மறைந்த காவலர்களை நினைவு கூரும் வகையிலும், அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் இன்று நாடு முழுவதும் காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்  படுகிறது.
லடாக் பகுதியில் 1959-ம் ஆண்டு சீன படையினரால் கொல்லப்பட்ட காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஆண்டு தோறும் அக்டோபர் 21-ம் தேதி காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள காவலர் நினைவிடத்தில், பிரதமர் நரேந்திரமோடி மலர்வளையம் வைத்து மரியாதைசெலுத்தினார். அவரைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் அத்வானி ஆகியோரும் மரியாதை செலுத்தினர். இதேபோல தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காவலர் நினைவுதினம் அனுசரிக்கப்படுகிறது.

 

 வீரவணக்க நாள் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்புரை யாற்றினார். "நாட்டுக்காக உழைப்பதில் காவலர்கள் மட்டுமின்றி நில நடுக்கம், வெள்ளம், தீவிபத்து உள்ளிட்ட பேரிடர் மீட்பு பணியின் போது சிறப்பாக செயல்படும் தேசிய – மாநில பேரிடர் மீட்புப்படையினரின் பங்களிப்பும் அபாரமானது. அவர்களும் நமது வீரம்மிக்க காவலர்கள்தான்" என அவர் குறிப்பிட்டார்.

"இத்தகைய வீரர்களின் தீரத்தைமட்டுமின்றி, அர்ப்பணிப்புணர்வு, தியாகம் ஆகியவற்றை நம் நாடு என்றும் மறந்துவிடாது. தீவிபத்து, கட்டிடவிபத்து, வெள்ளப்பெருக்கில் இருந்து நம்மை காப்பாற்றியவர்கள் யார்? என்பது காப்பாற்றப்பட்டு, உயிர் பிழைத்தவர்களுக்கே தெரியாது" என உணர்ச்சி மேலோங்க கூறிய மோடி, இந்த ஆண்டில் இருந்து பேரிடர்காலத்தில் சிறப்பாக சேவையாற்றும் வீரர்களுக்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெயரால் தேசிய விருதுகள் வழங்கப்படும் என அறிவித்தார்.

ஒவ்வொரு ஆண்டும் நேதாஜியின் பிறந்தநாளான ஜனவரி மாதம் 23ம் தேதி இந்த விருதுக்கு தேர்வானவர்களின் பெயர்கள் அறிவிக்க படும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், "இந்திய சுதந்திரபோராட்ட நிகழ்வில், இந்திய தேசிய ராணுவத்தை நிறுவி, பிரிட்டீஷ் ஆட்சிக்கு எதிராக யுத்தம்தொடுத்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பங்களிப்பை எவரும் குறைத்துமதிப்பிட முடியாது. அதுமட்டுமின்றி நம் நாட்டின் ஒற்றுமையைக் கட்டிக்காத்திடும் வகையில், பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சியை தடுத்து நிறுத்தியவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். நமது அரசு கடினமான மற்றும் பெரிய முடிவுகளை எடுக்கும் அளவுக்கு உறுதியுடன் உள்ளது. இதுதொடரும். சர்ஜிக்கல் ஸ்டிரைக்கோ அல்லது நேதாஜி குறித்து ஆதாரங்களை வெளியிடுவதோ, எதுவாக இருந்தாலும் அவை குறித்து உறுதியான முடிவை இந்தஅரசு தொடர்ந்து எடுத்திடும்" என்று அவரது உரையில் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

Leave a Reply