மத்திய அரசு வருகிற ஏப்ரல் 1-ந் தேதி முதல் சரக்கு ,சேவை வரியை அமல்படுத்த திட்டமிட்டு இருக்கிறது. இதுதொடர்பான மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு விட்டாலும் கூட, டெல்லி மேல்சபையில் இன்னும் நிறைவேற்றப் படவில்லை. இந்த மசோதாவை நிறைவேற்ற விடாமல் காங்கிரஸ் முட்டுக்கட்டை போட்டுவருகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மும்பையில் பேசிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சரக்கு மற்றும் சேவைவரி மசோதாவில் அதிகபட்சவரி பற்றிய வரையறையை நிர்ணயிக்க நாங்கள் விரும்புகிறோம் என்று குறிப்பிட்டார்.

இதுகுறித்து பாராளுமன்ற விவகார மந்திரி வெங்கையா நாயுடு நிருபர்களிடம் கூறியதாவது:-

காங்கிரசின் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை ஆதரிக்க தயார் என்று ராகுல் காந்தி கூறி இருக்கிறார். அதேநேரம் இதில் வரையறை தொடர்பாக காங்கிரஸ் எந்த பரிந்துரையும் எப்போதும் செய்யவில்லை. இப்படியொரு நிலையில் திடீரென்று இந்தமசோதாவிற்கு அக்கட்சி நிபந்தனை விதிப்பது சரி அல்ல.

பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் இதுதொடர்பாக சில பிரச்சினைகளை காங்கிரஸ் எழுப்பியது. அப்போது, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரிடம் அரசின் நிலைப்பாட்டை நிதிமந்திரி அருண்ஜெட்லி விளக்கினார்.

ஆனால் இப்போது இந்த மசோதாவில் வரையறை வேண்டும் என்று காங்கிரஸ் கூறுகிறது.

சரக்கு மற்றும் சேவைவரி மசோதா பரிந்துரையில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் என்றால் அதற்கு பாராளுமன்ற கூட்டத் தொடரை நடத்தவேண்டும். அங்கு 3-ல் 2 பங்கு பெரும் பான்மையுடன் அதை நீங்கள் நிறைவேற்றவேண்டும்.

அதன்பிறகு இது பற்றி மாநில அரசுகளின் கருத்துகளை கேட்க வேண்டும். இவையெல்லாமே மிகவும் சிக்கல் நிறைந்தவை என்பதால் இதை உங்கள் தேவைக்காக நீங்கள் உருவாக்கிக்கொள்கிறீர்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply