''பொன் மாணிக்கவேல் பதவி நீடிப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்வது சந்தேகத்தை ஏற்படுத் துகிறது,'' என மதுரையில் பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் குற்றம்சாட்டினார்.

அவர் கூறியதாவது: நாடு ஒற்றுமையாக இருக்ககூடாது என்ற எண்ணத்தில் ம.தி.மு.க., செயலர் வைகோ பேசிவருகிறார். அவரது பேச்சை மக்கள் நம்பப் போவதில்லை. மேகதாது அணை கட்டக் கூடாது என்பது தமிழக பா.ஜ., விருப்பம். பிரதமர் மோடி ஆட்சியில்தான் காவிரி நதிநீர் ஆணையம் அமைக்கப்பட்டது. மத்தியமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மேகதாது விவகாரத்தில் எதிர்ப்பை பதிவு செய்து உள்ளார்.

நடிகர் ரஜினி விவரம் தெரிந்தவர். மக்களின் உணர்வுகளை புரிந்தவர். அதனால் தான் பிரதமர் மோடி மக்களுக்கு நல்லது செய்ய பாடுபடுவதாக தெரிவித் திருக்கிறார்.தேர்தல் அறிவிப்பு வெளியானதும் கூட்டணிகுறித்து மேலிடம் முடிவு செய்யும். இன்று பா.ஜ.,வை ஆதரிப்பவர்கள், நாளை கூட்டணியில் இணையாமல் போகலாம். இன்று விமர்சிப்பவர்கள், நாளை கூட்டணியில் இடம் பெறமாட்டார்கள் என உறுதியாக கூறவும் முடியாது.

'கஜா' புயல் பாதிப்பு குறித்து மத்தியகமிட்டி அளிக்கும் அறிக்கையின்படி தேவையான நிவாரண நிதியை மத்திய அரசு வழங்கும்.பொன் மாணிக்கவேல் பதவிநீடிப்பை எதிர்த்து, தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. சிலைகடத்தல், கொள்ளைக்கு அரசு அதிகாரிகள் உடந்தையாக இருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதைதடுக்க அவர் நடவடிக்கை எடுத்து வருகிறார். மேல்முறையீட்டை மறுபரிசீலனை செய்யவேண்டும், என்றார்.

Leave a Reply