ஒரு கனவு கலைந்தது. ஒருகீதம் மெளனமானது. ஒரு சுடர் எட்டா தூரத்தில் எங்கோ மறைந்தது. தன் அருமை மகனை இழந்து, பாரதத் தாய் மீளாத் துயரில் ஆழ்ந்துள்ளாள்.' இந்த வரிகள் ஜவஹர்லால் நேருவின் மறைவிற்காக வாஜ்பாய் அவர்களால் இரங்கல் கவிதையாக 1964-ஆம் ஆண்டு மாநிலங்களவையில் வாசிக்கப்பட்டது. தற்போது அடல் பிஹாரி வாஜ்பாயின் மறைவுக்கு நாடே இரங்கல் தெரிவிக்கும் இந்த வேளையில் நேருவுக்காக வாஜ்பாய் கூறிய இந்த கவிமொழிகள் அவருக்கும் மிகச் சரியாகப் பொருந்தியுள்ளது. லதா மங்கேஷ்கரின் குரலைப் போன்ற இனிமை பொருந்திய உரைகளை நிகழ்த்திய அந்தமனிதரின் குரல்  நித்தியமாய் மெளனித்து விட்டது. இந்த நாட்டை ஒளிரச்செய்த அந்தச் சுடர் எட்டா தூரத்தில் மறைந்து விட்டது. தனது வாழ்நாள் முழுவதும் இந்த நாட்டின் பக்தனாய் வாழ்ந்து வந்த அந்த கவிமகனின் மறைவால் இன்று நாடே பெருந்துயர் கொண்டுள்ளது. 

வெளிப்படையான கொள்கை பற்று அரசியல் முதல் இலக்கியம் வரை, இயல் முதல் இசை வரை, சமையல் கலை முதல் நல்ல உணவை உண்டு மகிழும் பழக்கம் வரை வாழ்வின் எல்லா  பரிமாணங்களிலும் ஈடுபாடு கொண்ட பன்முகத்தன்மை வாய்ந்த மனிதரான வாஜ்பாய், இன்றுள்ள அரசியல்வாதிகள் போல  முழுநேர அரசியல்வாதி அல்ல. ராஷ்டீரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) கிளைகளிலும், பயிற்சிக்கூடங்களிலும் கல்வி பயின்றவர். அவர் தனக்காகவோ, தனது கட்சி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காகவோ அரசியலில் இறங்கவில்லை. இந்த நாட்டை கட்டமைக்க வேண்டும் என்ற நோக்கோடு அரசியலில் களம் கண்டவர். சரிந்துவந்த தேசிய அரசியலில் ஒரு முன்னுதாரணமான மாற்றத்தைக் கொண்டுவர முயன்று அதில் நயமாக வெற்றியும் கண்டவர்.


பாரதிய ஜனதா கட்சி எதிர்க்கட்சியாய் இருந்து ஆளும் கட்சியாக மாறக்கூடிய வேளை வந்த சமயத்தில் கூட, அவர் தனது அடிப்படைக் கொள்கைகளை  எங்கும் விட்டுக்கொடுக்கவில்லை. 1996 -ஆம் ஆண்டு மக்களைவை தேர்தல் நெருங்கிவந்த தருணம், மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும் முனைப்போடு பாஜக செயல்பட்டு வந்தது. அந்த சமயத்தில் "ஆர்கனைசர்' எனும் இதழில்தான் எழுதிய கட்டுரை ஒன்றில் "ஆர்எஸ்எஸ் எனது ஆன்மா' என்று வாஜ்பாய் விவரித்திருந்தார். இந்த கட்டுரையால் 1996-ஆம் ஆண்டு ஆட்சியேற்ற பதின்மூன்றே நாள்களில் அவர் ஆட்சியை இழந்தார். இருப்பினும்  தன்மீதும், தனது நம்பிக்கை மீதும் எழுந்த எதிர்ப்புகளை தகர்த்து பின்நாளில் பாஜக அரசியலில் எழுச்சி பெற வழிவகுத்தார். இத்தகைய மாற்றம் எப்படி சாத்தியமானது?

அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட முகம் 1940-களில் காந்தியடிகளின் தரப்பிலிருந்து ஏற்றுக்கொள்ளக் கூடிய முகமாக நேரு திகழ்ந்ததைப் போல, 1990-களில் ஆர்எஸ்எஸ் தரப்பில் மிகவும் ஏற்றுக்கொள்ளக் கூடிய விரும்பத்தகுந்தவராய் விளங்கியவர் வாஜ்பாய். 1986-இல் ராமர் கோயில் இயக்கத்தை முன்னெடுத்து நடத்தியதன் மூலம் எல்.கே. அத்வானி தனது அரசியல் ஆசானான வாஜ்பாயையும் மிஞ்சும் வகையில் பாஜகவில் பிரதான தலைவராக உருவெடுத்தார். காங்கிரஸின் பிரதான எதிர்க்கட்சியாக பாஜக உருவெடுத்திருந்த அந்த வேளையில், 1996- ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக தலைவரான அத்வானியே அக்கட்சியின் பிரதமர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் என அனைவரும் எண்ணிக்கொண்டிருந்த போது, மும்பை சிவாஜி பூங்காவில் நடைபெற்ற பேரணியில் வாஜ்பாயே பாஜகவின் பிரதமர் வேட்பாளர் என்று அத்வானி அறிவித்தது அனைவருக்கும் பெரும் வியப்பை ஏற்படுத்தியது. தனது இந்த முடிவு குறித்து அத்வானி பின்னர் அளித்த விளக்கத்தில், "இது தனது சுய முடிவு எனவும், கட்சிக்கு அப்பாற்பட்டு அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய முகம் தான் அல்ல, வாஜ்பாயே எனவும், கட்சி பேதமின்றி அனைவரின் கருத்துகளுக்கும் மரியாதை அளிக்கும் திறமையின்றி கூட்டணி அமைத்து, ஆட்சியை தலைமை தாங்குவது கடினம்' எனவும் தெரிவித்திருந்தார். வாஜ்பாயை முன்னிறுத்திய அத்வானியின் இந்த தன்னலமற்ற, அரசியல் சாணக்கிய முடிவு, தேசிய அரசியலில் பாஜகவிற்கு இருந்த கட்டுப்பாடுகளை அவிழ்த்து, அடுத்த இரண்டே ஆண்டுகளில் பாஜக ஆட்சிக்கட்டிலில் அமர முதல் படியாக அமைந்தது.

