தமிழகத்தில் ஐஎஸ். தீவிரவாதிகள் ஊடுருவலுக்கு போலீசாரின் செயலற்றதன்மையே காரணம் என்று, திருப்பூரில் நடந்த பாஜக மாநிலசெயற்குழு கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப் பட்டது. தமிழக பாஜக சார்பில் அக்கட்சியின் மாநிலசெயற்குழு கூட்டம் திருப்பூரில் கடந்த 2 நாளாக நடந்தது. மாநில தலைவர் தமிழிசை செளந்திர ராஜன் தலைமை வகித்தார். கூட்டத்தில், மத்திய கப்பல் மற்றும் போக்குவரத்து துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய கயிறுவாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா, தேசிய செயற்குழு உறுப்பினரும் எம்.பி.யுமான இல.கணேசன், மாநில பொதுச் செயலாளர்கள் வானதி சீனிவாசன், நரேந்திரன், சரவண பெருமாள், முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:  


* காவிரி நதியிலிருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீரை முறைப்படி தமிழகத்திற்கு பெற்றுத்தர தமிழக பாரதிய ஜனதா தீவிர நடவடிக்கை எடுக்கிறது.


* முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைய  இறைவனை பிரார்த்திக்கிறது.


* ஐ.எஸ். அமைப்பினர் தமிழகத்திலும் ஊடுருவ காவல்துறை மற்றும் புலனாய்வுத் துறையின் செயலற்ற தன்மைையே காரணம்.


* தமிழகத்தில் இந்து இயக்கங்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் குறிவைத்து கொலை செய்யப்படுவதும், தாக்கப்படுவதும் தொடர்கிறது. கொலை மற்றும் தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, அரசியல் ஆதாயத்திற்காக அவர்கள் காக்கப்படுகிறார்கள். போலீசார் இத்தகைய மெத்தன போக்கை கைவிட்டு உரியநடவடிக்கை எடுக்கவேண்டும்.


* ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக அறிவிக்கப்பட்ட சென்னை, கோவை, மதுரை, தஞ்சாவூர், சேலம் உள்ளிட்ட மாநகராட்சிகளில் தமிழக அரசு பணிகளை துவக்க வேண்டும். இவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave a Reply