பார்லிமென்டில் தங்களுக்கு பெரும்பான்மை இல்லை என்பதுதெரிந்தும், எதிர்க் கட்சிகள், இந்த அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்துள்ளன. நாட்டு மக்களின் வளர்ச்சியில் அக்கறை இல்லாத எதிர்க் கட்சியினர், இந்த அரசு மீது, நம்பிக்கையில்லா தீர்மானத்தை திணித்துள்ளனர்.


நாட்டில் உள்ள, 125 கோடி மக்களின் ஆசிர்வாதம், இந்த அரசுக்கு உள்ளது. நிறையபேர் பிரதமர் ஆக வேண்டும் என்ற கனவில் உள்ளனர். பிரதமர் பதவியை பிடிக்க அவ்வளவு அவசரமா? நாட்டுமக்களின் ஆசிர்வாதத்தால், நான் இங்கு அமர்ந்திருக்கிறேன். பிரதமர் ஆக ஆசைப்படு வோருக்கு, மக்கள் நலனில் அக்கறை கிடையாது.அனைத்து தரப்பினர் வளர்ச்சி என்பதை இலக்காக வைத்து, இந்தஅரசு செயல்பட்டு வருகிறது. தலித்துகள், மலைவாழ் மக்கள், ஏழைகள் வளர்ச்சியில் இந்த அரசு அக்கறை வைத்துள்ளது. அவர்களின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்திவருகிறது.


வடகிழக்கு மாநிலங்களில் வசிக்கும் மக்கள் நலனில் அக்கறைசெலுத்தியதால், அங்குள்ள கிராமங்களில் இன்று மின்சாரம் கிடைக்கிறது. 32 கோடி வங்கி கணக்குகள், 'ஜன்தன்' திட்டத்தின் மூலம் துவக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.'உஜ்வாலா யோஜனா'வின் மூலம், 6.5 கோடி பெண்களுக்கு, 'காஸ்' இணைப்பு கிடைத்துள்ளது. 'பீமா யோஜனா' மூலம் கோடிக்கணக்கான ஏழைகள் காப்பீடு வசதி பெற்று உள்ளனர்.மக்கள் நலனில் அக்கறை செலுத்தும் இந்த அரசு மீது, எதிர் கட்சிகளுக்கு நம்பிக்கை இல்லை.


மத்திய அரசின் திட்டங்கள் மீது, எதிர் கட்சிகளுக்கு நம்பிக்கை இல்லை. மத்திய அரசு திட்டங்களால், 15 கோடி விவசாயிகள் பலன் அடைந்துள்ளனர்.இன்று, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள், 'ஸ்டார்ட் அப் இந்தியா' திட்டத்தின் மூலம், தொழில் முனைவோர் ஆகியுள்ளனர்.


'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தை செயல் படுத்திய போது, 'நம் தேசம் எழுத்தறிவற்றது. டிஜிட்டல் திட்டம் எப்படி சாத்தியமாகும்' என, எதிர்க்கட்சிகள் கிண்டல் செய்தன.ஆனால், திட்டம் செயல்படுத்தப்பட்ட ஒரே மாதத்தில், பல ஆயிரம் கோடி ரூபாய் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. மக்கள், இந்த அரசின் திட்டங்கள் மீது நம்பிக்கை வைத்தனர்.


இதனால், இந்த திட்டங்களை வெற்றி அடையசெய்ய முடிந்தது.'மேக் இன் இந்தியா' அல்லது ஜி.எஸ்.டி., போன்ற எந்த திட்டத்திலும், எதிர்க் கட்சிகளுக்கு நம்பிக்கை இல்லை. ஆனால், இந்த திட்டங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளன. இது, இந்த அரசின் வெற்றி அல்ல; 125 கோடி மக்களின் வெற்றி.

