என்டிடிவி இந்தியா' சேனல் மீதான ஒருநாள் தடை குறித்த எதிர்க் கட்சிகள் காலம்கடந்து விமர்சிப்பது சர்ச்சைகளை எழுப்பப் பயன் படுத்தும் அரசியல் உத்தி எனவும், அரசின் வரை முறைகளை தொடர்ந்து மீறியதால் தான் சேனல் மீது தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறியுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தின் பதான்கோட் தீவிரவாத தாக்குதல்தொடர்பான செய்திகளை ஒளிபரப்பியபோது, பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த ராணுவ விவரங்களையும், ரகசியம்காக்கப்பட வேண்டிய முக்கிய தகவல்களையும் பகிரங்கமாக வெளிச்சம் போட்டுக் காட்டியதாக 'என்டிடிவி இந்தியா' சேனல் மீது குற்றம் சாட்டப் பட்டது.

இதனை உறுதிசெய்த மத்திய அமைச்சர்கள் குழு, நவம்பர் 9-ம் தேதி அன்று, அந்த தொலைக் காட்சிச் சேனலில் நிகழ்ச்சிகள் எதையும் ஒளிபரப்பாமல் நிறுத்தி வைக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு பரிந்துரை வழங்கியது. இப்பரிந்துரையை மத்தியதகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ஏற்றுக் கொண்டு தொலைக் காட்சி நிறுவனத்துக்கு உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்த நிலையில், அதற்கு பல்வேறு கட்சிகளும், தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். அவர்களுக்குப் பதிலளித்துள்ளார் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு.

இதுகுறித்துப் பேசிய வெங்கய்ய நாயுடு, ''இந்த சர்ச்சைகள் அனைத்தும் நவம்பர் 3 அன்று அரசு அறிவிப்பு வெளியானபிறகு ஒரு நாள் கழித்தே எழுந்திருக்கின்றன. இதிலிருந்தே, இது இல்லாத சர்ச்சையைக் கிளப்ப மற்றவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சி என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

காங்கிரஸ் அரசு 2005 முதல் 2014 வரை, ஆபாசமான காட்சிகளை ஒளிபரப்பியதற்காக தொலைக்காட்சி ஊடகங்களுக்கு 21 முறை தடைவிதித்துள்ளது. தடை, ஒருநாளிலிருந்து 2 மாதங்கள் வரை நீடித்திருக்கிறது.

ஆபாசக் காட்சிகளை ஒளிபரப்பியதாகக்கூறித் தடை விதித்ததற்கும், தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்பி, ராணுவவீரர்களின் வாழ்க்கையை அபாயத்துக்கு உள்ளாக்கியதற்குத் தடைவிதிப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. இதை புரிந்துகொள்ளும் அளவுக்கு நம்நாட்டு மக்கள் புத்திசாலிகளாகத்தான் இருக்கிறார்கள்.

'என்டிடிவி இந்தியா' சேனல் மீதான ஒருநாள் தடை, 2008-ல் மும்பையில் நடந்த 26/11 தாக்குதலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி வழங்கிய ஆலோசனைகளைப் பின்பற்றி எடுக்கப்பட்ட தர்க்க ரீதியான முடிவு'' என்று கூறினார்.

தடை சம்பவம் எமர்ஜென்ஸியை ஒத்திருக்கிறதா என்ற கேள்விக்கு, ''ஏராளமான பாஜக தலைவர்கள் நெருக்கடி கால கட்டத்தில் மோசமான சம்பவங்களை எதிர்கொண்டிருக் கின்றனர். அதேநிலையை நாங்கள் மற்றவர்களுக்குத் தரவிரும்பவில்லை. குறிப்பாக ஊடகச் சுதந்திரத்துக்கு'' என்றார்.

செய்தி ஆசிரியர்கள் சங்கத்தின் விமர்சனம் குறித்துப் பதிலளித்த நாயுடு, ''தடை குறித்துப்பேச முழுதாக ஒரு நாள் எடுத்துக்கொண்ட செய்தி ஆசிரியர்கள் சங்கம், தொலைக்காட்சி நிறுவனங்கள் (வரைமுறை) சட்டம் 1995ன் 20-வது பிரிவைப் பற்றியும் தெரிந்துகொள்ளவேண்டும்.

இதன்படி மத்திய அரசு, நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றைப் பேண, எந்த சேனல் அல்லது நிகழ்ச்சியை நெறிப்படுத்தவோ அல்லது தடைசெய்யவோ உரிமை உண்டு.

எனவே அரசாங்கம் அத்தகைய நேரங்களில் செய்தி ஆசிரியர்கள் சங்கம் பரிந்துரைத் ததைப் போல நீதிமன்றத்தை அணுக தேவையில்லை.

மத்திய அரசு, நாட்டுக்காக என்ன நல்லதுசெய்தாலும் அதை விமர்சிப்பதற்கென்றே சிலர் இருப்பார்கள். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில், அனைத்து தொலைக் காட்சி ஊடகங்களும் தீவிரவாத எதிர்ப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும்போது அடக்கம், முதிர்ச்சி மற்றும் உணர்வுத் திறனோடு பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அதே வரைமுறை களைத்தான் நாங்கள் பின்பற்றுகிறோம்.

Leave a Reply