்றி வரும். இந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள். இந்த ஒற்றை செயற்கைக்கோள், தற்போது பயன்பாட்டில் உள்ள 6 அல்லது 7 தகவல்தொடர்பு செயற்கை கோள்களின் ஒட்டுமொத்த திறனுக்கு இணையானது. இந்த செயற்கைக்கோள் மூலம் இந்தியாவில் இணையதளவேகம் 4 கிகா பைட்ஸ் அளவுக்கு அதிகரிக்கும்.

இந்த வெற்றியின் மூலம் விண்வெளி ஆராய்ச்சியில் இஸ்ரோ புதியமைல்கல்லை எட்டியுள்ளது. இனி வருங்காலங்களில் 4 டன் வரை அதிக எடைகொண்ட செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத் துவதற்கு வெளிநாடுகளை சார்ந்து இருக்கவேண்டிய அவசியம் இல்லை. இதனால் இஸ்ரோவுக்கு ஏற்படும் கோடிக்கணக்கான ரூபாய் செலவு மிச்சமாகும். மேலும், வெளிநாடுகளின் செயற்கைக் கோள்களை வர்த்தக ரீதியாக நம்முடைய ராக்கெட்கள் மூலம் விண்ணில் செலுத்தி வருவாயும் ஈட்டமுடியும்.

இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய விண்வெளி முகமை ஆகியவை மட்டுமே கிரையோஜெனிக் இன்ஜின் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வந்தன. இந்த நாடுகளின் பட்டியலில் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது.

ஜிஎஸ்எல்வி மார்க்-3 டி-1 ராக்கெட்டை விண்ணில் செலுத்தி சாதனைபடைத்துள்ள இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திரமோடி ஆகியோர் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

Tags:

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.