நான்கு மாதங்களில் 10 லட்சம் "ஸ்வைப்பிங்' இயந்திரங்களை நிறுவவேண்டுமென்று வங்கிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ரொக்கமற்ற பணப் பரிவர்த்தனைகளை அதிகரிக்கும் நோக்கில் இந்நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

அனைத்து கடைகள், வணிக நிறுவனங்களிலும் "கார்டு ஸ்வைப்பிங்' இயந்திரங்கள் இருந்தால் தான் டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் ரொக்கமற்ற பணப் பரிவர்த்தனைகளை பொது மக்கள் மேற்கொள்ள முடியும். இப்போது பெரு நகரங்களில் உள்ள பெரியகடைகள், வர்த்தக நிறுவனங்கள், ஹோட்டல்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் மட்டும்தான் கார்டுகள் மூலம் பணம் செலுத்தும்வசதி உள்ளது. இரண்டாம் நிலை நகரங்களில் கூட கார்டு மூலம் பணம்செலுத்தும் வசதி அதிக அளவில் நடைமுறையில் இல்லை.


இந்நிலையில், அனைத்து இடங்களிலும் கார்டுகள் மூலம் பணம் செலுத்தும் வசதி கிடைப்பதை உறுதி செய்யும் நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது.இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:


இப்போது நாடுமுழுவதும் 15 லட்சம் "ஸ்வைப்பிங்' இயந்திரங்கள் புழக்கத்தில் உள்ளன. பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிப்புக்கு பிறகு ரொக்கமற்ற பணப் பரிவர்த்தனையை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துவருகிறது.


இதில் முக்கியமாக "ஸ்வைப்பிங்' இயந்திரங்களின் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. அதன்படி ஏற்கெனவே 6 லட்சம் "ஸ்வைப்பிங்' இயந்திரங்கள் புதிதாக பயன் பாட்டுக்கு வந்துள்ளன. இதைத் தொடர்ந்து மேலும் 4 லட்சம் "ஸ்வைப்பிங்' இயந்திரங்களை பயன்பாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் படி 4 மாதத்தில் மொத்தம் 10 லட்சம் "ஸ்வைப்பிங்' இயந்திரங்களை நிறுவ வங்கிகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


இது தவிர, மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சகத்துடன் சேர்ந்து அமைப்புசாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் வங்கி கணக்குகளைத் தொடங்க சிறப்புமுகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
ரூபாய் நோட்டு வாபஸ் அறிவிப்புக்குப்பிறகு பழைய ரூபாயை மாற்றுவதில் முறைகேட்டில் ஈடுபட்ட பொதுத்துறை வங்கிகளைச் சேர்ந்த 7 அதிகாரிகள்மீது இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags:

Leave a Reply