அதற்காகவாவது, இந்த திட்டங்களை வரவேற்க வேண்டும்; பாராட்ட வேண்டும். ஆனால்,சிலருக்கு அதற்கு கூட மனம் இல்லை. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்லும் பணிகள் நடந்து வருகின்றன. நாட்டில், 13 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. நாட்டு மக்களுக்கு நம்பிக்கை உள்ளது. உலக நாடுகளுக்கு நம்பிக்கை உள்ளது. ஆனால், தன்னை தானே நம்பாதவர்களால், எப்படி நம்பிக்கையை ஏற்படுத்த முடியும்?


காங்கிரசாருக்கு தங்கள் மீதே நம்பிக்கை இல்லை. இந்த அவநம்பிக்கையால் தான், அவர்கள் தற்போது வீழ்ந்துள்ளனர். நாட்டின் மீது நம்பிக்கை கிடையாது. ரிசர்வ் வங்கி மீது நம்பிக்கை இல்லை. உலக வங்கி மீது நம்பிக்கை இல்லை. உலக அரங்கில், நம் நாட்டின் கவுரவம் எப்படி உயர்ந்துள்ளது என்பதில் கூட, அவர்களுக்கு நம்பிக்கை இல்லை.இதுவரை, 4,500 பினாமி சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


ஊழல் தடுக்கப்பட்டதில், சிலருக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது. ஊழல் மூலம் கிடைத்த நிதி தடைபட்டதில் அவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டது. பகவான் சிவன் மற்றும், 125 கோடி மக்களிடமும் பிரார்த்திக்கிறேன். வரும், 2024ம் ஆண்டிலும், நீங்கள் மீண்டும் நம்பிக்கை யில்லா தீர்மானம் கொண்டு வாருங்கள்.நாட்டு மக்களின் நலனில் சிறிதும் அக்கறை இல்லாதவர்கள், நாட்டின் பாதுகாப்புகுறித்து கேள்வி எழுப்புகின்றனர்.


ரபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து கேள்வி எழுப்பிஉள்ளனர். இது ஏதோ சாதாரண வியாபார ஒப்பந்தம் கிடையாது. இரு நாடுகளிடையே போடப்பட்ட ஒப்பந்தம். நாட்டின் பாதுகாப்பு விஷயங்களில்கூட மிகவும் சிறுபிள்ளை தனமாக கேள்வி எழுப்புகின்றனர்.நாட்டு மக்களை காக்கும் வீரர்களின் வீரத்தின் மீது கேள்வி எழுப்பினர். எதிரிகளை துவம்சம்செய்த வீரர்களின் வீரத்தின் மீது, 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' மீது சந்தேகம் எழுப்பினர்.


முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது, வெறும் ஒரு ஓட்டு வித்தியாசத்தில், அரசை கவிழ்த்தனர். ஆனால், வெறும், 13 மாதங்களில், முழு பெரும்பான்மையுடன் மீண்டும், பா.ஜ., தலைமையிலான ஆட்சி அமைக்கப்பட்டது.தேவையற்ற தேர்தல்களை திணித்து, நாட்டில் நிலையற்ற தன்மையை உருவாக்கியதில், காங்கிரசுக்கு முக்கியபங்கு உண்டு. நான் ஒரு சாதாரண ஏழைத்தாயின் மகன். என்னால் எப்படி, ராகுல் போன்ற பணக்காரர்களின் கண்ணை பார்த்து பேச முடியும்?


நேதாஜி, சவுத்ரி சரண், ஜெய் பிரகாஷ் நாராயண், சர்தார் வல்லபாய் படேல், சந்திரசேகர், பிரணாப் முகர்ஜி உள்ளிட்டோரின் கண்களில் தீயை ஊற்றியது காங்கிரஸ்.. காங்கிரசின் கண்ணை பார்த்து பேசியவர்களின் நிலை என்ன என்பது மக்களுக்கு நன்கு தெரியும். அப்படி இருக்கையில், அவர்களின் கண்ணை பார்த்து, நான் எப்படி பேச முடியும்; பார்லிமென்டில், காங்., தலைவர் ராகுல் கண்ணடித்ததை நாடே பார்த்துக் கொண்டிருந்தது.


