ரபேல் விமானம் தொடர்பாக, தவறான கருத்துக்களை கூறிய, காங்கிரஸ்., தலைவர் ராகுல் மன்னிப்பு கேட்கவேண்டும்,” என, பா.ஜ., தேசிய பொதுச்செயலர், ராம் மாதவ் தெரிவித்தார்.

சென்னை, பா.ஜ., அலுவலகத்தில், அவர் அளித்த பேட்டி:’ரபேல் விமானம் வாங்கியதில், எந்தமுறைகேடும் இல்லை’ என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எதிர்க்கட்சிகள் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்திற்கும், தீர்வுவந்துள்ளது. இது குறித்து, பார்லிமென்டில் விவாதிக்க தயாராக உள்ளோம்; எதிர்க்கட்சிகள் தயாரா? வெளிப்படையான, இடைத்தரகர் இல்லாத ஒப்பந்தம் போட்டுள்ளோம். திருடர்கள், நல்லவர்களை பார்த்து, ‘திருடன், திருடன்’ என்பர்; அதுபோல, காங்கிரஸ்., கூறுகிறது. தவறான கருத்துக்களை பரப்பியதற்காக, ராகுல் மன்னிப்புகேட்க வேண்டும்.

தி.மு.க., ஒருநிறுவனம். வாஜ்பாயுடன் கூட்டணி அமைத்தபோது, நன்றாக இருந்தனர். காங்கிரசுடன் சேர்ந்தபின், ஊழல் செய்து, திகார் சிறைக்கு சென்றனர். மீண்டும், திகார் சிறைக்குசெல்ல விரும்பினால், நாங்கள் என்ன செய்ய முடியும்?எங்களை பாஸிச ஆட்சி என்கின்றனர்; திமுக., தான் பாஸிச ஆட்சி நடத்தியது. மெகாகூட்டணி அமைத்தாலும், நாங்கள், அவர்களை எதிர்த்து, வெற்றி பெறுவோம்.

ஐந்து மாநில தேர்தல், லோக்சபா தேர்தலில் எதிரொலிக்காது.பல ஆண்டுகளுக்கு, பிரதமர்பதவி காலியாகாது. ஆனால், பிரதமர் பதவிக்கு, ராகுலை, ஸ்டாலின் அறிவித்துள்ளார். எதன் அடிப்படையில், அப்படி அறிவித்தார் என, தெரியவில்லை.இவ்வாறு, ராம் மாதவ் கூறினார்.

Leave a Reply