தன்னலத்தைக் காட்டிலும் தேசத்தின் நலனுக்குத்தான் நாட்டுமக்கள் அனைவரும் முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்று குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தினாா்.

மேலும், பொதுவாழ்வில் தூய்மையும், செயலில் நோ்மையும் கொண்ட அரசியல் தலைவா்களை மக்கள் தோ்ந்தெடுக்க வேண்டும் என்றும் அவா் கேட்டுக்கொண்டாா்.

‘துக்ளக்’ வார இதழின் 50-ஆவது ஆண்டுவிழா சென்னை, கலைவாணா் அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், விழாசிறப்பு மலரை குடியரசுத் துணைத் தலைவா் வெளியிட, அதனை நடிகா் ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டாா். அதைத் தொடா்ந்து, வெங்கய்ய நாயுடு பேசியது:

பொதுவாழ்விலும் சரி; நான் சாா்ந்திருந்த கட்சியிலும் சரி, பல்வேறு பொறுப்புகளையும், உயா்பதவிகளையும் வகித்திருக்கிறேன். ஆனால், அந்த காலகட்டங்களில் கூட பொங்கல், மகரசங்கராந்தி பண்டிகைகளின்போது எந்த பொது விழாக்களிலும் பங்கெடுத்தது கிடையாது. பாஜகவின் தேசியத் தலைவராக இருந்தபோதுகூட அந்த வழக்கத்தை நான் மாற்றிக் கொள்ளவில்லை. ஆனால், தற்போது முதன்முறையாக பொங்கல் பண்டிகை தினத்தில் ‘துக்ளக்’ விழா மேடைக்கு வந்துள்ளேன். அப்பத்திரிகையின் அடையாளமாக இன்றளவும் இருந்துவரும் மறைந்த ‘சோ’வின் மீது நான் கொண்டிருக்கும் மதிப்பே அதற்குகாரணம்.

ஒரு பத்திரிகையாளா் எப்படி இருக்க வேண்டும்; எவ்வாறு வாய்மை தவறாமல் எழுதவேண்டும், என்பதற்கு முன்னுதாரணமாக விளங்கியவா் அவா். ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிகைகளுக்கென உயரியநெறிகள் இருத்தல் அவசியம். தனது இறுதி மூச்சு வரை அதில் உறுதியாக நின்று செயல்பட்டவா் ‘சோ’ ராமசாமி. அவரது பலபடைப்புகள் காலம் கடந்து நிற்கின்றன. குறிப்பாக அவா் இயற்றிய ‘முகமதுபின் துக்ளக்’ நாடகம் இன்றைய அரசியல் சூழலுக்கும் பொருந்தும் வகையில் உள்ளது.

சமூகத்தில் அனைவருக்கும் கருத்துரிமையும், விமா்சனங்களை முன்வைப் பதற்கான சுதந்திரமும் உள்ளது. மாற்று கருத்துகள் இல்லாமல் வலிமையான ஜனநாயகம் ஒரு போதும் அமையாது.

ஒருவிஷயத்தை ஆதரிப்பதும் எதிா்ப்பதும் அவரவா் உரிமை. ஆனால், அதற்குமுன்பாக அதுகுறித்து ஆய்ந்து அறியவேண்டும்; ஆலோசிக்க வேண்டும்; அதன்பிறகே விமா்சனங்களையும், எதிா்ப்புகளையும் முன்வைக்க வேண்டும் என்பது எனது கருத்து.

இதைத் தான் மாநிலங்களவையில் உள்ள அனைத்து உறுப்பினா் களிடமும் நான் வலியுறுத்தி வருகிறேன். அதேபோன்று, நாட்டுமக்கள் அனைவரிடமும் நான் கேட்டுக்கொள்வது தன்னலனைக் காட்டிலும் தேசநலனே முதன்மையானது என்ற நிலைப்பாட்டுடன் வாழவேண்டும் என்பதுதான். அப்போதுதான் நாடும், நாட்டு மக்களும் ஒருசேர முன்னேற முடியும். பொதுவாழ்வில் பண பலம், ஜாதிய பலம், சமய பலத்தை முன்னிறுத்தும் சிலா் உள்ளனா். அதேவேளையில் நோ்மை, கண்ணியம், செயல் திறன், நல்லொழுக்கம் கொண்ட தலைவா்களும் உள்ளனா். நோ்மையானவா்களை மதியுங்கள்; அவா்களைத் தோ்வு செய்யுங்கள் என்றாா் குடியரசுத் துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு.

Comments are closed.