பா.ஜ.க.வின் மாநில பொதுச்செயலாளர் திரு. சரவணபெருமாள் அவர்கள் மறைவு – இரங்கல் செய்தி

மாண்புமிகு மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைதுறை மற்றும் கப்பல்துறை இணையமச்சர் திரு. பொன். இராதாகிருஷ்ணன் அவர்களின் பத்திரிக்கை செய்தி

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பா.ஜ.க.வின் வளர்சிக்காகவும், தேசிய சிந்தனை மேலோங்குவதற்காகவும் உழைத்த பா.ஜ.க.வின் மாநில பொதுச்செயலாளர் திரு. சரவணபெருமாள் அவர்கள் சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் இன்று (21/02/2017) காலை ஈசனடி சேர்ந்தார்.

தூத்துக்குடி நகரத்தில் செல்வமிக்க குடும்பத்தில் பிறந்து, குடும்பத்தின் மேன்மைக்காக வியாபாரத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டும், பா.ஜ.க.வின் கட்சிப் பணியையும் தொய்வில்லாமல் செய்துவந்த திரு சரவண பெருமாள் அவர்கள்  1995ஆம் ஆண்டு முதல் ஒரு முழுநேர ஊழியரைப் போல கட்சிப்பணி ஆற்றி வந்தார். கட்சியின் பல்வேறு பொறுப்பை திறம்பட  வகித்து மாநிலத்தின் பொதுச்செயலாளராக உயர்ந்தார். குடும்பத்தில் ஒரே ஆண் வாரிசான அவருக்கு திருமணம் செய்துவைக்க குடும்பத்தினர் பெரும் முயற்சி செய்த போதெல்லாம் கட்சிப் பணிக்கு அது தடையாக இருக்கும் என்று திருமணமே செய்துகொள்ளாமல் கட்சிக்காக முழுநேரமும் உழைத்து வந்தார்.

திரு. சரவணபெருமாள் அவர்கள் மிகச் சிறந்த சிவ பக்தர். அன்றாடம் பூஜை புனஸ்காரம் செய்யும் பழக்கம் உள்ளவர். தனது உடல்நிலை சர்க்கரை நோயினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு காலில் பல விரல்கள் அகற்றப்பட்ட போதும் விடாப்பிடியாக கட்சிப் பணியை தொடர்ந்தார். அகில இந்திய தலைவர் திரு. அமித் ஷா அவர்கள், அகில இந்திய பொதுச் செயலாளர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பல தலைவர்கள் அவரை சற்று ஓய்வெடுக்க வற்புறுத்திய போதும் கட்சிப் பணியை ஒதுக்கித் தள்ள அவரது மனம் இடம் கொடுக்கவில்லை.

இரண்டு மாதங்களுக்கு முன்பாக மஞ்சள்காமாலை நோயினால் பாதிக்கப்பட்டிருந்த போது சிறிது நாள் ஓய்வெடுங்கள் என்று கட்சியின் அனைத்து தலைவர்களும் அறிவுறுத்திய போதும் தனது உடல்நிலையை பெரிதாகக் கொள்ளாமல் பெரம்பலூரில் நடைபெற்ற தமிழக பா.ஜ.க பயிற்சி முகாம் மற்றும் செயற்குழு பணிக்காக 6 நாட்கள் அங்கேயே தங்கி பணிப்புரிந்தார்கள். அவரது அரசியல் வாழ்வில் எந்த ஒரு பொழுதிலும் தன்னை முன்னிறுதிக்கொள்ள தயங்கியவர். அப்பழுக்கற்ற அரசியல்வாதிக்கு இலக்கணமாகவும், எந்த ஒரு நிலையிலும் கட்சியை தன் குடும்பத்திற்காக சிறிதும் பயன்படுத்தாத பண்பாளராகவும் திகழ்ந்தவர்.

தமிழ்நாட்டின் அனைத்துப் பிரச்சனைகளையும் முழுமையாக அலசி ஆராய்ந்து புத்திபூர்வமான தெளிவினை கொடுக்கும் வல்லமை பொருந்தியவர். இப்படி பல சிறப்பு இயல்புகளை தன்னகத்தே கொண்டு விளங்கிய திரு. சரவணபெருமாள் அவர்களுடைய இழப்பு, தேசிய சிந்தனையும், தமிழ் உணர்வும் கொண்ட நம் அனைவருக்கும் பேரிழப்பாகும். கீதையில் சொல்லப்படுவது போல எதிரிகள் இல்லா மனிதனாக கடைசிவரை வாழ்ந்து மறைந்திருக்கிறார். இந்நேரத்தில் அன்னாருடைய ஆன்மா நற்கதி அடையவும், அவரது இழப்பை தாங்கும் மன வலிமையை அவரது குடும்பத்தாருக்கு இறைவன் அளித்திடவும் எனது பிரார்த்தனைகள்.

–    பொன். இராதாகிருஷ்ணன்

Leave a Reply