தனது அரசு நாட்டின் நலனுக்காக கடினமானமுடிவுகள் எடுப்பதில் ஒரு போதும் தயக்கம் காட்டியது கிடையாது என்று பிரதமர் நரேந்திரமோடி கூறினார். இன்னும் பலசீர்திருத்தங்களைக் கொண்டுவர உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மஹாராஷ்டிர மாநிலத்தில் பாதாளகங்கை எனுமிடத்தில் தேசிய பங்குபரிவர்த்தனை வாரியம் (செபி) நடத்தும் தேசிய செக்யூரிடிஸ் சந்தை (என்ஐஎஸ்எம்) மையத்தில் புதியகல்வி மற்றும் பயிற்சி மையத்தை நேற்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்து பேசியதாவது:

நீண்டகால அடிப்படையில் பலன்தரத்தக்க சீர்திருத்த நடவடிக்கைகளை அரசு கொண்டு வர உள்ளது. இவை அனைத்தும் ஸ்திரமான மற்றும் வலுவானபொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

குறுகிய அரசியல் ஆதாயத்துக்காக எந்த திட்டத்தையும் சீர்திருத்தங்களையும் அரசு ஒரு போதும் கொண்டுவந்தது கிடையாது. பொருளாதார சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் அதேவேளையில் சிக்கன நடவடிக்கைகளும் எடுக்கப்படும். அரசின் எந்தமுடிவும் குறுகிய ஆதாயத்துக்கானதாக இருக்காது.

சமீபத்தில் அரசு எடுத்துள்ள பணமதிப்பு நீக்க நடவடிக்கை மக்களுக்கு சிரமம் அளித்துள்ளது. இது குறுகியகால சிரமம்தான். ஆனால் நீண்டகால அடிப்படையில் மிகச் சிறந்த பலன் கிடைக்கும்.

சரக்கு மற்றும் சேவைவரி (ஜிஎஸ்டி) விதிப்பு அமலாக்கத்தில் மாநில அரசுகளின் உரிமையை மத்திய அரசு பறிப்பதாக கூறுவதை ஏற்கமுடியாது. வரிவிதிப்பில் இதுநாள் வரையில் இல்லாத மிகப்பெரிய ஒருமுனை வரி விதிப்பு விரைவிலேயே அமலுக்குவர உள்ளது.

பிரதமராக பொறுப்பேற்ற 30 மாதங்களுக்கு முன்பிருந்த நிலையைவிட தற்போது பொருளாதார நிலை மேம்பட்டிருக்கிறது. அப்போது பணவீக்கம் இரட்டைஇலக்கத்திலும், அந்நிய செலாவணி கையிருப்பு மிகக் குறைவாகவும் நடப்பகணக்கு பற்றாக்குறை அதிகமாகவும் இருந்தது. 2014-ம் ஆண்டு பொறுப் பேற்றபோது சர்வதேச அளவில் தேக்கநிலை நிலவியபோதிலும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்ததன் மூலம் நாட்டின் பொருளாதாரம் மேம்பட்டுள்ளது.

இப்போதுகூட சர்வதேச அளவில் பிறநாடுகள் தேக்க நிலையில் தடுமாறி கொண்டிருக்கின்றன. ஆனால் இந்தியா மட்டும் வளர்ச்சியை நோக்கி முன்னேறி வருகிறது.

நாட்டின் பொதுபட்ஜெட்டை முன்கூட்டியே தாக்கல்செய்வதன் மூலம் திட்டப் பணிகளுக்கு உரிய காலத்தில் நிதி கிடைக்கும் என்றார் மோடி. நடப்பாண்டில் மிக அதிக எண்ணிக்கையிலான பொதுப் பங்குகளை செபி வெளி யிட்டுள்ளதைப் பாராட்டிய மோடி, நிதிச்சந்தை வளர்வது பொருளாதாரத்தில் நல்ல அறிகுறியாகும் என்றார். நிறுவனங்கள் பத்திரவெளியீடு மூலம் பணம் திரட்டுவது அதிகரித்தால், வங்கிகள் தங்களிடம் உள்ள நிதி வளத்தை பிற பணிகளுக்கு பயன்படுத்த முடியும். என்றார் மோடி.

Leave a Reply