ஒரேநேரத்தில், பாராளுமன்ற, சட்டசபை தேர்தல்கள் நடத்துவது உள்ளிட்ட தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து விரிவானவிவாதம் நடத்தவேண்டிய நேரம் வந்துவிட்டது என்று பிரதமர் மோடி பேசினார்.

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பா.ஜனதா தேசியகவுன்சில் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. நேற்று நிறைவுநாள் நிகழ்ச்சியின் போது, பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு நிறைவுரை ஆற்றினார்.

அப்போது, அவர் பேசியதாவது:–

தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து விரிவானவிவாதம் நடத்தவேண்டிய நேரம் வந்துவிட்டது. தேர்தல் நடைமுறையில் என்ன குறைபாடு உள்ளது, பணபலத்தின் பங்கு, அரசு எந்திரத்தின் பயன் பாடு, ஒரேநேரத்தில் பாராளுமன்ற, சட்டசபை தேர்தல்களை நடத்துவது, தேர்தல்களால் நாடுசந்திக்கும் சுமைகள் உள்ளிட்ட அனைத்து சீர்திருத்தங்கள் பற்றியும் விவாதிக்க வேண்டும்.

இதுதொடர்பாக ஏதாவது செய்யவேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் என்னை வலியுறுத்தி வருகிறார்கள். எனவே, பண்டிட் தீனதயாள் உபாத்யாயா நூற்றாண்டில் இது பற்றி விவாதம் நடத்தவேண்டும்.

இந்த சீர்திருத்தங்கள், பிரதமரின் யோசனை அடிப்படையில் மட்டும் அமைவது நல்லதல்ல. என்னென்ன நல்ல விஷயங்களை சேர்க்கலாம், என்னென்ன விஷயங்களை நீக்கலாம் என்று பார்க்கவேண்டும்.

கடைநிலையில் உள்ள குடிமகனின் உரிமைகளையும் எப்படி வலுப்படுத்தலாம், ஜனநாயகத்தின் ஆணிவேரை எப்படி வலுப்படு த்தலாம் என்று சிந்திக்க வேண்டும். இதை நாம் செய்துவிட்டால், ஆரோக்கியமான ஜனநாயகத்தை உருவாக்குவதில் பெருமளவு வெற்றிபெற்றதாக அர்த்தம்.

உடலில் ஒரு பகுதி காயம் அடைந்தால், ஒட்டுமொத்த உடம்புக்கும் வலிக்கும். அதுபோல், நாட்டின் எந்த மூலையில் உள்ள ஒருகுடிமகன் பாதிக்கப்பட்டாலும் ஒட்டுமொத்த நாடும் வேதனைப்படவேண்டும். யாரும் நமக்கு அன்னியர் அல்ல. நாட்டின் மேற்குப்பகுதி மட்டும் வளர்ச்சிஅடைந்து, கிழக்கு பகுதி பின்தங்குவது நல்லது அல்ல. அப்படி இருந்தால், நமது இந்தியதாய் ஆரோக்கியமாக இருக்க மாட்டாள்.நாட்டின் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு, வளர்ச்சிதான்.

சுதந்திரம் பெற்ற பிறகு, அரசியல்வாதிகளுக்கு சாமானிய மக்களிடையே கெட்டபெயர் ஏற்பட்டு வருகிறது. தன் தந்தை அரசியலில் இருக்கிறார் என்று சொல்லிக்கொள்ள மகன் வெட்கப் படும் நிலைதான் காணப்படுகிறது. எனவே, பா.ஜனதாவினர் தங்கள் நல்லநடத்தை மூலம் முன்னுதாரணமாக திகழவேண்டும்.

எல்லா கட்சியிலும் நல்லவர்கள் இருந்த போதிலும், பா.ஜனதாவில் சற்று அதிகமாகவே உள்ளனர். ஏனென்றால், இது கொள்கை உறுதிப்பாடுகொண்ட கட்சி. நாம் கொள்கையில் சமரசம்செய்து கொண்டிருந்தால், நீண்ட காலத்துக்கு முன்பே ஆட்சியை பிடித்து இருப்போம்.

மதச்சார்பின்மை என்ற சொல்லின்பொருள், தற்போது திரித்து கூறப்படுகிறது. முஸ்லிம்களை நமது சகோதரர்களாக நடத்தவேண்டும். அவர்களுக்கு அதிகாரம் அளிக்கவேண்டும். அவர்களை ஓட்டு வங்கியாக பார்க்கக்கூடாது.

பாரீஸ் பருவநிலை மாற்ற உடன் படிக்கைக்கு மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2–ந் தேதி இந்தியா ஒப்புதல் அளிக்கும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Leave a Reply