நாங்கள், நாட்டை காக்கும் காவல்காரர்கள் இல்லை; ஓட்டக்காரர்கள் என, எதிர்க்கட்சிகள் கிண்டல் அடித்தனர். ஆம், நாங்கள் ஏழைகளின் துக்கத்தை விரட்டும் ஓட்டக்காரர்கள். நாட்டை காக்கும் காவலர்கள்; ஆனால், காங்கிரசாரை போல், நாட்டை விற்கும் செயலில் ஒருபோதும் ஈடுபடமாட்டோம்.


ஆந்திராவை இரண்டாக பிரித்து, ஆதாயம்தேட முயன்ற காங்கிரசுக்கு, தோல்வி மட்டுமே மிஞ்சியது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவின் வளர்ச்சியில் எந்த குறையும் இருக்கக்கூடாது என்பதில், தே.ஜ., தலைமையிலான அரசு உறுதியாக இருந்தது.சிறப்பு அந்தஸ்து என்பதைவிட சிறப்பானது, சிறப்பு நிதி என்பதை அறிந்து, அதை அளித்தோம். ஆந்திர மக்களின் நலன், விருப்பத்தை, மத்திய அரசு மதிக்கிறது. இதனால், அந்த மாநிலத்திற்கு, சிறப்பு நிதி அளிக்கப்பட்டது. 2016 நவம்பரில், இந்த சிறப்பு நிதியைபெற்று, மத்திய நிதி அமைச்சருக்கு, சந்திரபாபு நாயுடு நன்றி செலுத்தினார்.


ஒய்.எஸ்.ஆர்., காங்கிரசின் சூழ்ச்சி வலையில் நீங்கள் சிக்காதீர்கள் என, சந்திர பாபுவிடம் கூறினேன். ஒரு பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டத்தை அமல் படுத்தினோம். எல்லா மாநில முதல்வர்களின் ஒத்துழைப்புடன், ஜி.எஸ்.டி.,யை அமல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், மத்திய அரசு செயல்பட்டது.இதற்காக, அனைத்து கட்சிகளையும் கலந்து பேசி முடிவெடுத்தோம்.நாங்கள் தன்னிச்சையாக செயல்பட வேண்டும் என நினைத்திருந்தால், இந்த வரி விதிப்பு முறை எப்போதோ நிறைவேறியிருக்கும். ஆனால், நாங்கள் அப்படி செய்யவில்லை.


காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, தொடர்ந்து மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை அளித்து வந்தது. ஆனால், நாங்கள் சொன்னதை செய்கிறோம். 2009 – 14 வரை, காங்., அரசு, பல கோடி ரூபாய் கொள்ளையடித்துவிட்டது.

கடந்த, 60 ஆண்டுகளில், 18 லட்சம் கோடி ரூபாய் விவசாய கடன் தரப்பட்டது; ஆனால், எங்கள் ஆட்சி காலத்தில், 52 லட்சம் கோடி ரூபாய், விவசாய கடன் கொடுக்கப்பட்டுள்ளது. பா.ஜ., தலைமையிலான ஆட்சியில், வரி விதிப்பு முறை சீர் செய்யப்பட்டுள்ளது. மக்கள் கட்டும் வரி முழுவதும், அரசின் கஜானாவை சரியாக சென்றடைகிறது. இதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. வங்கி செயல்பாடுகள் செய்த சீர்திருத்தங்களின் மூலம், பொருளாதார நிலை வளர்ச்சி அடைந்துள்ளது.


பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 21ம் நுாற்றாண்டில், நாட்டின் கனவை நனவாக்கும் முயற்சியில், இந்த அரசு செயலாற்றி வருகிறது. பிரதமர் மோடி, லோக்சபாவில் நேற்று பேசியது

Tags:

Leave a Reply