தமிழகத்தில் அரசியலும், கருப்புபணமும் ஒன்றாக கலந்துள்ளதாக தமிழக பா.ஜனதா பொறுப்பாளர் முரளிதரராவ் கூறினார்.

தமிழக பா.ஜனதா பொறுப்பாளர் முரளிதர ராவ் மற்றும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டிஅளித்தனர். அப்போது முரளிதரராவ் கூறியதாவது:–

தமிழ்நாட்டில் அரசியல் மற்றும் கருப்புபணம் இரண்டும் ஒன்றாக கலந்துள்ளது. இதுபோன்று வேறு எந்தமாநிலத்திலும் இல்லை. அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை வினியோகிக்கும் பழக்கம் இங்குள்ள அரசியல் கட்சிகளிடம் அதிகளவில் உள்ளது. இதனால் தான் மத்திய அரசின் புதிய உத்தரவை (ரூபாய் நோட்டு விவகாரம்) அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள் ஒன்றாக எதிர்க்கின்றன.

1947–ம் ஆண்டுக்கு பிறகு இந்திய பொருளாதாரத்தில் இதுபோன்ற ஒருபெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டது இல்லை. இந்தமுடிவால் ரூபாய் நோட்டு பற்றாக்குறை காரணமாக மக்கள் பெருமளவில் சிரமப்பட்டாலும், நாட்டு நலன் கருதி பொறுமையுடன் அனைத்து பிரச்சினைகளையும் எதிர்கொண்டனர்.

மக்களின் முழு ஒத்துழைப்பின்றி இதுசாத்தியம் இல்லை. பிரதமர் மோடி மக்களின் தனித்த ஆதரவுபெற்ற தலைவராக திகழ்கிறார். காங்கிரஸ் கட்சி இதுபோன்ற ஒரு துணிச்சலான முடிவை எப்போதும் எடுத்ததில்லை. டிசம்பர் 31–ந்தேதிக்கு பிறகு நாட்டில் எவ்வளவு கருப்புபணம் இருந்திருக்கிறது? என்ற விவரம் தெரிய வரும்.

இந்த பிரச்சினையில் அரசுடன் துணைநின்று, மின்னணுவங்கி முறை குறித்த பயிற்சி மற்றும் பிரசார கூட்டங்களுக்கு பா.ஜனதா ஏற்பாடு செய்யும். இந்தமின்னணு வங்கி முறை செயல்பாட்டுக்கு வந்தபிறகு நாட்டில் தற்போதுள்ள பிரச்சினைகள் பெருமளவு குறையும்.

பணத்தை அதிகமாக பதுக்கிவைப்பது குறித்த குற்றச் சாட்டுகள் பா.ஜனதா கட்சியினர் மீதுவந்தாலும் அதுபற்றி புலனாய்வு செய்யப்படும்.

ஜல்லிக்கட்டு குறித்த முழுபுரிதல் உணர்வு சுப்ரீம் கோர்ட்டுக்கு உண்டாகவேண்டும் என்று இறைவனை வேண்டுகிறோம். இது குறித்து கோர்ட்டு புரிந்துகொள்ளும் என்று நான் நம்புகிறேன்.

 

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், ‘மாத சம்பளம் வாங்குகிறவர்களின் பிரச்சினை மத்திய அரசுக்குதெரியும். எனவே அதற்கேற்றவாறு பணம் அதிகளவில் புழக்கத்தில் விடப்படும்’ என்றார்.

இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறும் என்ற முழுமையான நம்பிக்கை தனக்குள்ளதாக கூறிய பொன்.ராதாகிருஷ்ணன், இதுதொடர்பான வழக்கு நாளை (இன்று) சுப்ரீம்கோர்ட்டில் விசாரணைக்கு வருவதாகவும், நீதிமன்ற நடவடிக்கைக்கு பிறகு அடுத்தகட்டம் பற்றியோசிப்போம் எனவும் தெரிவித்தார்

Leave a Reply