என்னை போன்ற கட்சி நிர்வாகிகளுக்கு இன்றைய தினம் மகத்தான நாள் ஆகும். நம்முடைய எதிர்ப் பாளர்கள் ‘தமிழகத்தில் பாஜக. எங்கே இருக்கிறது?’ என்று கிண்டலும், கேலியும்செய்கிறார்கள். 2019 மார்ச் மாதத்தில் பா.ஜ.க. எங்கே இருக்கிறது? என்பதை அவர்கள் தெரிந்துகொள்வார்கள்.

 

இந்த நிகழ்ச்சிக்கு நான்வருவதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். விருந்தினருக்கு விருந்தோம்பல் செய்து அடுத்த விருந்தினர் களுக்காக யார் காத்திருக்கிறார்களோ அவர்களுக்கு சொர்க்கத்தில் இடம்கிடைக்கும் என்று திருவள்ளுவர் கூறி இருப்பதை அவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

 

இங்கே கூடிஇருக்கும் 15 ஆயிரம் சக்திகேந்திரா பொறுப்பாளர்களை பார்த்து நான் சொல்கிறேன், 2019–ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் மிகப் பெரிய வலிமைமிக்க கட்சியாக பாஜக. வெற்றிபெறும்.

 

நரேந்திர மோடி அரசாங்கமானது மேம்பாட்டுக்காக செய்து இருக்கின்ற சேவை, நாட்டின் பாதுகாப் புக்காக செய்து இருக்கின்ற பணி ஆகியவற்றால் பா.ஜ.க. மேலும் மேலும் வளர்ச்சிகொண்டு 19 மாநிலங்களில் ஆட்சிக் கொண்டு இருக்கிறோம். 11 கோடி உறுப்பினர்களுடன், 330–க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், 1,700–க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள், அதிகளவில் மேயர்கள், தாலுகா மற்றும் பஞ்சாயத்து தலைவர்கள் என மகத்தான கட்சியாக பா.ஜ.க. இருக்கிறது.

 

மோடி அரசாங்கம் தமிழகத்தின் மேம்பாட்டுக்காக தொண்டுசெய்யும் அரசாங்கமாக இருந்து கொண்டு இருக்கிறது. 70 ஆண்டுகளில் இதற்கு முந்தைய அரசாங்கம் செய்யாததை மோடி அரசாங்கம் இந்த 4 ஆண்டுகளில் செய்து இருக்கிறது.

 

இதற்கு முன்பு 10 ஆண்டுகளாக ஐக்கியமுற்போக்கு கூட்டணி (காங்கிரஸ்–தி.மு.க.) 13–வது நிதிநிலை அறிக்கையில் தமிழகத்துக்கு ரூ.94 ஆயிரத்து 540 கோடி வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மோடி தலைமையிலான ஆட்சியில் 14–வது நிதிநிலை அறிக்கையில் தமிழகத்துக்கு ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 96 கோடி ரூபாய் கொடுக்கப் பட்டு இருக்கிறது. ஒருலட்சத்து 4 ஆயிரம் கோடி ரூபாயை தமிழகத்துக்கு அதிகமாக தந்து இருக்கிறது.

 

தமிழகத்துக்கு சொட்டு நீர்பாசன திட்டத்துக்காக ரூ.332 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ திட்டத்துக்காக ரூ.2,875 கோடி ஒதுக்கி இருக்கிறது. சென்னை மோனோரெயில் திட்டத்துக்காக ரூ.3,267 கோடி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. சுதந்திரத்துக்கு பின்பு தமிழகத்தில் முதன்முறையாக 3,200 கி.மீ. ரெயில்வே இருப்புப்பாதை திட்டங்களுக்காக ரூ.20 ஆயிரம் கோடி தரப்பட்டு இருக்கிறது.

 

2017–ம் ஆண்டு தமிழகத்தில் வறட்சி ஏற்பட்ட போது, ரூ.1,750 கோடியும், வர்தா புயல் வந்தபோது இழப்பீடு தொகையாக ரூ.256 கோடியும், பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்துக்காக 1,445 திட்டங்கள் மூலமாக ரூ.3,670 கோடியும் தரப்பட்டுள்ளது. ஸ்மார்ட்சிட்டி திட்டத்துக்காக ரூ.820 கோடி தரப்பட்டு இருக்கிறது. மதுரை எய்ம்ஸ் மருத்துவ மனைக்காக ரூ.1,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

 

தஞ்சாவூர், நெல்லை மருத்துவ கல்லூரிகளுக்காக ரூ.250 கோடியும், அம்ரூத் திட்டங்களுக்காக 33 நகரங்களுக்கு ரூ.3,300 கோடியும், தேசிய நெடுஞ் சாலைக்காக ரூ.23 ஆயிரத்து 700 கோடியும், பாரத்மாலா திட்டத்துக்காக ரூ.40 ஆயிரத்து 500 கோடியும், மத்திய சாலை திட்டத்துக்காக ரூ.2,100 கோடியும், மாநிலங்களை இணைப் பதற்காக ரூ.200 கோடியும், இனையம் துறைமுகத் துக்காக ரூ.28 ஆயிரம் கோடி உள்பட மொத்தம் 4 ஆண்டுகளில் மோடி அரசாங்கம் 5 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் தமிழகத்துக்கு தந்துஇருக்கிறது.

 

முத்ரா வங்கி கடன் திட்டத்துக்காக 62 ஆயிரம் கோடி ரூபாய் கடனாக வழங்கப்பட்டு இருக்கிறது. பிரதம மந்திரி பயிர்காப்பீடு திட்டத்திலே ரூ.2,400 கோடி பயிர் காப்பீடு தொகை கொடுக்கப்பட்டுள்ளது.

