திமுகவினரின் நடை பயணத்தை நிறுத்த விவசாயிகள் வலியுறுத்த வேண்டும் என, மத்திய அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


     மதுரைவிமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக் கிழமை கூறியதாவது: காவிரி நதிநீர் பங்கீடு 100 ஆண்டுகளுக்கும் மேலான பிரச்னையாக உள்ளது. நீண்டகாலத்துக்கு பின் உச்சநீதிமன்றம் இப்பிரச்னைக்கு ஒருதீர்ப்பு வழங்கியுள்ளது. அதை நடைமுறைப் படுத்த, தீர்ப்பின் வார்த்தைகளில் உள்ள பிரச்னைகள் மேலும் 100 ஆண்டுகளுக்கு நீடிக்கக்கூடாது என்பதற்காக விளக்கமாகக் கேட்கப்பட்டுள்ளது.


     காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக தேர்தலில் பாஜக வெற்றிபெற்றால் தமிழகத்துக்கு தண்ணீர் தரவேண்டிய சூழல் வந்துவிடும் எனக் கூறியுள்ளார். இதற்கு, காங்கிரஸ் கட்சியின் தமிழகதலைவர் திருநாவுக்கரசர், திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும். 


    அதேநேரம், அம்மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா பாஜக வெற்றிபெற்றால், இரு மாநிலங்களுக்கு இடையே நல்லுறவு ஏற்படுத்தப்படும் என்றும், காவிரி பிரச்னைக்கு தீர்வுகாண்பேன் என்றும் கூறியுள்ளார். தமிழக விவசாயிகள் இதனை புரிந்துகொள்ளவேண்டும். 


     திமுக, காங்கிரஸ் கட்சியினர் நடை பயணத்தை நிறுத்துங்கள் என, விவசாயிகள் வலியுறுத்த வேண்டும். இலங்கை தமிழர்படுகொலை, மீனவர் பிரச்னை என 50 ஆண்டுகள் எங்களை ஏமாற்றியது போதும் என, தமிழக மக்கள் அவர்களிடம் கூறவேண்டும்.


    துணைவேந்தர் நியமனம் குறித்து, அதிமுக கடந்த ஜூலை மாதம் தமிழக சட்டப் பேரவையில் திருத்தங்கள் கொண்டுவந்தது. அப்போது திமுக எதுவும் பேசாமல், தற்போது அதனை எதிர்க்கின்றது. இவர்களின் இரட்டைவேடங்களுக்கு மக்கள் முடிவு கட்டவேண்டும். 


    காவிரி பிரச்னை தொடர்பாக தமிழகமுதல்வர், துணை முதல்வர் ஆகியோர் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டு அவர் ஒதுக்க வில்லை என கூறாதபோது, பிரதமர் நேரம் ஒதுக்க வில்லை என எதிர்க் கட்சியினர் குற்றம்சாட்டுவது சரியல்ல. இப்பிரச்னை தொடர்பாக, முதலில் அத்துறை அமைச்சர் நிதின்கட்கரியை சந்தித்து பேசிய பின்புதான் பிரதமரை சந்திக்கவேண்டும். இதனை மாற்றிக்கூறுவது தமிழக மக்களை ஏமாற்றும் செயல் என்றார்.

Leave a Reply