உலகம் முழுவதும் வாழும் தமிழகமக்கள் தமிழ் புத்தாண்டினை இன்று உற்சாகமாக கொண்டாடினர்.விளம்பி தமிழ் புத்தாண்டு இன்று பிறந்துள்ளதை முன்னிட்டு ஏராளமானோர் வீடுகளில் கனிகளை அலங்கரித்து சாமி கும்பிட்டனர். கோவில்களில் இறைவனை வழிபட்டு புத்தாண்டினை மகிழ்ச்சிகரமாக தொடங்கினர்.

ஒருவருடத்தின் தொடக்கம் என்பது மகிழ்ச்சியானதாக இருக்கவேண்டும். தொடக்கம் சரியாக இருந்தால் அந்தவருடம் முழுவதும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும் என்பது நம்பிக்கை.

சித்திரை முதல் நாளான தமிழ் வருடப் பிறப்பும் மகிழ்ச்சிகரமானதாக இருக்க வேண்டும் என்பதற்காகவே வீட்டில் கனி காணுதலோடு புத்தாண்டை தொடங்குகின்றனர்.

வாழைப்பழம், மாம்பழம், ஆரஞ்சு, கொய்யா, ஆப்பிள், மாதுளை இப்படி பல வகை பழங்களை ஒரு தட்டில் வைத்து அலங்கரித்து மையப்பகுதியில் புதியரூபாய் நோட்டுக்களை வைத்து, அதன் மேல் தங்க, வெள்ளி நகைகளை வைத்து அலங்கரித்திருந்தனர்.

தமிழ் புத்தாண்டுக்கு முதல்நாள் இரவு பூஜை அறையில் ஒருகண்ணாடியை வைத்து அதன் முன்பாக இந்த பழத்தட்டினை வைத்து அலங்கரித்து விடிந்த உடன் குழந்தைகளின் கண்களை மூடி அழைத்துசென்ற அம்மா அந்த பழத்தட்டிலும், கண்ணாடியிலும் விழிக்கவைப்பது வழக்கம். இப்படி மங்கல பொருட்களைப் பார்ப்பதன் மூலம் ஆண்டு முழுவதும் மகிழ்ச்சி அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

தமிழ்நாட்டில் கேரளாவை ஒட்டியுள்ள பகுதிகளில் இந்த கனிகாணுதல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுகிறது. கன்னியாகுமரி, நாகர்கோவில், திருப்பூர், கோவையில் தமிழ்புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் கனி காணுதல் நடைபெற்றது. அதிகாலை முதலே கோவில்களில் ஏராளமானோர் இறைவனை வழிபட்டு புத்தாண்டினை உற்சாகமாக தொடங்கினர்.

தமிழ் புத்தாண்டு தினமான இன்று கோவில்களிலும் வீடுகளிலும் பூஜை அறையில் வைத்தபணத்தை பலருக்கும் கொடுத்து மகிழ்ந்தனர். கை நீட்டம் என்று கூறப்படும் இந்தபழக்கம் மலையாள மக்களிடம் இருந்து வந்ததுதான் என்றாலும் அன்றைய தினம் கனி காணுதலையும், கை நீட்டம் நிகழ்ச்சியையும் பார்க்கும் போது தமிழ்புத்தாண்டு தினம் உற்சாகத்தைத்தான் தருகிறது.

தமிழகம் முழுவதும் தமிழ் புத்தாண்டு தினம் சிறப்பாக கொண்டாடப் பட்டது. சென்னையில் வடபழனி முருகன் கோவில், கபாலிஸ்வரர் கோவில், திருவேற்காடு கருமாரியம்மன் கோவில்,மாங்காடு காமாட்சியம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கீழப்பாவூர் ஸ்ரீ ருக்குமணிசத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கோவிலில் சித்திரைவிசுவை முன்னிட்டு கனி காணுதல்வைபவம் நடைபெற்றது. காசுகளை கை நீட்டமாக குழந்தைகள் உட்பட அனைவருக்கும் பெரியோர்களும் வழங்கினர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், தமிழ்புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, உண்ணா முலையம்மன் சமேத அண்ணாமலையாருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப் பட்டது.
அண்ணாமலையார் கோயில் வழக்கப்படி, பால்பெருக்கு நிகழ்ச்சியும், மூன்றாம் பிரகாரத்தில் உள்ள சம்மந்த விநாயகர் சன்னதி முன்பு நடப்பு தமிழ் புத்தாண்டுக்கான (விளம்பி) பஞ்சாங்கம் வாசித்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

Leave a Reply