தமிழகத்தில் பாஜக மாவட்ட அலுவல கங்களுக்கு சொந்த கட்டிடங்கள் கட்டுவதற்காக ரூ.60 கோடியை அகில இந்திய தலைமை வழங்கியுள்ளது.

நாடு முழுவதும் அனைத்து மாவட்ட கட்சி அலுவலகங்களுக்கும் சொந்தக் கட்டிடங்கள் கட்டப்படும் என அமித்ஷா அறிவித்திருந்தார் . அதன்படி, நாடுமுழுவதும் ஆயிரத்துக்கும் அதிகமான பாஜக மாவட்ட அலுவலகங்களுக்கு சொந்தமாக இடம்வாங்கி கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. பெரும்பாலான மாநிலங்களில் 100 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளன.

தமிழகத்தில் பாஜக கட்சி ரீதியாக 49 மாவட்டங்கள் உள்ளன. இதில் தென்சென்னை, கன்னியாகுமரி தவிர மற்ற மாவட்ட அலுவலகங்களுக்கு சொந்த கட்டிடங்கள் இல்லை. எனவே, மற்ற மாவட்ட அலுவலகங்களுக்கு சொந்தக் கட்டிடங்கள் கட்ட அகில இந்தியதலைமை ரூ.60 கோடியை வழங்கியுள்ளது. ஒவ்வொரு மாவட்ட அலுவலகத்துக்கும் ரூ.1 கோடி முதல் ரூ.1 கோடியே 25 லட்சம்வரை வழங்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்காக மாநில அளவில் பொறுப்பாளராக எம்.சக்கரவர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ‘தி இந்துவிடம் கூறியதாவது:

அமித்ஷாவின் திட்டப்படி 49 மாவட்ட அலுவலகங்களுக்கும் சொந்த கட்டிடங்கள் கட்ட தலா ரூ.1.25 கோடியை தேசியதலைமை வழங்கியுள்ளது. குறைந்தது 5 ஆயிரம் சதுர அடியில் அலுவலகம் அமைக்கவேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இந்தத் தொகையை கொண்டு முதலில் இடம்வாங்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.

இதுவரை திருவண்ணாமலை, பெரம்பலூர், விருதுநகர், தஞ்சாவூர் ஆகிய 4 மாவட்டங்களில் இடம்வாங்கப்பட்டு பத்திரப்பதிவு முடிந்துள்ளது. தருமபுரி, வேலூர், திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு, நாகை, சிவகங்கை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இடங்கள் வாங்கப்பட்டுள்ளன. அடுத்த வாரத்தில் பத்திரப்பதிவு முடிய உள்ளது.

மீதமுள்ள மாவட்டங்களில் இடம் வாங்குவதற்கான பேச்சு வார்த்தை முடியும் தருவாயில் உள்ளது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு காரணமாக பல இடங்களில் பத்திரப்பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அடுத்த 3 மாதங்களில் அனைத்து மாவட்டங்களுக்கும் இடங்கள் வாங்கப்பட்டு பத்திரப்பதிவை முடித்துவிடுவோம்.

சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம் போன்ற மாநகரங்களில் நிலத்தின்விலை அதிகமாக இருப்பதால் கூடுதல் தொகையை வழங்குமாறு அமித் ஷாவிடம் கேட்டுள்ளோம். ஒவ்வொரு அலுவலகத்துக்கும் கட்டிடம் கட்ட குறைந்தது ரூ.2 கோடி செலவாகும். மீதமுள்ள தொகையை கட்சிஆதரவாளர்கள், பொது மக்களிடம் இருந்து திரட்ட இருக்கிறோம்.

இதற்காக மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம், மாநிலப்பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். மாவட்டத் தலைவர்கள் தலைமையில் மாவட்ட அளவிலும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு சக்கரவர்த்தி கூறினார்.

Leave a Reply