 

உஜ்வாலா திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 17 லட்சம் தாய்மார்களுக்கு இலவச கியாஸ் இணைப்பு தரப்பட்டு இருக்கிறது. பிரதம மந்திரி வங்கி கணக்கு திட்டம் மூலம் 19 லட்சம் பேருக்கு வங்கி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. 28 ஆயிரம் குடும்பங்களுக்கு எல்.இ.டி. விளக்குகள் தரப்பட்டுள்ளன. மேலும் சிறு சிறு திட்டங்களுக்காக ரூ.1,370 கோடி நிதியை தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கி இருக்கிறது.

 

எங்களை எதிர்ப்பவர்கள் இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த போது என்ன செய்தீர்கள்? என்பதை தமிழக மக்களுக்கு சொல்ல வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

 

4 ஆண்டுகளில் மோடி அரசாங்கம் செய்ததிட்டங்களை, 70 ஆண்டுகள் ஆட்சி செய்த பிற அரசாங்கம் செய்யவில்லை. மோடி அரசாங்கம் சாதிவாத, வாரிசு அரசியலையும், ஊழலையும் முடிவுக்கு கொண்டு வந்து இருக்கிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிசெய்த 10 ஆண்டுகளில் 12 லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்தது. பெரிய பொறுப்புகளில் இருந்தவர்கள் சிறைச்சாலைக்கு சென்றார்கள். ஆனால் இந்த 4 ஆண்டுகளில் பா.ஜ.க.வின் எதிர்ப்பாளர்கள் கூட பா.ஜ.க. மீது ஒருஊழல் குற்றச்சாட்டையும் சொல்ல முடியாது.

 

பா.ஜ.க. அரசாங்கம் எங்கெல்லாம் அமைந்து இருக்கிறதோ? அங்கெல்லாம் ஊழலை முடிவுக்கு கொண்டுவரும் பணியிலே இறங்கி இருக்கிறோம். குஜராத், ராஜஸ்தான், மணிப்பூர், ஜார்க்கண்ட், உத்தர பிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் ஊழலை விரட்டி இருக்கிறோம்.

 

ஆனால் தமிழ்நாட்டை பற்றி நினைக்கும் போது, என் இதயத்தில் வருத்தம் ஏற்படுகிறது. நாட்டிலேயே அதிகமாக ஊழல் இருக்கின்ற மாநிலமாக தமிழ்நாடு இருந்துகொண்டு இருக்கிறது. தமிழகத்தில் கூட ஊழல் இல்லாத ஆட்சியை கொண்டு வருவதற்காக நாம் உறுதிகொள்ள வேண்டும்.

 

சட்டமன்ற தொகுதி யாகவோ, மாவட்டமாகவோ, தாலுகாவாகவோ இருக்கட்டும். எல்லா பகுதிகளில் இருந்தும் ஊழலை நாம்வெளியேற்றும் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபடவேண்டும்.

 

தமிழகத்தில் இதற்கு முன்பு நம் நிர்வாகிகள் பலர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இதற்கு எதிராகவும் நாம் போராடவேண்டும். தமிழகத்திலே ஒரு பொய் பிரசாரம் உருவாக்கப்பட்டு வருகிறது. ஆனால் தமிழ் மொழியின் பெருமையை வளர்க்க, பாதுகாக்க பா.ஜ.க. போல எந்த கட்சியும் தீவிரமாக இல்லை.

 

பாஜக. ஆட்சியில்தான் ரெயில் டிக்கெட்டுகளில் தமிழ்மொழி அச்சிடப்பட்டு இருக்கிறது. இது பெருமை இல்லையா?

 

எப்போது தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வருகிறதோ, அப்போது தமிழின் பெருமையை உலகறிய செய்வோம்.செப்டம்பர் மாதத்துக்கு பிறகு கூட்டணி குறித்து முடிவு எடுப்போம். சட்ட–ஒழுங்கு நிலை நாட்டுதல், ஊழல் ஒழிப்பு உள்ளிட்டவை அடிப்படையில் தமிழகத்தில் பா.ஜ.க.வின் கூட்டணி அமையும். அந்த வலிமையான கூட்டணி ஒருதூய்மையான நல்லாட்சியை தருவதாக அமையும். முன்பு காங்கிரஸ் மத்தியில் இருந்தபோது நாட்டின் தன்மானம் வீழ்ச்சியில் இருந்தது. தற்போது இந்தியாவின் பெருமை மோடியின் மூலம் உலகம் அறியப்பட்டு வருகிறது.

 

இதேநிலை 2019–க்கு பிறகும் தொடர வேண்டும். மீண்டும் மோடியின் தலைமையிலான ஆட்சியை நாட்டில் அமைக்க அனைவரும் உறுதி எடுக்க வேண்டும். மோடியின் தலைமையிலான ஆட்சியை நாம் மீண்டும் கொண்டுவர வேண்டும். அதை இந்த உலகுக்கு இன்று உரக்கசொல்லுங்கள். வந்தே மாதரம்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் வி.ஜி.பி. கடற்கரை அரங்கில் மகா சக்தி, சக்தி கேந்திரம் நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டம் திறந்த வெளி அரங்கில் நடைபெற்றது. அந்த கூட்டத்துக்கு பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா தலைமை தாங்கினார். அதில் அவர் பேசியது.

Leave a Reply