மத்திய அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள் மூலமாக முஸ்லிம்கள் பெருமளவில் பயனடைந்திருப்பார்கள் என தாம் நம்புவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

 முஸ்லிம் மதத்தின் ஷியாபிரிவு குருமார்கள் மெளலானா கல்பே ஜாவத், சாகித் சித்தி உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் மோடியை தில்லியில் புதன் கிழமை சந்தித்து பேசினர்.

 அப்போது இருதரப்பிலும் நடைபெற்ற ஆலோசனை குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

 சவூதி அரேபியாவுக்கு அண்மையில் பிரதமர் மேற்கொண்ட பயணம் வெற்றி கரமாக அமைந்தது, முஸ்லிம் குழு வினர் பாராட்டு தெரிவித்தனர். மேலும், மோடி முன்னெடுக்கும் வளர்ச்சி நடவடிக்கைகளை பார்த்து மேற்கு ஆசியா, மத்திய ஆசியா, வடஆப்பிரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்கள், குறிப்பாக, இளைஞர்கள் பெருமளவில் ஈர்க்கப்பட்டு வருவதாக அந்தக்குழு தெரிவித்தது.

 இதையடுத்து, முஸ்லிம் குழுவினருக்கு மோடி தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார். கல்விக்கு, குறிப்பாக, பெண்குழந்தைகளின் கல்விக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும் என அவர் உறுதியளித்தார்.
 தேசிய ஜனநாயக கூட்டணி அரசு செயல் படுத்தி வரும், பயிர்க் காப்பீட்டுத்திட்டம், முத்ரா வங்கித்திட்டம் உள்ளிட்ட நலத்திட்டங்களால் முஸ்லிம்கள் பெருமளவில் பயனடைந் திருப்பார்கள் என்று அந்த குழுவிடம் மோடி தெரிவித்தார் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply