கட்சியின் தலைவர் அமித்ஷாவின் எண்ணப்படி, வருடத்தின் அனைத்து நாட்களிலும், தலித்வீட்டில், ஒரு வேளையாவது, உணவை சாப்பிடுவது என்பதை, சபதமாக எடுத்திருக்கிறேன்,'' என, தமிழக பாஜ., தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கூறினார்.


கடந்த சில நாட்களுக்கு முன், உத்தர பிரதேசம், அலகாபாத்தில் பா.ஜ., தேசியசெயற்குழு கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட, கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, மாநிலத்தலைவர்கள், தலித் இன மக்களை நோக்கி கட்சியை கொண்டுசெல்ல வேண்டும் என, கேட்டுக் கொண்டார்.


அதற்காக, தலித்வீடுகளுக்கு சென்று, சாப்பிடவேண்டும்; மாநில – மாவட்ட நிர்வாகிகள், கட்சிப்பணி தொடர்பாக, சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் போது, தலித் வீடுகளுக்கு சென்று, மத்திய அரசின் தலித்ஆதரவு செயல்பாடுகளை கூறி, அவர்கள் வீடுகளில் சாப்பிடவேண்டும் என, கூறினார்.


இதையடுத்து, கூட்டத்தை முடித்து, தமிழகம் திரும்பிய தமிழக பா.ஜ., தலைவர், தமிழிசை சவுந்தர ராஜன், சென்னை, எழும்பூரில் உள்ள திடீர் நகர் பகுதிக்கு சென்றார்.

அங்கு, விவேகானந்தன் என்ற தலித்வீட்டுக்கு சென்று, அந்த பகுதி மக்களோடு, சிலமணி நேரம் இருந்தார். பின், அவர்கள் வீட்டிலேயே மதிய உணவு அருந்தினார். அடுத்தநாள், சேலம் சென்ற அவர், அங்குள்ள காக்காயன் சுடுகாடு அருகில் உள்ள கோர்ட் ரோடு காலனிக்கு சென்றார். அங்குள்ள கட்சிக் காரர் ஜீவானந்தம் வீட்டுக்கு சென்றார். தலித் இனத்தை சேர்ந்தவரான, அவர் வீட்டில் வெகுநேரம் அமர்ந்திருந்தார்.

சுற்றிலும் உள்ள மக்கள் அவரை சூழ்ந்துகொள்ள, அவர்களிடம் மோடி அரசின் தலித் ஆதரவுகொள்கைகள் மற்றும் திட்டங்களை எடுத்துக்கூறி, அந்த மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பின், ஜீவானந்தம் வீட்டில் சாப்பாடுகேட்க, அவர்கள், சாப்பாடு இல்லாமல் தவித்துள்ளனர். வீட்டிலேயே சாப்பாட்டை செய்யச்சொல்லி, அதை சாப்பிட்டுவிட்டுத்தான் அங்கிருந்து கிளம்பினார்.


இதுகுறித்து, தமிழிசை சவந்தர ராஜன் கூறுகையில், ''பா.ஜ.க,வுக்கும் தலித்களுக்கும் துாரம் என்பதை மாற்ற இந்தமுயற்சி. தலித்மக்கள் வீடுகளுக்கு சென்று உணவருந்த வேண்டும் என்ற, தலைவர் அமித்ஷாவின் எண்ணம் நிறைவேற்றப் படுகிறது. வருடத்தின் அனைத்து நாட்களிலும், ஒருவேளையாவது, தலித் ஒருவர் வீட்டில் உணவருந்துவது என, சபதம் எடுத்துள்ளேன்; நிறைவேற்றுவேன்,'' என்றார்.

Leave a Reply