அனைத்து மாநிலங்களின் ஒத்துழைப்புடன் நதி நீர் இணைப்புப்பணிகள் விரைவில்தொடங்கும் என மத்திய அமைச்சர் சதானந்தகவுடா தெரிவித்தார்.

விருதுநகர், சுலோக்சனா தெருவில் உள்ள காமராஜர் இல்லத்தில் அவரது உருவசிலைக்கு வியாழக்கிழமை புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சர் சதானந்த கவுடா, பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் மற்றும் மாநிலச் செயலர் சீனிவாசன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதன் பின்னர் மத்திய அமைச்சர் சதானந்தகவுடா செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாடுமுழுவதும் சுதந்திரப் போராட்ட தியாகிகளை போற்றி நினைவுகூறும் வகையில் மூத்த தலைவர்கள் சுற்றுப் பயணம் செய்து வருகிறோம். அதன்படி, வியாழக்கிழமை காலை சிவகங்கை வேலு நாச்சியார் மணி மண்டபம், திருப்பத்தூர் மருது சகோதரர்கள் நினைவிடம் சென்று நான் பார்வையிட்டேன். அதேபோல், தற்போது காமராஜர் பிறந்தவீட்டுக்கு வந்திருப்பது எனக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. நாட்டில் நதி நீர் இணைப்பு முன்னாள் பிரதமர் வாஜ்பாயால் கொண்டுவரப்பட்டது. தற்போது குஜராத், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் நதிநீர் இணைப்புக்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்றுவருகின்றன. மேலும், அனைத்து மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் நதிநீர் இணைப்பு பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றார்.

Leave a Reply