அடுத்த 5 ஆண்டுகளில் நாடுமுழுவதும் 10,000 வேளாண் உற்பத்தி ஊக்குவிப்பு அமைப்புகளை உருவாக்குவதற்கு மத்திய அமைச்சரவை புதன் கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு ரூ. 6,865 கோடி நிதியை ஒதுக்கவும் அமைச்சரவை அனுமதி அளித்தது.

பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

எஃப்.பி.ஓ. என்ற வேளாண் உற்பத்திஅமைப்பிற்கு வேளாண் உற்பத்தி உருவாக்கம் மற்றும் ஊக்குவிப்பு அமைப்பு என்று பெயர் ஏற்படுத்தபட்டுள்ளது. இதுபோன்று நாடு முழுவதும் 10,000 அமைப்புகள் உருவாக்கப்படும். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் திட்டத்தின் ஒருபகுதியாக கடந்த 2019 – 20 நிதிநிலை அறிக்கையில் இந்த வேளாண் உற்பத்திஅமைப்பு குறித்து அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சிறுவிவசாயிகள் வேளாண் வணிக கூட்டமைப்பு, தேசியக் கூட்டுறவு வளர்ச்சிக்கழகம், நபார்டு (தேசிய விவசாய ஊரக வளர்ச்சி வங்கி) மற்றும் மாநில அரசுகளும் இந்த அமைப்புகளின் உருவாக்கத்தில் பங்கு கொள்ளலாம்.

பயிர் காப்பீட்டு திட்டங்களை செயல்படுத்துவதில் தற்போது உள்ள சவால்களை எதிர்கொள்ள பிரதான்மந்திரி ஃபசல் பீமா யோஜனா (பி.எம்.எஃப்.பி.ஒய்) திட்டத்தை வானிலை அடிப்படையிலான பயிர்க்காப்பீட்டு திட்டமாக மறு சீரமைக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கடன்பெறும் விவசாயிகள் கட்டாயமாக பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் சேர வேண்டும் என்று முன்பு விதிமுறைகள் வகுக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த விதிமுறை தளர்த்தப்பட்டு விவசாயிகள் கடன் பெற்றிருந்தாலும் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் சேருவது அவர்களுடைய விருப்பத்தின் அடிப்படையிலானது என்று மாற்ற பட்டுள்ளது.

மேலும், பால்பதனிடும் மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டிற்கான நிதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானியத்தை 2 சதவீதம் என்றிருந்ததை 2.5 சதவீதமாக உயர்த்தி அமைச்சரவைக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது என்றனர்.

Comments are closed.