நம் இந்தியாவில் ஏராளமானோர் சிறு தொழில்முனைவோர்களாக உள்ளனர். ஆனால் இவர்கள் வெளியுலகில் பெரிதாய் அறியப்படுவதில்லை. சொந்தமாக தொழில் தொடங்க வேண்டுமெனில், பெரிய முதலீடும், சிறந்த ஐடியாவும் வேண்டும் என்பதே பொதுவான கருத்தாகும். தொழில் முனைவோரை ஊக்கப்படுத்தும் விதத்தில் இந்திய அரசு 'ஸ்டார்ட் அப் இந்தியா' திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஆனால் அத்திட்டத்தைப் பற்றிய தெளிவான புரிதலும், திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த தகவல்களும் தொழில்முனைவோர்களுக்கு சரிவர தெரியவில்லை. இதற்கு பலத்தரப்பட்டோரின் மாற்று கருத்துகளும் காரணமாகும். 

ஆனால் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கத்தான் 'ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம்' முயல்கிறது என்ற கருத்தையும், இந்தியாவில் தொழில்முனைதல் பற்றிய தெளிவான தகவல்களை எடுத்துரைக்கும் வகையில் சென்னையில் Tie நடத்திய "ஸ்டார்ட் அப் இந்தியா! ஸ்டான்ட் அப்  இந்தியா!" நிகழ்ச்சியில் பேசிய, பட்டய கணக்காளரும் (chartered accountant), தொழில் முனைவோருக்கு வழிகாட்டும் தன்னார்வலருமான திரு. எம்.சத்ய குமார் விளக்கிக் கூறிய கருத்துகளைக் காண்போம்!

பன்னாட்டு நிறுவனங்கள் கோடிக்கணக்கில் தொழில் செய்தாலும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் (SME, MSME) தான், இந்திய மொத்த பொருளாதாரத்தை ஆளுகிறது. இதுதான் இந்திய ஸ்டார்ட் அப்களை ஊக்குவிக்கவும் முக்கிய காரணமாகும். அதனை வரிச் சலுகைகள் கொடுத்தும், நல்ல புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தியும், 'ஸ்டார்ட் அப் இந்தியா' 'ஸ்டான்ட் அப் இந்தியா' மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி தொழில்முனைவை இந்தியாவில் நிலைநாட்டச் செய்ய அரசு முயற்சி எடுத்து வருகிறது.

பெரிய அளவிலான ஸ்டார்ட் அப்களுக்கு மட்டும் உதவுவது அல்லாமல், சிறிய அங்கீகரிக்கப்பட்ட ஐடியாக்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து ஊக்குவிக்கவே இம்முயற்சி.

இது ஒரு செயலே! சட்டம் அல்ல!

அதனால் இதற்குரிய சட்டத்திட்டத்தில், இன்னும் சில திட்டங்களை அமல்படுத்தக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அமல்ப்படுத்தப்படவும் உள்ளது.

வேலை வாய்ப்புகள் உருவாக்கும் ஸ்டார்ட் அப்ஸ் 

நம் நாட்டில் 80% பொறியாளர்கள் வேலை இல்லாமல் உள்ளனர். 

* எண்ணற்ற வேலைவாய்ப்புகள் இருந்தும், வேலை கிடைக்கவில்லை எனில், அவன்   சுயமாக சிந்திக்கும் திறனும் புதிய கண்டுப்பிடிப்புகள் மேற்கொள்ளும் திறனும்      இல்லாமல் இருக்கிறான் என்பதே உண்மையாகும்.

* படிப்பிற்கும் வேலைக்கும் வேறுபாடுகள் அதிகம் உள்ளது. திறன் மேம்பாட்டுக்கும்    வேலை இல்லாததற்கும் இதுவே காரணமாகும். துறைக்கேற்ற உரிய பயிற்சிகள்    இருந்தால்தான் திறனை வளர்க்க முடியும். முன்னேற முடியும். அதற்கு வழிசெய்ய  தொடங்கப்பட்டதே, ஸ்டார்ட் அப்.

"அனைவரையும் தொழில்முனைவோராய் மாற்றுவது சாத்தியம் இல்லை. ஆனால், அவர்களை சுயமாக புதிய வழிகளில் சிந்திக்க வைக்கமுடியும்".

'ஸ்டார்ட் அப்' – வெற்றி வியூகம்

ஸ்டார்ட் அப் என்றாலே தற்போது பரவலாய் பேசப்படும் பெயர்கள் Ola, Uber போன்ற ஆப்ஸ் அல்லது தொழில்ம்நுட்பம் சார்ந்த கண்டுபிடிப்புகள் தான் என்று நினைத்துக் கொண்டுருக்கிறோம். ஆனால், எந்த ஒரு நடைமுறைப்படுத்தக் கூடிய புதிய ஐடியாகளும் ஸ்டார்ட் அப் தான்.

