தேசிய மருத்துவ ஆணையமசோதா மாநிலங்களவையிலும் குரல்வாக்கெடுப்பு மூலம் இன்று (வியாழக்கிழமை) நிறைவேறியது.

மக்களவையில் கடந்த திங்கள்கிழமை அறிமுகப்படுத்தி நிறைவேற்றப்பட்ட தேசியமருத்துவ ஆணைய மசோதா, மாநிலங்களவையில் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்பிறகு, மசோதா மீதான விவாதம் இன்று நடைபெற்றது.

இந்தமசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியதையடுத்து, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்குப்பிறகு விரைவில் சட்டமாக அரசாணையில் வெளியிடப்படும்.

இந்திய மருத்துவ கவுன்சிலுக்குப் பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் கொண்டுவரப்படும். அந்த ஆணையத்துக்கு பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்குவதற்காக மருத்துவ ஆலோசனைக்குழு அமைக்கப்படும்.

தேசிய மருத்துவ ஆணையத்தில் மொத்தம் 29 பேர் உறுப்பினர்களாக இருப்பர். அதில் 20 பேர் நேரடியாக நியமனம் செய்யப் படுவதுடன், 9 பேர் தேர்தல் மூலமாக தேர்வுசெய்யப்படுவர்.

தேசிய மருத்துவ ஆணையத்தால் நிர்ணயிக்கப்படும் தர அளவை அனைத்துமருத்துவக் கல்லூரிகளும் பின்பற்றவேண்டும். நிர்ணயிக்கப்பட்ட தர நிபந்தனைகளை பூர்த்திசெய்து, இயங்குவதற்கான அனுமதியை ஒரு மருத்துவக்கல்லூரி பெறும்பட்சத்தில் ஆண்டுதோறும் அவை தங்களுக்கான அனுமதியை புதுப்பித்துக்கொள்ள வேண்டிய தேவை இருக்காது என மத்திய அரசு நம்புகிறது.

அதேபோல், தேசியமருத்துவ ஆணைய மசோதாவின்படி, எம்பிபிஎஸ் படிப்பின் இறுதி ஆண்டில் நேஷனல் எக்ஸிட் டெஸ்ட் (நெக்ஸ்ட்) என்றபெயரில் பொதுவான தேர்வு நடத்தப்படும்.

இந்தத்தேர்வு முடிவுகளின் அடிப்படையில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர்ச் சேர்க்கை மேற்கொள்ளப்படும். அத்துடன், எம்பிபிஎஸ் படிப்பை நிறைவுசெய்த பின்னர் மருத்துவராக பணியாற்றுவதற்கு உரிமம் பெறுவதற்கான தேர்வாகவும் இது இருக்கும்.

இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு மாற்றாக தேசியமருத்துவ ஆணையம் வருவதனால், நாட்டில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் இந்தமசோதாவுக்கு எதிர்ப்புதெரிவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.