இந்தியா, மியான்மர் இடையே பாதுகாப்பு, வர்த்தகஉறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக, 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தா கியுள்ளன. இந்தத்துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கச் செய்வதற்கும் இரு நாடுகளும் உறுதிபூண்டுள்ளன.


 மியான்மரில் ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்தபிறகு, கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆங் சாங் சூ கீயின் "நேஷனல் லீக் ஃபார் டெமாக்ரஸி' கட்சி வெற்றிபெற்றது. அதனைத் தொடர்ந்து, அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சராக ஆங் சாங் சூ கீ பொறுப்பேற்ற பிறகு, இந்தியா வந்திருப்பது இதுவே முதல்முறையாகும்.
 கோவாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்றபின்பு தில்லி வந்த ஆங் சாங் சூ கீயை, பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை சந்தித்துப்பேசினார். நீண்ட நேரம் நடைபெற்ற சந்திப்புக்குப் பின்னர், இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, பிரதமர் மோடி கூறியதாவது:

ஆங் சாங் சூ கீக்கு இந்தியா அறிமுகமில்லாத நாடுஅல்ல. தில்லி பல்கலைக் கழகத்தின் மாணவியான அவருக்கு, தில்லி ஏற்கெனவே நன்கு பரிச்சயமானது. சூ கீயின் இரண்டாவது இல்லமான இந்தியாவுக்கு வந்துள்ள அவரை மீண்டும் வரவேற்கிறேன்.  ஆங் சாங் சூ கீ உடனான சந்திப்பு, ஆக்கப்பூர்வமாகவும், பரந்துபட்ட அளவிலும் இருந்தது. அவரது தலைமையில் மியான்மர் அரசு புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளது. அந்நாட்டுக்கு இந்திய அரசு எப்போதும் முழுஆதரவு அளிக்கும் என்பதை உறுதியுடன் தெரிவித்து கொள்கிறேன். எல்லைப் பாதுகாப்பில் பரஸ்பர ஒத்துழைப்புடன் செயல்படுவது என இருநாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன. இதுதவிர, விவசாயம், மின்சாரம், மரபுசாரா எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் உறவுகளை வலுப்படுத்துவதற்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.   இந்தியாவையும் மியான்மரையும் இணைக்கும் "கலாடன்' திட்டம், இந்தியா-மியான்மர்-தாய்லாந்து நாடுகளை இணைக்கும் சாலைத்திட்டம் போன்ற மிகப்பெரிய திட்டங்கள் முதல், சுகாதாரம், மனிதவள மேம்பாடு, திறன்மேம்பாட்டுப் பயிற்சி உள்ளிட்ட துறைகள்வரை, இந்தியா தனது ஆற்றல் வளங்களை மியான்மருடன் பகிர்ந்துகொண்டுள்ளது.


 தரமான விதைகளை உற்பத்திசெய்வதற்காக, மியான்மரின் யெஜின் நகரில் விதை உற்பத்தி மையம் ஒன்றை இந்தியா உருவாக்கும். பயறுவர்த்தகத்தில் இரு நாடுகளும் பயன்பெறும் வகையில் ஒப்பந்தம் ஒன்று உருவாக்கப்படும். மணிப்பூரில் இருந்து மியான்மருக்கு அளிக்கப்படும் மின்சாரத்தின் அளவு உயர்த்தப்படும். மியான்மரில் அந்நாட்டுஅரசுடன் இணைந்து எல்இடி விளக்குகள் தயாரிக்கும் திட்டத்தை இந்திய அரசு செயல்படுத்தும் என்றார் அவர்.

 

Leave a Reply