ஜிஎஸ்டி மசோதா விரைவில் நிறைவே ற்றப்படும். உலக முதலீட் டாளர்கள் இந்தியாவில் தொழில்செய்ய எளிதான சூழல்உண்டு என்பதை உறுதியாக கூறிக்கொள்கிறேன்’ என ரியாத்தில் சவுதியின் முன்னணி நிறுவன சி.இ.ஓ.க்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசினார்.

மூன்று நாடுகள் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, தனது பயணத்தின் இறுதி கட்டமாக சவுதி அரேபியா சென்றார். அங்கு, 2ம் நாளாக நேற்று சவுதிமன்னர் சல்மான்பின் அப்துல் அஜீஸ் அல் சவுத்தை சந்தித்து பேசினார். அப்போது இரு நாடுகளுக்கு இடையேயான பலமான உறவை வர்த்தகம், முதலீடு மற்றும் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் என மேலும் பல்வேறு அம்சங்களில் நீட்டிப்பதுகுறித்து இருநாட்டு தலைவர்களும் விரிவான ஆலோசனை நடத்தினர்.சவுதியின் வெளியுறவுத் துறை அமைச்சர் அடில் அல்ஜூபைர், சுகாதாரத் துறை அமைச்சர் காலித் ஏ அல் பாலி ஆகியோரையும் மோடி சந்தித்துபேசினார்.

இந்த பேச்சு வார்த்தையில், சவுதி அரசின் எண்ணெய் நிறுவனமான அரம்கோ, உலகில் முதலீடு செய்வதற்கான முதல்இலக்காக இந்தியாவை கொண்டுள்ளதாக அமைச்சர் காலித் அல் பாலி கூறியதாக வெளியுறவுத் துறை செய்திதொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்துள்ளார். முன்னதாக, பிரதமர் மோடி, சவுதியின் முன்னணி நிறுவன சிஇஓக்கள் மற்றும் இந்திய தொழிலதிபர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:எளிதாக தொழில் செய்யும் சூழல் உள்ள நாடுகள் பட்டியலில், இந்தியாவுக்கு உலக வங்கி 12 இடங்களை உயர்த்தி உள்ளது. அடுத்த பட்டியல் வெளியிடப்படும்போது, இந்தியா மேலும் முன்னேற்றம் காணும் என எதிர்பார்க்கிறேன். இதற்கு காரணம், நாங்கள் மேற்கொண்டுள்ள நிர்வாக மறுசீரமைப்புகளே.

உலக முதலீட்டாளர்கள் இந்தியாவில் தொழில் செய்ய எளிதான சூழல் நிச்சயம் உண்டு. நீங்கள், சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) பற்றி கவலைப்படுகிறீர்கள். அந்த கவலை தேவையில்லை. நிச்சயம் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்படும். அதில் நாங்கள் உறுதியுடன் உள்ளோம். ஆனால் அதற்கு காலக்கெடு எதுவும் என்னால் கூற முடியாது.பின்னோக்கிய வரி விதிப்பு விஷயங்கள் கடந்து போய் விட்டன. தற்போது, நீண்ட காலத்திற்கு நிலையான, கணிக்கக் கூடிய கொள்கைகளை இந்திய அரசு கொண்டுள்ளது. எனவே, சவுதி முதலீட்டாளர்கள் பெட்ரோலியம், மாற்று எரிசக்தி, உள்கட்டமைப்பு மற்றும் ராணுவ தளவாடங்கள் தயாரிப்பு என பல்வேறு துறையிலும் முதலீடு செய்ய முன்வர வேண்டும்.

பாதுகாப்பு துறையில் நாங்கள் அனைத்து தளவாடங்களையும் இறக்குமதி செய்கிறோம். அதை ஏன் நம்மால் இந்தியாவில் தயாரிக்க முடியாது? அதற்கு உங்களின் பங்கு மிக முக்கியமானது.

உலகம் இன்று 2 விஷயங்களில் அச்சுறுத்தலை சந்தித்து வருகிறது. ஒன்று தீவிரவாதம், மற்றொன்று மிகக் கொடூரமான சைபர் தீவிரவாதம். இணைய வழியில் பாதுகாப்பு என்பது மிக அவசியமாகியிருக்கிறது. இதற்கான கண்டுபிடிப்புகளை உருவாக்கும் திறமை இந்தியாவிடம் உள்ளது. அதற்கு நிறைய முதலீடுகள் தேவைப்படுகிறது.எனவே, வாங்குபவர்-விற்பவர் என்ற உறவை தாண்டி, நமது உறவு மேலும் பல வழிகளில் வலுவடைய வேண்டும். இரு நாட்டு மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்குமான புதிய பாதையில் நாம் பயணிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். கடந்த 30ம் தேதி பெல்ஜியம் சென்ற மோடி, பின்னர் 2 நாள் பயணமாக அமெரிக்காவின் வாஷிங்டன் நகருக்கு சென்றார். அங்கிருந்து, 2 நாள் சவுதி பயணத்தை முடித்துக் கொண்ட அவர் நேற்றிரவு நாடு திரும்பினார்.

Tags:

Leave a Reply