தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட தமிழிசை சவுந்திரராஜன்  கடந்துவந்த பாதையில் உழைப்பும், திறமையும் இருந்தது என்பதை யாராலும் மறுக்கமுடியாது.

அவர் கடந்த 1961-ஆம் ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தார்.அவரது தந்தை  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குமரி அனந்தன் முன்னாள் எம்பியாகவும் இருந்துள்ளார். தமிழிசை சவுந்திரராஜன் சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்றார். இதையடுத்து எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில் மகப்பேறு மருத்துவம்படித்தார்.

அவர் கனடாவில் சோனாலஜி மற்றும் எஃப்இடி தெரபிபயின்றுள்ளார். கனடாவுக்கு செல்வதற்கு முன்னர் தமிழிசை ராமசந்திரா மருத்துவக் கல்லூரியில் உதவிபேராசிரியராக 5 ஆண்டுகள் பணியாற்றினார். அது போல் பல்வேறு மருத்துவ மனைகளுக்கு மருத்துவ ஆலோசகராக இருந்தார்.

இவரது கணவர் சவுந்திரராஜனும் மருத்துவர். இவர் சவீதா பல்கலைக் கழகத்தில் சிறு நீரகவியல் நிபுணராக உள்ளார். தமிழிசைக்கு அரசியல் மீது சிறு வயது முதல் ஆர்வம் இருந்துவந்தது. சென்னை மருத்துவ கல்லூரியிலும் மாணவர்கள் தலைவராக அவர் தேர்வுசெய்யப்பட்டார்.

பாஜகவின் சித்தாந்தம் பிடித்துபோகவே அவர் பாஜகவில் இணைந்து முழு நேர அரசியல்வாதியானார். இதையடுத்து 1999-ஆம் ஆண்டு தென்சென்னை மாவட்ட மருத்துவ அணி தலைவராக தமிழிசை நியமிக்கப்பட்டார். அதுபோல் கடந்த 2001-ஆம் ஆண்டு மருத்துவ அணியின் மாநில பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்

பின்னர் 2007-ஆம் ஆண்டு மாநில பொதுச்செயலாளராகவும் 2010-ஆம் ஆண்டு மாநில பாஜக துணை தலைவராகவும் பின்னர் கடந்த 2013-ஆம் ஆண்டு தேசிய செயலாளராகவும் பதவி உயர்வுகளை பெற்றார்.

இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப் பட்டார். அவரது பதவிக்காலம் முடிவடைந்தவுடன் அப்பதவிக்கு அவரேமீண்டும் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் வரும் டிசம்பர் மாதம் அவரது பதவிக்காலம் முடிவடைகிறது.

இந்தநிலையில் அண்மையில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுகவின் கனிமொழியை எதிர்த்து போட்டியிட்ட தமிழிசை தோல்விஅடைந்தார். கடும் உழைப்பாளியான தமிழிசைக்கு தெலுங்கானா மாநில ஆளுநர் பதவியை பாஜக அளித்துள்ளது. அதுபோல் 2009-ஆம் ஆண்டு வடசென்னை எம்பி தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பெண்களின் உரிமைக்காகவும் பாதுகாப்புக் காகவும் பாடுபட்டார். தமிழகத்துக்கு பெருமை சேர்த்த தமிழிசையை வாழ்த்துவோம்.

Comments are closed.