தொழிலதிபர்களால் வாங்கப்பட்ட கடன்களை பிரதமர் நரேந்திரமோடி தள்ளுபடி செய்துவிட்டதாக தெரிவித்துவரும் குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நிரூபிக்க வேண்டும் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.


 கர்நாடக மாநிலம், ஹும்னாபாதில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற கரும்பு விவசாயிகளுடனான கலந்துரையாடலின் போது, இதுகுறித்து அமித் ஷா கூறியதாவது:


 ஒரு விஷயத்தை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். தொழில திபர்கள் வாங்கிய கோடிக்கணக்கான ரூபாயை பாஜக தள்ளுபடி செய்துவிட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திரும்பத்திரும்ப குற்றச்சாட்டு தெரிவித்து வருகிறார். ஆனால், மத்தியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு அமைந்ததும், தொழிலதிபர்கள் வாங்கிய கடனில் ஒருபைசா கூட தள்ளுபடி செய்யப்படவில்லை என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.


 தொழிலதிபர்கள் பெற்ற கடன்கள் எங்கேனும் தள்ளுபடி செய்யப்பட்டது தொடர்பான ஆதாரம், ராகுலிடம் இருக்கும் பட்சத்தில், அதை அவர் வெளியிட வேண்டும். அப்படி அதை அவர் வெளியிட்டால், நான் அதுகுறித்து பதிலளிக்க தயாராக உள்ளேன். அதற்காக கர்நாடக விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்பேன். இதேபோல், தொழிலதிபர்களுக்கு வரியும் ரத்துசெய்யப்படவில்லை. சிறிய அளவில் மட்டும் வரி குறைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு வருமானவரி எதுவும் விதிக்கப்பட வில்லை. எதிர்காலத்திலும் விவசாயிகளுக்கு வரி விதிக்கப்பட மாட்டாது. விவசாயிகள் நலன்கள் மீது மத்திய அரசு முழு அக்கறைகொண்டு செயல்பட்டு வருகிறது.

கர்நாடகத் தேர்தலுக்குப் பிறகு, பாஜக ஆட்சியமைத்ததும், விவசாயிகள் நலத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தும்.
 கர்நாடகத்தில் எங்கள் கட்சிக்கு ஆட்சிக்குவந்தால், 90 நாள்களுக்குள் கரும்பு ஆலைகள், கரும்பு விவசாயிகளுக்கு அளிக்க வேண்டிய நிலுவைத் தொகைகளை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதை பாஜகவின் தேர்தல் அறிக்கையில் நாங்கள் சேர்ப்போம்.
 மத்தியில் ஆளும் பாஜக அரசால், விவசாயிகள் நலன்தொடர்பாக பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆனால், கர்நாடகத்தில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் அரசு, அத்திட்டங்கள் விவசாயிகளை சென்றடைய அனுமதிக்க வில்லை. இதை அனுமதித்தால், கர்நாடகத்தில் பாஜகவின் செல்வாக்கு அதிகரித்து விடும் என்று காங்கிரஸ் அரசு அச்சப்படுகிறது.


 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் மற்றும் அதன்பிறகு அதன்பிறகு பல மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்ளில் பாஜக வென்றதற்கு, விவசாயிகள் மத்தியில் கட்சிக்குஇருக்கும் ஆதரவே காரணமாகும் என்றார் அமித் ஷா.


 முன்னதாக, பிதரில் இருக்கும் புகழ்பெற்ற சீக்கிய குருத்வாராவுக்கு அமித்ஷா சென்று வழிபட்டார். இதேபோல், பிதரில் தற்கொலை செய்துகொண்ட விவசாயியின் இல்லத்துக்கு நேரில் சென்று, அவரது குடும்பத்தினருக்கும் அமித் ஷா ஆறுதல் கூறினார்.

Leave a Reply