அமைப்புகள், தனிப்பட்ட நபர்கள் ஏற்பாட்டின் பேரில் வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் செல்லும்போது நடந்து கொள்ளும்முறை குறித்து, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மத்தியஅரசு புதிய அறிவுரை வழங்கியுள்ளது.
 இது தொடர்பாக மாநிலங்களவை செயலர் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் புதிய சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:


 அமைப்புகள், தனிப்பட்டநபர்கள் ஏற்பாட்டின் பேரில் வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்யும் எம்.பி.க்கள், அந்த பயணம் மேற்கொள்வதற்கு குறைந்தது 2 வாரகாலத்துக்கு முன்பு மத்திய உள்துறையின் ஒப்புதலுக்காக விண்ணப்பத்தை அனுப்பி வைக்கவேண்டும். இதேபோல், வெளிநாட்டு சுற்றுப் பயணங்களுக்கு வெளியுறவு அமைச்சகத்தின் ஒப்புதலையும் எம்.பி.க்கள் பெற வேண்டும்.


 சுற்றுப்பயண அழைப்பிதழை ஏற்பதற்கு முன்பு, அந்தப் பயணத்துக்கு ஏற்பாடு செய்யும் அமைப்புகள் அல்லது நிறுவனங்களின் நம்பகத்தன்மை குறித்து மத்திய உள்துறையிடம் எம்.பி.க்கள் தெரிவிக்க வேண்டும்.


 அமைப்புகள், தனி நபர்கள் ஏற்பாட்டின் பேரில் வெளிநாடுகளில் சுற்றுப்பயணங்கள் செய்யும்போது, அந்நாடுகளில் இந்திய அரசின்சார்பில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது போன்ற தோற்றத்தை உருவாக்ககூடாது.


 இதை எம்.பி.க்கள் அனைவரும் உறுதிசெய்ய வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இதேபோன்ற சுற்றறிக்கையை மத்திய உள்துறையின் வேண்டு கோளுக்கு இணங்க மக்களவைச் செயலகமும் அண்மையில் எம்.பி.க்களுக்கு அனுப்பியது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:


 வெளிநாட்டுத் தொடர்புகள், நபர்கள், அரசுகள், அமைப்புகள் சார்பில் எம்.பி.க்களுக்கு விடுக்கப்படும் சுற்றுப்பயணம் தொடர்பான அழைப்பு, வெளியுறவு அமைச்சகம் மூலமே விடுக்கப்பட வேண்டும்.


 ஒருவேளை எம்.பி.க்களுக்கு நேரிடையாக அழைப்பு வரும்பட்சத்தில், அதை வெளியுறவு அமைச்சகத்தின் கவனத்துக்கு எம்.பி.க்கள் கொண்டு வர வேண்டும். வெளியுறவு அமைச்சகத்தின் அனுமதியையும் எம்.பி.க்கள் கட்டாயம் பெற வேண்டும்.


 வெளிநாட்டு அரசு, அமைப்புகள் அல்லது நபர்கள் அனுப்பும் அழைப்பிதழின் நகலை வெளியுறவு அமைச்சகத்திடமோ அல்லது சம்பந்தப்பட்ட துறையிடமோ சமர்ப்பித்து அனுமதியை எம்.பி.க்கள் பெற வேண்டும் என்று மக்களவை செயலகத்தின் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


 இதேபோன்ற நடைமுறை, நீதிபதிகள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், அரசு ஊழியர்களுக்கும் அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply