''ஜெயலலிதா ஆட்சியின் அவலங்களை துவக்கத்தில் இருந்தே, நான் சொல்லி வருகிறேன். அதனால் தான் பதவியேற்பு விழாவுக்கு கூட, என்னை முதல்வர் அழைக்கவில்லை,'' என, தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தினமலர் நாளிதழுக்கு, அளித்த சிறப்பு பேட்டி

 

லோக்சபா தேர்தலில், கூட்டணி அமைப்பதில் தாமதம் ஏற்பட்டது. சட்ட சபை தேர்தலின் போதும் அதே மாதிரியே குழப்பம் ஏற்பட்டுள்ளதே?

கூட்டணி அமையவில்லை என்பதுதான் பிரச்னை. அதே நேரம், கூட்டணி ஏன் அமையவில்லை என்பதையும் பார்க்கவேண்டும்.கூட்டணி அமைவது தடுக்கப்பட்டிருப்பதன் மூலம், தமிழகமக்கள் எதிர்பார்த்த மாற்றம் வருவதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அரசுக்கு மற்றும் திமுக.,வுக்கு எதிரான ஓட்டுகளை சிந்தாமல், சிதறாமல் சேகரித்து, திராவிடகட்சிகளை தோற்கடிக்க வேண்டும் என கருதினோம். ஆனால், பலரும் முதல்வராக ஆசைப்பட்டனர். பலமுறை முதல்வராக இருந்தவர்களை, பல, 'முதல்வர்' வேட்பாளர்களால் எப்படி தோற்கடிக்க முடியும்?

பா.ஜ.க, மத்தியில் ஆட்சி செய்கிறது. அதனால், இங்கு ஆட்சியை பிடித்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால், இணக்கமான ஆட்சி மூலம், தமிழகத்துக்கு நல்லது செய்ய நினைத்தோம். தமிழகத்தில் ஊழலை ஒழித்து, அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த நினைத்தோம். மற்றவர்கள் ஒத்துழைக்கவில்லை.

 

'அ.தி.மு.க.,வுடன் கூட்டணி பேச்சு நடக்கிறது' என இல.கணேசன் கூறினார். நீங்கள், மறுநாள், 'இல்லை' என்கிறீர்கள். ஏன் இந்த குழப்பம்?

இதை ஏற்க முடியாது. மாநில தலைவரான நான், கடுமையாக அ.தி.மு.க.,வை எதிர்த்து வருகிறேன். மத்திய அமைச்சர்கள், முதல்வரை பார்ப்பது மரபு. அதைக்கூட சிலர், ரகசிய உறவு என யூகமாக மாற்றி திரித்துக் கூறினர். அதனால், பா.ஜ.,வின் தனித்தன்மை பாதிக்கப்பட்டது.

நாங்கள், சென்னை மாநகராட்சியை எதிர்த்து, ஊழலை எதிர்த்து, டாஸ்மாக்கை எதிர்த்து, பால் விலை, பஸ் கட்டணம், மின் கட்டண உயர்வுகளை எதிர்த்து போராட்டம் நடத்தினோம். 'எங்கள் அணிக்கு எந்த கட்சி வேண்டுமானாலும் வரலாம்' என கூறினோமே தவிர, அ.தி.மு.க., கூட்டணிக்கு ஏங்கவில்லை; முயற்சிக்கவில்லை.

 

விஜயகாந்தை கூட்டணியில் தக்க வைக்க, தமிழக தலைவர்கள் தீவிர முயற்சி மேற்கொள்ள வில்லையா?

திராவிட கட்சிகளுக்கு மாற்று ஏற்படுத்த வேண்டிய கடமை விஜயகாந்த், அன்புமணி, இன்னும் சிலருக்கு இருக்கிறது. ஒன்று சேர்ந்திருந்தால், கட்டாயம் வெற்றி பெற்றிருப்போம். தமிழகத்தில் விரும்பிய மாற்றத்தை பெற்றிருப்போம். அதை விஜயகாந்தும், அன்புமணியும் தான் தடுத்துவிட்டனர்.
 

'பூஜ்ஜியம்' என, விஜயகாந்தை வர்ணித்த நீங்கள், அவரை கூட்டணிக்குள் கொண்டு வர முயன்றதேன் என வைகோ கூறியுள்ளது பற்றி…

நான் அப்படி கூறவில்லை. வைகோவை போல் தவறாக கேட்கிறீர்கள். பூஜ்ஜியத்துடன், ஓர் எண் சேர்ந்தால்தான், அதன் மதிப்பு உயரும்; பூஜ்ஜியத்தோடு, பூஜ்ஜியம் சேர்ந்தால் மதிப்பு உயராது. தே.மு.தி.க.,வை பூஜ்ஜியம் என சொல்லவில்லை. எங்களோடு சேர்ந்திருந்தால் மதிப்பு உயர்ந்து இருக்கும் என்றுதான் சொன்னேன்.

 

அப்படியானால், மக்கள் நலக் கூட்டணி பூஜ்ஜியமா?

ஆமாம். அவர்களுக்கு ஏது மதிப்பு? அவர்கள் என்றைக்கும் பூஜ்ஜியம்தான்.
 

அவசரம், அவசரமாக, முதல் வேட்பாளர் பட்டியலைவெளியிட்டது ஏன்?

வேட்பாளர் பட்டியல் வெளியாகாவிட்டால், 'வெளியாகவில்லை' என்கிறீர்கள். விரைவாக வெளியிட்டால், 'அவசரமாக வெளியிட்டோம்' என்கிறீர்கள். கூட்டணிக்கு யாரும் வராவிட்டாலும், பா.ஜ., தனித்தே தேர்தலை சந்திப்போம் என சொன்ன பின், தேர்தலை சந்திக்க நாங்கள் தயாராகி விட்டோம். அந்த அடிப்படையில்தான், வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

 

மத்திய அமைச்சர் பியுஷ் கோயல், அ.தி.மு.க.,வை எதிர்க்கிறாரே?

இந்த ஆட்சியின் அவலங்களை துவக்கத்தில் இருந்தே, நான் சொல்லி வருகிறேன். அதனால்தான், பதவியேற்பு விழாவுக்கு கூட, என்னை முதல்வர் அழைக்கவில்லை. அதே நேரம் நல்லது நடந்தால், அதை பாராட்டி இருக்கிறேன்.ஓர் மருத்துவராக பல ஏழைத் தாய்களின் ஏக்கத்தை பார்த்தவள் நான். குழந்தை பிறந்ததும், ஏழைத் தாய்மார் தேடும், 16 பொருட்களை தருவதாக, முதல்வர் அறிவித்தபோது பாராட்டினேன்.ஆனால், அவரை சந்திக்க முடியவில்லை; நேர்மையான அதிகாரிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர்; தென் தமிழகத்தில் மதுரை தாண்டினால் மருத்துவமனை, தொழிற்சாலைகள், கல்லுாரிகள் இல்லை என பல குறைகள். இதையெல்லாம் சரி செய்யாமல், ஐந்தாண்டு காலம் என்ன ஆட்சி செய்திருக்கிறார் ஜெயலலிதா? இதைத்தான், ஒட்டுமொத்த பா.ஜ.,வும் கேட்கிறது.

 

சின்ன, சின்ன கட்சிகள் எல்லாம், உங்களிடம் கூடுதல் தொகுதிகளை கேட்டு சிரமப்படுத்துகின்றனவே?
பெரிய கட்சி, சிறிய கட்சி என பாகுபாடு பார்ப்பது இல்லை. எல்லோராலும், புறக்கணிக்கப்பட்ட கட்சிகள், பல இடங்களில் பலம் பெற்று திகழ்கின்றன. அவர்களுக்கும் வாய்ப்பு தர வேண்டும் இல்லையா? தேர்தல் நெருக்கத்தில், அ.தி.மு.க., அரசையும்

 

ஜெயலலிதாவையும் மத்திய அமைச்சர்கள் கூட விமர்சிக்கின்றனரே… கூட்டணி அமையாத ஆத்திரமா?

மத்திய அமைச்சர் பியுஷ் கோயல், கடந்த பொங்கலின்போது திருவள்ளூரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, 'தமிழகத்தில் ஊழல் இல்லாமல், எந்த வேலையும் நடைபெறுவதில்லை. லஞ்சம் தலை விரித்தாடுகிறது' என காட்டமாகத்தானே பேசினார்? ஆளுங்கட்சியின் தவறுகளை தேர்தல் களத்தில்தானே உரக்க சொல்ல முடியும்? அதைத்தான், மத்திய அமைச்சர்களும் செய்கின்றனர். இனி, வேகமாக செய்வர்.

முதல் வேட்பாளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லை. தேர்தலில் போட்டி இல்லையா?
பா.ஜ., தொண்டர்கள், 15க்கும் மேற்பட்ட தொகுதிகளில் எனக்காக, பணம் கட்டியுள்ளனர். அதில், எது சரியான தொகுதி என்பதை தீர ஆலோசித்து அறிவிப்போம்.

 

'60 லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்த்தால், தமிழகத்தில் ஆட்சி அமைத்துக் காட்டுகிறேன்' என, அமித் ஷா கூறினார். அது சாத்தியமா?

மாநிலத்தில் உள்ள, 60 ஆயிரம் ஓட்டுச்சாவடிகளில், தலா 100 பேர் என 60 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க இலக்கு வைத்து, 50 லட்சம் பேரை சேர்த்திருக்கிறோம். தமிழகத்தில், ஓர் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என முயற்சிக்கிறோம். மற்ற மாநிலங்களில் உள்ளதற்கும், தமிழக அரசியலுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. ஒரு தேசிய கட்சி, இத்தனை உறுப்பினர்களை சேர்த்துள்ளது பெரிய விஷயம். பா.ஜ., வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

 

உங்கள் கூட்டணியை பா.ம.க., புறக்கணித்தது ஏன்?

முதல்வர் வேட்பாளர் விஷயத்தில் சிலவற்றை அனுசரித்து போயிருந்தால், பா.ம.க.,வுடன் கூட்டணி அமைத்திருக்க முடியும்.

சுயவிளம்பரங்களில் காட்டும் ஆர்வத்தை, களப் பணியில் பா.ஜ., தலைவர்கள் காட்டுவது இல்லையே?

அது தவறு. அனைவரும் சுற்றுப்பயணம் செய்கின்றனர். 60 ஆயிரம் ஓட்டுச்சாவடிகளுக்கு 6 ஆயிரம் பொறுப்பாளர்களை நியமித்து, பிரசாரம் செய்தோம். அவர்களுடன் தலைவர்கள் சென்றனர். சட்டசபை தொகுதிவாரியாக நடந்த பொதுக்கூட்டங்களில் தலைவர்கள் பங்கேற்றனர்.

 

'காஞ்சி ஜெயேந்திரர் கைதுக்கு, அரசியல் நோக்கமே காரணம்' என, அமித் ஷா, சுப்பிரமணியன் சுவாமி பேசியுள்ளனரே…?

இதற்கு முன்பு அமித் ஷா இங்கு வந்தபோதுகூட, தமிழகத்தில்தான் தேர்தலில் ஊழல் அதிகம் நடக்கிறது என்று பேசியிருந்தார். அரசாங்கம் தவறாக நடந்து கொண்டது என்பதை, சுட்டிக்காட்டியதில் என்ன தவறு?

 

தேர்தல் நடக்கும்போதே, மக்கள் நலக் கூட்டணியில் அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கப்பட்டுள்ளதே?

ஆமாம். தே.மு.தி.க., இளைஞர் அணி செயலர் சுதீஷ் வாரி, வாரி வழங்கினார். சிரிப்பாகத்தான் வருகிறது. பிறக்காத குழந்தைக்கு பெயர் வைக்கின்றனர். சில மாவட்டங்களில் மட்டும், பலம்

பெற்றுள்ள அன்புமணியும், தனியாக நின்று கொண்டு முதல்வர் வேட்பாளர் என பிரகடனப்படுத்துகிறார். இந்த விஷயங்களில் இரண்டு கட்சிகளும் தவறிழைக்கின்றன.

 

அ.தி.மு.க., தலைமை மீது கூறிய குற்றச்சாட்டுக்கு ஜெயலலிதா நேரடியாக பதில் சொல்லவில்லையே?

அமைச்சர்கள் கூறிய பதிலில் திருப்தி இல்லை. உதய் திட்டத்தால், மின் வாரியத்துக்கு பல கோடி ரூபாய் மிச்சப்பட்டிருக்கும் என்று சொன்னால், பதிலில் சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேசுகின்றனர். இது அ.தி.மு.க.,வின் ஸ்டைல்.

கட்சியின் கொள்கை, கோட்பாடுகளை கடந்து, நடிகர் – நடிகைகளை அதிகம் நம்புவது போல் தெரிகிறதே?

தவறான கருத்து. சினிமா பிரமுகர்கள், சமுதாயத்தின் அங்கமாக இருப்பவர்கள். சகோதரர்கள். அவர்களை நம்பி மட்டுமே கட்சி இல்லை. தொண்டர்கள், கொள்கையை நம்பியே கட்சி இருக்கிறது. காங்கிரஸ் போல் நடிகர்களை பா.ஜ., முன்னிறுத்துவது இல்லை. பிரபலமாக இருப்பதால், மரியாதை எதிர்பார்க்கின்றனர். அதை செய்கிறோம்.

 

லோக்சபா தேர்தலில் தே.ஜ.கூட்டணி வாங்கிய 19.5 சதவீத ஓட்டுகளை, பா.ஜ., இம்முறை

வாங்குமா?

அது கூட்டணியாக பெற்ற ஓட்டு. அதற்காகத்தான் மீண்டும் கூட்டணி அமைக்க விரும்பினோம். எங்களுடைய ஓட்டு 5.5 சதவீதம். அதை விட அதிகமாக, இம்முறை ஓட்டு கிடைக்கும்.
 

'19.5 சதவீத ஓட்டு, மோடிக்காக கிடைத்தது'என, சமீபத்தில் கூறியிருந்தீர்கள்…?

அது லோக்சபாவுக்கு நடந்த தேர்தல். கூட்டணிக்கு கிடைத்த ஓட்டுகள், மோடிக்கும் கிடைத்திருக்கும். பா.ஜ.,வை, தமிழகத்தில் நாங்கள் வளர்க்கவில்லை. அதை செய்து கொண்டிருக்கிறோம். நாங்கள் செய்த தப்புக்கு மோடியை குறை சொல்லக்கூடாது. உலக அரங்கில் மிகப் பெரிய தலைவரான அவரை, தமிழக அரசியலுக்குள் இழுத்து காயப்படுத்தக்கூடாது.

 

வேட்பாளர் பட்டியலில் தகுதியானவர்களுக்கு பதிலாக, உங்களுக்கு சாதகமானோரை

திணித்திருப்பதாக கூறப்படுகிறதே…?

அப்படி இல்லை. ஜனநாயக முறைப்படி, மாநில தேர்தல் குழு கூடி, வேட்பாளர் பட்டியலை

தயாரித்துள்ளோம். மாநில தலைவரான நான், கன்னியாகுமரி, கோவை போன்ற பலம் பொருந்திய தொகுதியில் நிற்க முடியாதா? வெற்றி எங்கு எளிதென எனக்கு தெரியாதா? ஆனால், நான் போட்டியிடும் தொகுதியைக்கூட, கட்சியினர்தான் முடிவு செய்கின்றனர்.

வேட்பாளரின் சொந்த தொகுதியில், 'சீட்' தராமல் வேறு இடத்தில் தரப்படுகிறதே?

வெற்றி வாய்ப்பு உள்ளவராக கருதப்படுவோருக்கு ஏற்ப, தொகுதி தரப்படுகிறது. அதில், அரசியல் காரணங்கள் இல்லை.

 

மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள சென்னை விமான நிலையத்தில், இதுவரை, 60 முறை கண்ணாடி உடைந்துள்ளதே…?

சில அதிகாரிகள் செய்த தவறு. அங்கு ஊழல் எதுவும் நடக்கவில்லை. கண்ணாடி உடையும் விஷயத்தை வைத்து, மத்திய ஆட்சிக்கு அளவுகோல் நியமிக்கக் கூடாது.

ரஜினி ஆதரவை பெற முயற்சி நடக்கிறதா?

