தெற்குசூடானில் உள்நாட்டுப்போரில் சிக்கித்தவித்த 9 பெண்கள், 3 குழந்தைகள் உள்பட 156 இந்தியர்கள், வெள்ளிக்கிழமை பத்திரமாக தாயகம் அழைத்துவரப்பட்டனர்.

மீட்புப் பணிகள் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது சுட்டுரைப் பக்கத்தில் கூறியதாவது:

தெற்கு சூடானில் இருந்து பத்திரமாக தாயகம்திரும்பியுள்ள சகோதர, சகோதரிகள் அனைவரையும் வரவேற்கிறேன். நெருக்கடியான காலகட்டங்களில் இந்த நாடு (அரசு) எப்போதும் உங்களுக்கு ஆதரவளிக்கும்.

தெற்குசூடானில் இருந்து இந்தியர்களைப் பத்திரமாக மீட்ட இந்திய விமானப்படை அதிகாரிகளின் துணிவைப் பாராட்டுகிறேன். இதேபோல், மீட்புப்பணிகளில் சிறப்பாகச் செயல்பட்ட வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகள், தெற்கு சூடானுக்கான இந்தியத்தூதர் உள்ளிட்டோரையும் பாராட்டுகிறேன் என்று சுஷ்மா தனது சுட்டுரைப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, தெற்கு சூடான் தலைநகர் ஜூபாநகரில் இருந்து 2 "சி-17' போர் விமானங்களில் 2 நேபாளத்தினர் உள்பட 156 பேருடன், வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.கே.சிங். தலைமையிலான இந்திய மீட்புக் குழுவினர் வெள்ளிக்கிழமை காலை திருவனந்தபுரம் வந்தடைந்தனர்.

அவர்களை கேரள மின்துறை அமைச்சர் கடக்கம் பள்ளி சுரேந்திரன், திருவனந்தபுரம் மாவட்ட ஆட்சியர் பிஜு பிரபாகர் உள்ளிட்டோர் வரவேற்றனர். திருவனந்தபுரத்தில் அமைச்சர் வி.கே.சிங், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஜூபா நகருக்கு நாங்கள் சென்றதும், எங்களுடன் 156 பேர் தாயகம் திரும்புவதற்கு புறப்பட்டுவந்தனர். விமானப் போக்குவரத்துத் தொடங்கியதை அடுத்து, 30 முதல் 40 பேர்வரை, விமானத்தில் வருவதற்கு முன்பதிவு செய்து வைத்துள்ளனர். எனினும், தொழில் மற்றும் வேலை வாய்ப்பு காரணமாக, சுமார் 300 பேர் தாயகம் திரும்ப மறுத்துவிட்டனர். அவர்களை சமாதானப்படுத்தி அழைத்துவர முயன்றோம். ஆனால், உயிரைவிட வேலையே முக்கியம் என அவர்கள் கருதுகிறார்கள்.

ஜூபா நகரில் அந்நாட்டு துணை அதிபர் ஜேம்ஸ் வானி இக்காவை சந்தித்துப்பேசினேன். வரும் வழியில், நாங்கள் வந்த விமானங்கள் எரிபொருள் நிரப்புவதற்காக, உகாண்டாவுக்கு சென்றன. அங்கு உகாண்டா பிரதமர் ருகாகனா ருகுண்டாவையும் சந்தித்து நன்றிதெரிவித்தேன்.

ஜூபா நகரிலும், அதன் புறநகர் பகுதிகளிலும் உள்நாட்டுப்போர் தீவிரமடைந்ததை அடுத்து, முதல்கட்டமாக அபாயக்கட்டத்தில் இருப்பவர்களை மீட்கும் பணியைத் தொடங்கினோம் என்றார் அவர். பின்னர், தமிழகம் மற்றும் கேரளத்தைச் சேர்ந்தவர்களை திருவனந்தபுரத்தில் இறக்கிவிட்டபிறகு, அந்த விமானங்கள் தில்லி புறப்பட்டுச் சென்றன.

உள்நாட்டுப்போர் நடைபெறும் தெற்கு சூடானில் 600 இந்தியர்கள் இருப்பதாகவும், அவர்களில் தலைநகர் ஜூபாவில் மட்டும் 400 பேரும், புறநகர்ப்பகுதிகளில் 150 பேரும் இருப்பதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருந்தது.

பிரதமர் பாராட்டு: இந்நிலையில், தெற்குசூடானில் இருந்து இந்தியர்களை மீட்பதில் திறம்படசெயல்பட்ட வெளியுறவுத்துறை அமைச்சகம், பாதுகாப்புத்துறை அமைச்சகம், இந்தியா விமானப்படை, ஏர்-இந்தியா விமான நிறுவனம், ரயில்வே ஆகிய துறைகளின் அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார்.

மேலும், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், தெற்குசூடானில் இருந்து திரும்பிய வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே.சிங் ஆகியோருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

Leave a Reply