"சமூகத்திலுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் புது எண்ணங்களே, ஸ்டார்ட்அப் ஆகும்"

ஒவ்வொரு தொழில்முனைவோரும் சமூகத்திலுள்ள பிரச்சனைக்களுக்கு தீர்வாகவே தொழிலை ஆரம்பிக்கின்றனர். சமூக நலனுக்காக தொழில்முனைதலால், தொடங்கப்பட்ட தொழிலை பெரியளவில் விரிவடைய செய்யவும் அவர்களால் முடிக்கிறது.

கோவை பழமுதிர்சோலை, யஷ்ராஜ் க்ஹைதானின் "க்ராம்பவர்", பார்வையற்ற ஸ்ரீகாந்த் போலாவின் "பொலன்ட் இன்டஸ்ட்ரீஸ்", கோயம்புத்தூர் வேலுமணியின் 'தைரோகேர்,' வித்யா மற்றும் லக்ஷ்மணனின் 'சார்மினார் – ஜீரோ ஆயில் பிரியாணி', அருணாச்சலம் முருகானந்தத்தின் வீட்டிலே தயாரிக்கக் கூடிய சுகாதார நேப்கின்ஸ் இயந்திரம், கண் தெரியாதவர்களுக்கும் காது கேட்காதவர்களுக்கும் ரூமா ரோகா அமைத்த பாதை, போன்றவை இதற்கு சிறந்த எடுத்துக்காட்டுகள் ஆகும்.

"புதிய பொருள் தயாரிப்பு (Product innovation) மற்றும் செயல்முறைப்படுத்தக்கூடிய கண்டுப்பிடிப்பு (Process innovation)" என ஸ்டார்ட் அப் கள் இரு வகை கொண்டது.

'ஸ்டார்ட் அப் இந்தியா'வில் விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:

தொழில் முனைய ஒரு ஐடியா கிடைத்தால், அதனை "ஸ்டார்ட்அப்" திட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு செயல்படுத்தலாம். அதற்கு வழிமுறைகளாய்:

– முதலில் அருகிலுள்ள IIT மற்றும் IIM போன்ற நிறுவனங்களிலுள்ள இன்குபேஷன் சென்டர்ஸில் (Incubation centers) தெரிவிக்க வேண்டும். அவர்கள் அந்த புதிய ஐடியாவை சரிப்பார்த்து, இந்தியன் காப்புரிமை அலுவலகத்திடம் இருந்து, காப்புரிமை சான்றிதழ் அளிப்பார்கள்.

பலர் அவர்களது ஐடியாக்களுக்கோ, கண்டுப்பிடிப்புகளுக்கோ, காப்புரிமை (patent) / அறிவுசார் சொத்துரிமை (Intellectual Property Rights) வாங்குவது இல்லை. காப்புரிமை இல்லாததால், அவர்கள் கண்டுபிடிப்பு காப்புரிமை உள்ள வேறொருவருக்கு சொந்தமாகிவிடுகிறது. இதற்குக் காரணம், இந்தியாவில் செயல்படுத்த எடுக்கும் கால அவகாசமும், பதிவு செய்ய பணத்தேவையும் தான். அதனால் அரசு, காப்புரிமை / அறிவுசார் சொத்துரிமையை 90 நாட்களுக்குள் கிடைக்க வழிசெய்யும் வேக செயல்பாட்டுத் திட்டமும் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது.

– இந்த சான்றிதழ் கொண்டு டி.ஐ.ஐ.பி -யின் (Department of Industrial policy and Promotion), இன்டெர்  மினிஸ்டரியல் போர்டு குழுவிடம் (Inter ministrial Board) விண்ணப்பிக்க வேண்டும். அவர்கள்,  அதனை மதிப்பீடு செய்து, ஸ்டார்ட் அப்ஸ் வரிச்சலுகைகள் போன்ற பயன்கள் பெற தகுதி  சான்றிதழ் அளிப்பார்கள். அந்த சான்றிதழ் பயன்படுத்தி தொழில்முனைவோர், ஸ்டார்ட் அப்  இந்தியா அம்சங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஐந்து வருடத்திற்கு இந்தியாவில் பதிவு செய்யப்பட்டு, வருடத்திற்கு 25 கோடிக்கு மிகாமல் விற்பனை விகிதம் காணும் நிறுவனமே, ஸ்டார்ட் அப் எனப்படும்.

ஆண்டுக்கு 25 கோடி வருமானம் காணாத, முன்னேரே தொழில் தொடங்கியவர்களும், இந்த திட்டத்தில் இணையலாம்.

ஸ்டார்ட் அப் தொடங்க இத்தனை விதிமுறைகளா?

