விளையாட்டு போட்டிகளை உயர்வடைய செய்யும் பட்சத்தில் தேசிய ஒருங்கிணைப் புக்கான பாதையில் நீண்ட தூரம் செல்ல உதவியாக இருக்கும் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.

டெல்லியில் நேற்று ரிலை யன்ஸ் அறக்கட்டளை இளைஞர் விளையாட்டு அமைப்பை காணொலிகாட்சி மூலம் தொடங்கி வைத்து அவர் பேசும்போது, ‘‘இளைஞர்கள் வலுவான தனிநபர்களாக திகழ விளையாட்டுகளில் பங்கேற்கவேண்டும். விளையாட்டு நம் அன்றாட வாழ்வில் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கவேண்டும். சிலர் விளையாட்டு என்பது உடல்நலனை பேணுவதற்காக மட்டுமே என்று நினைக்கின்றனர்.ஆனால் விளையாட்டு என்பது ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் முக்கியமானது என்று நான் கருதுகிறேன்.

நாம் ஒரு பெரிய பன்முகப்பட்ட நாடாக உள்ளோம். தேசிய ஒருங்கிணைப்பை விளையாட்டு வளர்க்கும் விளையாட்டில் இருந்து நாம் உத்வேகத்தை கற்றுக்கொள்ளலாம். அது நமது சமூக வாழ்க்கைக்கு உந்து சக்தியாக செயல்படக்கூடியது.

விளையாட்டானது தோல்வியை எதிர்கொள்ளும் விதத்தை கற்றுக்கொள்ள உதவும். போராடும் குணத்தையும் பெற உதவியாக இருக்கும். தோல்வியால் மனம் தளர்ந்துவிடக்கூடாது என்பதையும் விளையாட்டு கற்றுக்கொடுக்கிறது. திறமை, விடாமுயற்சி, நம்பிக்கை, பின்னடைவு மற்றும் சகிப்புதன்மை என்பதன் சுருக்கமே விளையாட்டு’’.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply