தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை – டாக்டர் சவுந்தர ராஜன் தம்பதியரின் மகன் டாக்டர் சுகநாதனுக்கும் கோவையை சேர்ந்த செல்வராஜ் – கோகிலா தம்பதியின் மகள் டாக்டர் திவ்யாவுக்கும் திருமணம் நிச்சயிக்கபட்டு இருந்தது.

இவர்களது திருமணம் நேற்று காலை 10 மணியளவில் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடந்தது. இந்து ஐதீக முறைப்படி திருமணம் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், பா.ஜ.க நிர்வாகிகள், தொண்டர்கள் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். பல்வேறு கோவில்களில் இருந்துகொண்டு வரப்பட்ட பிரசாதங்கள் மணமக்களுக்கு வழங்கப்பட்டது. திருமண விழாவுக்கு காலை 9 மணி முதலே உறவினர்கள், பா.ஜ.க. மாநில மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் வரத்தொடங்கினர். சரியாக காலை 10.30 மணிக்கு திருமணம் நடந்து முடிந்தது. பின்னர், கட்சி தலைவர்கள், பா.ஜ.க. மாநில, மாவட்ட நிர்வாகிகள், உறவினர்கள் மணமக்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.

பா.ஜ.க. சார்பில் அகில இந்திய அமைப்பு பொதுச்செயலாளர் ராம்லால், அமைப்பு துணை பொதுச்செயலாளர் சந்தோஷ், தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் ஆகியோர் மணமக்களை வாழ்த்தினார்கள். மேகாலயா கவர்னர் சண்முகநாதன் மணமக்களை நேரில் வாழ்த்தினார்.

முதல்–அமைச்சர் ஜெயலலிதா சார்பில், தமிழக அரசு அதிகாரிகள் வாழ்த்துசெய்தியையும், பரிசு பொருட்களையும் மணமக்களுக்கு வழங்கினார்கள்.

வரவேற்பு நிகழ்ச்சியில், தி.மு.க. தலைவர் கருணாநிதி நேரில் வந்து பூங்கொத்து கொடுத்து மணமக்களை வாழ்த்தினார். அவருடன், அவருடைய துணைவியார் ராஜாத்தியம்மாள், மகள் கனிமொழி எம்.பி., முன்னாள் எம்.பி. டி.ஆர்.பாலு ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர், தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வந்து மணமக்களை வாழ்த்தினார்.

அதை தொடர்ந்து, டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தந்தையும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான குமரி அனந்தன் மணமக்களை வாழ்த்தினார். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் மற்றும் விஜயதரணி எம்.எல்.ஏ., தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன், மற்றும் மூத்த தலைவர்கள் ஞானதேசிகன், பீட்டர் அல்போன்ஸ், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன், புதிய நீதிக்கட்சி நிறுவனத்தலைவர் ஏ.சி.சண்முகம், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனத்தலைவர் பாரிவேந்தர் ஆகியோரும் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:

Leave a Reply