இந்த ஜனநாயக நாட்டில் பலன்கள் கிடைக்கவேண்டுமெனில், விதிமுறைகளைப் பின்பற்றித்தான் ஆகவேண்டும். திட்டங்கள் வலிமையாக இருந்தால்தான், அனைவரும் பயன்பெறமுடியும். இந்த வழிமுறைகளை எளிதாக்கத் தான், முதலீடு செய்யக்கூடிய நிதியாளர்கள் பட்டியல் முதற்கொண்ட விவரங்களுடன், ஆன்லைனில் ஸ்டார்ட் அப் பதிவு செய்ய http://startupindia.gov.in/ எனும் இணையதளத்தமும், இந்த வருடம் ஏப்ரல் 5 அன்று மொபைல் ஆப் (app) வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய ஸ்டார்ட் அப் நிலவரம்

இதுவரை இந்தியாவில் 10,000-திற்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப்ஸ் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த வருடம் மட்டும் 4200 ஸ்டார்ட் அப்ஸ் துவங்கப்பட்டுள்ளன. அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளுக்கு அடுத்தப்படியாக, இந்தியா ஸ்டார்ட் அப்ஸில் மூன்றாம் இடத்தில் உள்ளது.

மார்ச் மாதத்தில் வெளியிடப்பட்ட இன்டர்நேஷனல் மானிடரி ஃபண்ட் -இன் அறிக்கைப்படி , BRICS நாடுகளில் இந்தியாவும் சீனாவையும் ஒப்பிடுகையில், சீனா 6.3 சதவீதமும் இந்தியா 7.5 சதவீதமும் பொருளாதார வளர்ச்சி காண்கிறது. பிரேசில், ரஷ்யா மற்றும் சவுத் ஆப்ரிக்காவும் எதிர்மறை வளர்ச்சியைத்தான் காண்கின்றன. அதுமட்டுமின்றி, 1.3 பில்லியன் மக்கள்தொகை உள்ள இந்தியாவில், 63% மக்கள் இளைஞர்கள் ஆவர். இந்திய தொழில்முனைவோர்களின் சாராசரி வயது 28 ஆகும். இதுவே, நம் நாட்டின் பொருளாதாரத்தின் வெற்றிக்கான அறிகுறியாகும்.

அதுவும், தமிழ்நாட்டில் சிறு மற்றும் நடுத்தர ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் கோயம்புத்தூர் முதலிடம் வகிக்கிறது. இன்று திருப்பூரில் மட்டும் ஏற்றுமதியின் நிலவரம் 30,000 கோடி ஆகும். அங்கு வருமான வரி சேகரிப்பு கணக்கு 700 கோடியாம். இதற்கு அந்த இடத்தில் உள்ள மக்களின் ஆர்வம் மட்டுமே காரணம். இதேபோல், சென்னை, பெங்களூர் மற்றும் புனேவிலும் தொழில்முனைவோர்கள் எண்ணிக்கை அதிகம்.

இந்தியாவிலுள்ள 4000க்கும் மேற்பட்ட தொழில்நுட்பம் சார்ந்த ஸ்டார்ட் அப்களில், 33% மின் வர்த்தகம், 24% வணிகத்துக்கிடையே தொழில்கள் (B2B),12% இன்டர்நெட் உட்கொள்ளுதல், 10% மொபைல் ஆப்ஸ், 8% சாப்ட்வேர் சேவைகள், 13% மற்றவைகள் ஆகும்.

தொழில்நுப்டம் தவிர, மீதமிருக்கும் ஏறத்தாழ 5700 ஸ்டார்ட்அப்ஸில், 17% பொறியியல், 13% கட்டுமான நிறுவனங்கள், 11% விவசாயம், 8% ஜவுளி, 8% ப்ரிண்டிங் பெக்கேஜஸ், 6% போக்குவரத்து,  5% அவுட்சொர்சிங் சேவைகள், மற்றவை 32% உள்ளன.

ஸ்டான்ட் அப் இந்தியா!

தொழில் முனையும் மகளிர்களுக்கும் பிற்படுத்தப்பட்டோர்க்கும் உதவ உருவாக்கப்பட்ட வேர்தான், "ஸ்டான்ட் அப் இந்தியா". ஸ்டார்ட் அப் இந்தியா திட்டங்களுடன் கூடுதல் சலுகைகளும் இவர்களுக்கு வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் இவர்களுக்கு 10 லட்சத்தில் இருந்து ஒரு கோடி வரை, வங்கிக் கடன் பெறும் வசதியுமுண்டு. இவர்கள் எளிதாக பதிவு செய்ய https://www.standupmitra.in/ என்ற இணையதளத்தை அணுகவும்.

இந்தியாவில் பெண் தொழில் முனைவோர்கள் எண்ணிக்கை 2014இல் ஆறு சதவிதத்தில் இருந்து 2015இல் பத்து சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும் வளர ஊக்குவிக்கவே, ஸ்டான்ட் அப் இந்தியா திட்டம் முயன்று வருகிறது.

ஆலோசனை நிறுவனத்தின் அறிக்கைப்படி, 2025 இல் ஒரு லட்சம் ஸ்டார்ட் அப் களுடன், வேலை வாய்ப்புகள் 35,000 கோடியாகவும், 500 பில்லியன் டாலர் வருவாயுடன், உலகளவில் வர்த்தகத்தில் இந்தியா முதலிடம் பெரும் என எதிர்ப்பார்க்கப்படுக்கிறது!

Leave a Reply