துல்லியத் தாக்குதல் நினைவு தினத்தைக்கொண்டாட பல்கலைக் கழகங்களுக்கு அறிவுறுத்தியதன் பின்னணியில் அரசியல் இல்லை என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர்  தெரிவித்தார். 

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் புகுந்து இந்தியராணுவ வீரர்கள் கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 28, 29-ஆம் தேதிகளில் துல்லியத் தாக்குதல்களை நடத்தினர். இந்தத்தாக்குதலில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பயங்கரவாத முகாம்களும் அழிக்கப்பட்டன. அப்போது இந்திய ராணுவ வீரர்களால் பதிவுசெய்யப்பட்ட விடியோ காட்சிகள் கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. 

அப்போது, உத்தரப் பிரதேச தேர்தலுக்காக ராணுவவீரர்களின் தியாகத்தை மோடி தலைமையிலான மத்திய அரசும், பாஜகவும் பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினர். 

இந்த துல்லியத்தாக்குதல் நடைபெற்று வரும் 29-ஆம் தேதியுடன் 2 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில், அனைத்து பல்கலைக் கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள் செப்டம்பர் 29-ஆம் தேதியை துல்லியத்தாக்குதல் தினமாக அனுசரிக்க யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. அன்றைய தினத்தில், என்சிசி மாணவர்களை கொண்டு அணிவகுப்பு, முன்னாள் ராணுவ அதிகாரிகளை கொண்டு சிறப்புவகுப்புகள் நடத்த கல்லூரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் இன்று கூறுகையில், 

"அனைத்து பல்கலைக்கழகங்களையும், துல்லியத்தாக்குதல் நினைவு தினத்தை கொண்டாடுமாறு யுஜிசி அறிவுறுத்தியுள்ளதன் பின்னணியில் அரசியல் இல்லை. அது தேசப்பற்று தான். அதனை கொண்டாட வேண்டும் என்கிற கட்டாயமோ, நிர்பந்தமோ கல்வி நிறுவனங்களுக்கு கிடையாது.

இந்த துல்லிய தாக்குதலை அரசு அரசியலாக்குகிறது என்று எதிர்க் கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டுகள் கேலிக்குரியது, முற்றிலும்தவறானது. காங்கிரஸ் கட்சியில் இருந்து வேறுபட்டுள்ள பாஜக கல்வி நிறுவனங்களுக்கு அறிவுரை மட்டும்தான் வழங்கியுள்ளது. இதுவே காங்கிரஸ் ஆட்சி என்றால், அவர்களுடைய முடிவை கட்டாயமாக்கி திணிப்பார்கள். 

பல்கலைக் கழகங்களுக்கு அறிவுரைதான் வழங்கப்பட்டுள்ளது, இதில் எங்கே இருக்கிறது அரசியல்? இது அரசியல் அல்ல தேசப் பற்று. துல்லியத் தாக்குதல் குறித்தும், ராணுவவீரர்கள் எவ்வாறு களப்பணிகளில் ஈடுபடுவார்கள் என்பது குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்" என்றார். 

கடந்த ஆண்டு ஏன்  இதனை கொண்டாடவில்லை என்று கேள்வி எழுப்பியதற்கு, நல்ல யோசனைகளை எப்போது வேண்டு மானாலும் செயல்படுத்தலாம் என்றார் ஜாவடேகர்.

Leave a Reply

Your email address will not be published.