தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர்ராஜன் நாகர்கோவிலில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக பா.ஜ.க முக்கிய இடத்தை பெறப் போகிறது. பலகட்சிகள் இடைத் தேர்தலில் போட்டியிட தயங்கியநிலையில் நாங்கள் தேர்தலை சந்திக்கிறோம்.

இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதற்காக தலைவர்களின் சுற்றுப்பயண விவரம் தயாராக உள்ளது. இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் வாக்காளர்களுக்கு டாஸ்மாக் கடைகளின் டோக்கன் வினியோகிக்கப் படுவதாக தகவல்கள் வருகின்றன.

வாக்காளர்களுக்கு பரிசுபொருட்கள், பணம் கொடுப்பதை தடுக்கவேண்டும். அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகள் பொதுதேர்தலாக இருக்கவேண்டியது. இடைத் தேர்தலாக மாறியதற்கு காரணம் பணம் பட்டுவாடா தான். இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் நேர்மையாகவும், நடுநிலையாகவும் நடத்தவேண்டும்.

மீனவர் பிரச்சனையில் மத்திய மந்திரிகள் தலைமையில் நடந்த பேச்சு வார்த்தை நிரந்தர தீர்வை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மீனவர் சமுதாயத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட பிரதமர் மோடி உடன்பட மாட்டார்.

குமரி மாவட்டத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் இனயம் வர்த்தக துறைமுகம் உறுதுணையாக இருக்கும். எனவே இத்திட்டத்துக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு அளிக்கவேண்டும்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா பூரண குண மடைந்து பணிகளை கவனிக்க வேண்டும் என்று பா.ஜனதா கட்சி விரும்புகிறது. தமிழக நிர்வாகம் முடங்கிவிடக் கூடாது என்பதில் தமிழக அரசு கவனமாக இருக்கவேண்டும்.

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க அதிக கவனம் செலுத்தவேண்டும். இந்து இயக்கத்தைச் சேர்ந்த சகோதரர்கள் தாக்கப்படுவதும், அவர்கள்மீது பொய்வழக்கு போடப்படுவதும் அதிகமாகியுள்ளது. எனவே காவல்துறை இவற்றையெல்லாம் கட்டுக்குள் கொண்டுவரவேண்டும்.

சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டுவதை மத்திய அரசு தடுத்தது தற்காலிகமானது என்றும், இதற்கு நிரந்தரதீர்வு வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் கூறுகிறார். இத்தனை ஆண்டுகாலம் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது மு.க.ஸ்டாலினும், தி.மு.க.வும் எத்தனை நீர் நிலைத் திட்டங்களுக்கு நிரந்தரதீர்வு கண்டார்கள் என்ற பட்டியலை வெளியிட வேண்டும்.

தமிழகத்தில் 6 மாதத்தில் ஆட்சிமாற்றம் ஏற்படும் என்று துரைமுருகன் சொல்கிறார். ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருஆட்சி மாற்றப்படும் என்று கூறுவது தமிழக அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தும் படியாக உள்ளது.

காவிரி பிரச்சனையை தி.மு.க. அரசியல் ஆக்கிக் கொண்டு இருக்கிறது. தி.மு.க. ஆட்சியில் இருக்கும் போது தமிழக நதிகளை இணைக்க ஏற்பாடு செய்திருக்கலாம். கிடப்பில் போடப்பட்ட நீர்நிலைத் திட்டங்களுக்கு நிரந்தர தீர்வு கண்டிருக்கலாம். ஏன்? காவிரி பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட முயற்சி எடுத்திருக்கலாம். ஆனால் அவர்கள் எதையும் செய்யவில்லை.

தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை செய்வது மிகுந்தவேதனையை அளிக்கிறது. விவசாயிகளின் தற்கொலையை காவிரி விவகாரத்துடன் முடிச்சுபோடுவது சரியல்ல. தமிழக அரசின் நெல்கொள்முதல் மையங்களுக்கு விவசாயிகள் கொண்டுசெல்லும் நெல்லில் அதிக ஈரப்பதம் இருப்பதாகக் கூறி நெல்லை கொள்முதல் செய்யவில்லை. இதனால் விவசாயிகள் குறைந்தவிலைக்கு தனியாரிடம் விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு நிச்சயமாக சட்டப்பூர்வமாக அமைக்கும். காவிரியிலிருந்து தமிழகத்துக்கு விநாடிக்கு 2000 கன அடி தண்ணீர் திறக்கவேண்டுமென சுப்ரீம் கோர்ட்டு கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டும், அந்தமாநில அரசு அதை நடைமுறைப்படுத்த வில்லை. இதற்கு கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ் அரசை தமிழக காங்கிரஸ் கட்சி கண்டிக்கவில்லை.

பொங்கல் பண்டிகைக்கு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடக்கும். அதற்காக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply