பெரிதும் எதிர்பார்க்கப் பட்ட தேசிய விமானப் போக்குவரத்து கொள்கைக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை தனது ஒப்புதலைவழங்கியது. இதன்மூலம், ஒருமணி நேரப் பயண விமானங்களுக்கான கட்டணம் ரூ.2,500ஆக குறையும்.


இதுதொடர்பாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதிராஜு சுட்டுரை சமூக வலைதளப் பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:


இந்தியாவில் முதல் முறையாக உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த தேசியவிமானப் போக்குவரத்து கொள்கைக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஒப்புதல் அளித்துள்ளது. விமானப்போக்குவரத்து துறையில் இந்த கொள்கை, மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இதன்மூலம், 2020ஆம் ஆண்டுக்குள் இந்தியவிமானப் போக்குவரத்து துறை, உலகிலேயே 3ஆவது பெரியவிமானப் போக்குவரத்து துறையாக மாறும். இந்தச் சாதனையை புரிய வேண்டுமெனில், நமக்கு சரியான நோக்கங்களும், தொலைநோக்கு பார்வையும், திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்தும் திறனும் தேவைப் படுகிறது என்று அந்தப் பதிவுகளில் கஜபதி ராஜு குறிப்பிட்டுள்ளார்.


இந்திய உள்நாட்டு விமானப் போக்குவரத்து துறையானது கடந்த ஏப்ரல் மாதத்துடன் தொடர்ந்து 13ஆவது மாதமாக உலகிலேயே வேகமாக வளர்ச்சியடைந்துவரும் விமானப் போக்குவரத்து துறையாக திகழ்கிறது. ஏப்ரல் மாதத்தில் மட்டும், இந்திய விமான போக்குவரத்து துறை சுமார் 22 சதவீதம் வளர்ச்சிகண்டது. முன்னதாக, மத்திய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கடந்த 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தேசியவிமான போக்குவரத்து கொள்கையை முதல்முறையாக வெளியிட்டது. அந்தக் கொள்கைக்கு கடந்த நிதியாண்டில் ஒப்புதல் பெறப்பட்டு, ஏப்ரல்மாதம் 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அக்கொள்கையில் இருக்கும் சில விதிகள் தொடர்பாக கருத்து ஒற்றுமை ஏற்படாததால் மத்திய அரசு பின்வாங்கி விட்டது.


இந்நிலையில், தேசிய விமானப்போக்குவரத்து கொள்கை தொடர்பான திருத்தப்பட்ட வரைவை மத்திய அரசு கடந்த 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மீண்டும் வெளியிட்டது. அதையடுத்து, இத்துறையில் சம்பந்தப் பட்டிருக்கும் பல்வேறு தரப்பினருடனும் மத்திய அரசு விரிவான பேச்சு வார்த்தை நடத்தி, 8 மாதங்களுக்கு பிறகு அந்தக் கொள்கையை இறுதி செய்தது.


மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள தேசியவிமானப் போக்குவரத்து கொள்கையின்படி, ஒருமணி நேரத்துக்குள் பயண இலக்கை அடையும் குறைந்ததொலைவு விமானங்களில் பயணிகள் கட்டணமாக ரூ.2,500 மட்டுமே விமான நிறுவனங்கள் வசூலிக்கமுடியும். சர்ச்சைக்குரிய 5/20 விதி நீக்கப்பட்டுள்ளதால், உள்நாட்டில் குறைந்தது 20 விமானங்களை கொண்டிருக்கும் எந்த நிறுவனமும் வெளிநாடுகளுக்கு விமானத்தை இயக்கலாம். விமானப் போக்குவரத்து இல்லாத வழித்தடங்களில் விமானங்களை இயக்கும் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அளிக்கப்படும். பிறபகுதிகளை விமான போக்குவரத்து மூலம் இணைப்பதற்கான நிதிக்காக விமான பயணிகளிடம் இருந்து கூடுதலாக சிறியளவில் வரி வசூலிக்கப்படும்.

தேசிய விமான போக்குவரத்துக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பது அந்தத்துறையின் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்த வழிவகுக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சுட்டுரையில் (டுவிட்டர்) கருத்து வெளியிட்டுள்ள அவர்,""இதன் மூலம் விமானப் பயணிகள் மிகுந்த பயனடைவர்'' என்றும் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply