”தமிழகத்தில், ராணுவ பாதுகாப்பு கவசஆடைகள் மற்றும் உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை துவங்கப்படும்,” என, ரஷ்ய துணைதுாதர் தெரிவித்தார்.

சென்னையில் நேற்று, ரஷ்யாவுக்கான தென்இந்திய துணை துாதர் ஓ.அவ்தீவ் அளித்த பேட்டி: ரஷ்யாவில் நடந்த உச்சிமாநாட்டில், ரஷ்யா அதிபர் புடின், இந்திய பிரதமர் மோடி பங்கேற்று, இருநாட்டு உறவுகள் குறித்தும், பல்வேறு துறைகளில் வாய்ப்புள்ள கூட்டுமுயற்சிகள் குறித்தும் விவாதித்தனர்.

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அணுமின் நிலையத்தில், இரண்டு அலகுகள் அமைக்கப்பட்டு, மின் உற்பத்தி நடக்கிறது; மூன்று மற்றும் நான்காவது அலகு அமைப்பதற்கான கட்டுமானபணிகள் நடக்கின்றன. இதன் வாயிலாக, தமிழகம் மின் மிகை மாநிலமாக திகழ்கிறது. அடுத்த, 20 ஆண்டுகளில், ரஷ்ய வடிவமைப்பின் படி, மேலும், 12 மின் உற்பத்தி திட்டங்கள் அமைக்க இலக்கு நிர்ணயிக்க பட்டுள்ளது.

விண்வெளி ஆராய்ச்சியை பொறுத்தவரை, ரஷ்ய நாட்டின் விண்வெளி நிறுவனமான, ‘ரோஸ்காஸ்மாஸ்’ மற்றும் இந்திய நாட்டின், ‘இஸ்ரோ’ இணைந்து செயல்படுகின்றன. செயற்கைக் கோள் திட்டங்கள், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவது குறித்து, இருநாட்டு தலைவர்களும் விவாதித்துள்ளனர்.

நாட்டின் வளர்ச்சிக்கான எல்லையாக, விண்வெளி இருக்கும் என கருதப்படுவதால், இந்திய – ரஷ்ய வர்த்தக மற்றும் தொழில்கூட்டமைப்பு சார்பில், இந்தியாவைச் சேர்ந்த, 56 மாணவர்கள், ரஷ்யாவிற்கு சென்றனர். இவர்கள், ரஷ்யாவின் மூன்று முக்கிய நகரங்களில் உள்ள விண்வெளி அருங்காட்சியகங்களையும், அங்குள்ள விண்வெளி பயண பயிற்சி மையங்களையும் பார்வையிட்டனர். இதில், ஏழு மாணவர்கள், விண்வெளி பயணம் மேற்கொள்ள தேர்வாகியுள்ளனர்.

இந்திய – ரஷ்ய வர்த்தகசபை சார்பில், ராணுவ பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் குண்டு துளைக்காத ஆடைகள் தயாரிக்கும் தொழிற்சாலை, தமிழகத்தில் துவங்கப்பட உள்ளது. இதற்கான குழுவினர், ரஷ்யாசென்று வந்துள்ளனர். வரும் பிப்ரவரி மாதத்தில், ரஷ்ய குழுவினர், தமிழகம் வருகின்றனர். இருகுழுவினரும் இணைந்து, தமிழகத்தில் தொழிற்சாலை துவங்க, இடம் தேர்வு செய்ய உள்ளனர்; விரைவில், தொழிற்சாலை துவங்கப்படும். இதனால், இந்தியாவின் எதிர்காலம் வளமிக்கதாக அமையும்.இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.