அவர், நதிகள் இணைப்புக்காக குரல் கொடுத்தவர். தேசிய சிந்தனை உள்ளவர். அவரை நட்பு ரீதியாக பார்த்து வருகிறோம். அதற்கும்கூட அரசியல் நோக்கம் கற்பிக்கப்படுகிறது. பிரேமலதா விஜயகாந்த் என் நெருங்கிய தோழி. அவரது வீட்டுக்குக்கூட போக முடிய வில்லை. நட்புக்குக்கூட கூட்டணி தடை போடுகிறது. தோழிகளாகக்கூட தமிழகத்தில் இருக்க முடியவில்லை.

சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்கு ஸ்மிருதி இரானி, சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் வருவரா?

மாநில குழு யாரை விரும்புகிறதோ, அவர்கள் நிச்சயம் வருவர்.
 

'மோடியின் சாதனைகளை பிரதானப்படுத்தி, ஓட்டு கேட்கப் போகிறேன்' என்கிறீர்கள். அவை என்ன?

'முத்ரா வங்கி, ஜன் தன்' திட்டம், 5 கோடி மக்களுக்கு காஸ் மானியம், 'ஸ்மார்ட் சிட்டி', 'மேக் இன் இந்தியா', பயிர் பாதுகாப்பு திட்டம் – இப்படி அடுக்கி கொண்டே போகலாம். இன்னும் 2 ஆண்டுகள் கழித்து, இதற்கான முழு பலனையும் மக்கள் அனுபவிப்பர்.
 

இரண்டாண்டு மத்திய ஆட்சியில் தமிழகம் கண்டது என்ன?

தமிழகத்தில் மத்திய அரசு திட்டங்கள் மறைக்கப்படுகின்றன; மறுக்கப்படுகின்றன. உதாரணத்துக்கு, எல்.இ.டி., பல்பு திட்டத்தால், பல கோடி இழப்பு ஏற்பட்டது. தமிழகத்துக்கு 2 ஸ்மார்ட் சிட்டி திட்டம் கிடைத்துள்ளது. மத்திய அரசின் தடுப்பூசி திட்டத்தில், 'அம்மா' படம் போட்டுக் கொள்கின்றனர். 7 ஆயிரம் கோடி ரூபாய், தமிழக மின் வாரியத்துக்கு கடன் தள்ளுபடி செய்தோம். தமிழகத்துக்கு நிவாரணமாக, 1,700 கோடி ஒதுக்கப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியில் என்ன கிடைத்தது?
 

வாகன விலை உயர்வு, புதிய வரி, இன்சூரன்ஸ்பிரீமியம் உயர்வு; சுங்கச்சாவடி கட்டண உயர்வு, தங்கத்துக்கு கலால் வரி என மக்களுக்கு ஏக பாதிப்பு ஏற்பட்டுள்ளதே…?

சுங்கச்சாவடிகளில், பல கோடி ரூபாய் ஊழல் நடந்தது. அதனால்தான் மத்திய அரசு, அவற்றை நவீனப்படுத்தி வருகிறது. சுங்கச்சாவடி கட்டண உயர்வு, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நடந்தது. அதை இப்போது, மாற்ற முடியாது. அதற்கான காலவரையறை முடிந்ததும், அது சரியாகும்.

இந்த கட்டண உயர்வால் கிடைக்கும் வருமானம் அனைத்தும், மக்களின் வளர்ச்சித் திட்டங்களுக்குத் தானே செலவு செய்யப்படுகிறது. 1.76 லட்சம் கோடி ரூபாய் மோசடி, காமன்வெல்த் ஊழல் ஆகியவை, யார் வீட்டு பணம்? நாங்கள் மக்கள் பணத்தை பெற்று, திட்டங்களாக தருகிறோம். மோடி விடுமுறையின்றி வெளிப்படையாக உழைக்கிறார்.
 

டாக்டர் தமிழிசை; அரசியல்வாதி தமிழிசை; யாரை பிடிக்கும்?

நிச்சயமாக அரசியல்வாதியைத்தான் பிடிக்கும்.

பயோ – டேட்டா
பெயர் : தமிழிசை சவுந்தரராஜன்
கட்சி : பாரதிய ஜனதா
பதவி : மாநிலத் தலைவர்
வயது : 51
கல்வி தகுதி : எம்.பி.பி.எஸ்., டி.ஜி.ஓ.,
சொந்த ஊர் : அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி

நன்றி தினமலர்

Leave a Reply