ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் இடைத் தரகர் மைக்கேஸ் கிறிஸ் டியன் நேற்று முன்தினம் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், விசாரணையில் என்னென்ன ரகசியம் வெளிவருமோ என்று  பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம் செய்தார்.

பாலி மாவட்டம், சுமேர்பூரில் பேசும்போது, “காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மிகமுக்கியப் பிரமுகர்களுக்காக ஹெலிகாப்டர் வாங்கியதில் ஊழல் நடந்தது. நாங்கள் ஆட்சிக்குவந்ததும் இதை விசாரித்தோம். இதில் குற்றவா ளிகளில் ஒருவரை கைதுசெய்துள்ளோம். இவர் துபாயிலிருந்து இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டதை நீங்கள் அறிவீர்கள். அவர் பேசத்தொடங்கியதும் என்னென்ன ரகசியம் வெளிவரும் என்று யாருக்குத் தெரியும்?” என்றார்.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல்காந்தி, சோனியா காந்தி ஆகியோரின் 2011-12-ம் ஆண்டு வருமானவரி மதிப்பீட்டை மறு மதிப்பீடு செய்ய வருமான வரித்துறைக்கு உச்சநீதிமன்றம் நேற்று முன்தினம் அனுமதி வழங்கியது. இது ராகுல், சோனியா ஆகியோருக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

இதுதொடர்பாக பிரதமர் மோடி பேசும்போது, “நேரு காந்தி குடும்பத்தினர் 4 தலைமுறைகளாக அதிகாரத்தை அனுபவித்து வருகின்றனர். அவர்களுக்கு எதிரான வழக்கில் அரசு வெற்றிபெற்றுள்ளது. இது நேர்மைக்கு கிடைத்த வெற்றியாகும்.

இனி இவர்கள் எப்படி தப்புவார்கள் என நான் பார்க்கிறேன். மக்களே, நான்கு தலைமுறைகளாக நாட்டை ஆட்சிசெய்தவர்களை நீதிமன்றத்தை நோக்கி ஓடச் செய்த இந்த தேநீர் விற்பவனின் துணிவை பாருங்கள்” என்றார்.

மோடி மேலும் பேசும்போது, “நாட்டில் சாதியவாதம் என்ற விஷத்தை காங்கிரஸ் பரப்பியது. நகரங்கள் கிராமங்கள் இடையே ஏற்றத் தாழ்வை ஏற்படுத்தியது. ராஜஸ்தானில் பாஜக தோல்வி அடையும் என காங்கிரஸ் கட்சியினர் கருதினர். தற்போது உட்கட்சிமோதல் மற்றும் போட்டி வேட்பாளர்கள் காரணமாக ராஜஸ்தானை காங்கிரஸ் இழந்துள்ளதாக கூறுகின்றனர். தோல்விக்கு யாரை காரணமாக்கலாம் என அவர்கள் தேடி வருகின்றனர்” என்றார்.

Leave a Reply