ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பார்மர்நகரில் இருந்து அரியானா மாநிலத்தில் உள்ள கல்கா நகருக்கு செல்லும் பார்மர்கல்கா எக்ஸ்பிரஸ் ரெயிலில் கோவிந்த் நாராயண் என்பவர் கடந்த சனிக் கிழமை பிக்கானர் நகருக்கு சென்று கொண்டிருந்தார்.

முன்பதிவு செய்யப்பட்டிருந்த இரண்டாம்வகுப்பு பெட்டியில் ஏறிய ஒருடிக்கெட் பரிசோதகர் அங்கு இருந்த அனைவரிடமும் இருக்கைவசதிக்காக தலா 15 ரூபாய் வசூலித்து கொண்டிருந்தார். இதை தட்டிக்கேட்க யாரும்முன்வராத நிலையில் கோவிந்த்நாராயண் மட்டும் துணிச்சலாக அந்த டிக்கெட் பரிசோதகரை எதிர்த்து கேள்விகேட்டார். வாங்கும் பணத்துக்கு உரிய ரசீது தரும்படியும் வலியுறுத்தினார்.

பிக்கானர் நகர்வரை நானும் இதேபெட்டியில் தான் வரப்போகிறேன். உங்கள் எல்லோருக்குமாக சேர்த்து அப்புறமாக ஒரே ரசீதாக போட்டுத்தருகிறேன் என அந்த டிக்கெட் பரிசோதகர் ‘வாயடி’ அடித்தார்.

‘இது வேலைக்கு ஆகாது’ என்று தீர்மானித்த கோவிந்த் நாராயண், உடனடியாக தனது டுவிட்டர்பக்கத்தின் மூலம் டிக்கெட் பரிசோதகரின் இந்த அடாவடிதொடர்பாக ரெயில்வேதுறை மந்திரி சுரேஷ் பிரபு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜோத்பூர் வட்டார ரெயில்வேத் துறை மேலாளர் ஆகியோருக்கு ‘டுவீட்’ செய்தார்.

அடுத்த சிலநிமிடங்களில் உங்களது புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என ரெயில்வே அமைச்சகத்தில் இருந்து அவருக்கு பதில்வந்தது. அதைதொடர்ந்து, அவரது கைபேசியை தொடர்புகொண்டு பேசிய ரெயில்வே உயரதிகாரிகள் லஞ்ச ஒழிப்புத் துறையினரை உடனடியாக அனுப்பிவைத்தனர்.

ஜோத்பூர் நகரில் அந்த ரெயில்பெட்டியில் ஏறிய லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அந்த டிக்கெட் பரிசோதகரிடம் இருந்த ரசீது புத்தகங்கள் மற்றும் கைவசம் இருந்தபணம் ஆகியவற்றை சோதனையிட்டு சரிபார்த்த போது, அவர் வசமாக சிக்கிக்கொண்டார்.

இந்த சோதனையின் விபரங்கள் உடனடியாக டுவிட்டர் மூலம் ஜோத்பூர் வட்டார ரெயில்வேத் துறை மேலாளருக்கு தெரிவிக்கப்பட்டது.

ஷியாம்பால் என்ற அந்த டிக்கெட் பரிசோதகரை உடனடியாக இடைக் கால பணிநீக்கம் செய்யும்படி அவர் டுவிட்டர் மூலமாக உத்தரவிட்டார். இதையடுத்து, பணியில் இருந்து சஸ்பெண்ட்செய்யப்பட்ட அவர் அடுத்த நிலையமான மெர்ட்டாவில் ரெயிலில் இருந்து கீழே இறக்கிவிடப்பட்டார்.

Leave a Reply