வாஜ்பாய்க்கும் அத்வானிக்கும் இடையே இருந்த அன்பு மிக அபூர்வமானது. பல ஆண்டுகளாக ஒரே வீட்டில் தங்கியிருந்த அவர்கள் இருவருக்கும் சமையலில் கைதேர்ந்த வாஜ்பாயே சமைத்து வந்தார். "அத்வானி சிறிதளவே சாப்பிடுவார்' என குஷ்வந்த் சிங் குறிப்பிடுவார். ஆனால் வாஜ்பாய் அத்வானியைப் போல் அல்லாமல் உணவை விரும்பி உண்ணக்கூடியவர். இருப்பினும் வித்தியாசங்களுக்கு அப்பாற்பட்டு, உண்மையில் அவர்கள் இருவரும் அரசியல் இரட்டையராகவே திகழ்ந்தனர்.

வாஜ்பாய் உத்தி

அத்வானி வாஜ்பாயை முன்னிறுத்தியதற்கு காரணம் தனது ஆசான் மீது கொண்ட சுயநலமான அன்பு மட்டுமல்ல. அவரது தீர்க்க தரிசனமும் கூட. 1996-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக கூட்டணி தனது பெரும்பான்மையை நிரூபிக்க தவறிய போதிலும், 1998-ஆம் ஆண்டு தேர்தலில் வாஜ்பாய் அமைத்த கூட்டணி வெற்றி பெற்றது. நம்பிக்கை வாக்கெடுப்பில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வாஜ்பாய் தோற்கடிக்கப்பட்ட போதும், மீண்டும் ஒரு மாபெரும் கூட்டணி அமைத்து 1999-இல் நடந்த தேர்தலில் வெற்றி கண்டார். இந்த தடைகளை மீறிய வெற்றிகளுக்கு காரணம், வாஜ்பாயின் கட்சி பேதமின்றி மற்ற கட்சியினரின் கருத்துகளுக்கு மதிப்பு கொடுக்கும் உயரிய மனப்பான்மையே ஆகும்.

அத்வானியின் இந்த திட்டத்தால் தேசிய அரசியலில் பாஜக மறுக்கப்பட்டு வந்தது குறைந்து, 1990-இல் இருந்து படிப்படியாக  பாஜக உள்ளடக்கிய களமாக இந்திய அரசியல் மாறத் துவங்கியது. கம்யூனிஸ்ட் உள்ளிட்ட மதசார்பற்ற கட்சிகள் என்ற போர்வையில் உள்ள கட்சிகள் பாஜகவையும், அதன் முன்னோடி அமைப்பான ஜனசங்கத்தையும் ம.பி, உ.பி மற்றும் பிகார் முதலான மாநிலங்களில் 1960களின் இறுதியில் கூட்டணி சேர்த்து கொண்டது மட்டுமல்லாது 1977, 1980களில் மத்தியில் ஆட்சி அமைக்கவும் பாஜகவுடன் கூட்டணி அமைக்க தயங்கவில்லை. ஆனால் இதே கட்சிகள் பாஜக தலைமையிலான ஆட்சி அமைய அனுமதிக்கவில்லை. இவ்வாறு பாஜகவை ஆதரவுக் கட்சி என்றால் மட்டும் ஏற்றுக்கொண்டு, ஆளும் கட்சி என்றால் ஒதுக்கி வைத்திருந்த மதச்சார்பற்ற கட்சிகளின் சுயநலக் கொள்கை அக்கட்சிகளின் போலித்தன்மையை வெட்ட வெளிச்சமாக்கியது. 

வாஜ்பாயின் உத்தியுடன் கூடிய பாஜகவின் எழுச்சி பாஜக ஆட்சியும், மதச்சார்பின்மையும் இணக்கமாக செயல்பட முடியாது என்று 1980-களில் கிளப்பி விடப்பட்ட கட்டுக்கதையைப் பொடிபொடியாக்கியது.

வாஜ்பாய் தனித்துவங்கள் 

வாஜ்பாயின் தனித்துவங்களைக் கொண்டே அவரது உத்திகள் கட்டமைக்கப்பட்டிருந்தன. அதில் முதன்மையானது – மக்களோடு இணைந்திருத்தல். 1950 மற்றும் 1960-களில் மதச்சார்பற்ற கட்சிகளால் வெறுக்கப்பட்ட ஜனசங்க கோட்பாடுகளை தனது புத்திசாலித்தனமான பேச்சாற்றலால் மக்களிடம் எளிதாக கொண்டு சென்ற தனித்துவம் மிக்கவர். அவர் மக்களோடு தன்னை இணைத்துக் கொள்ள கார்களைப் பயன்படுத்தியதை விட பேருந்துகளையும், சைக்கிள்களையுமே அதிகமாகப் பயன்படுத்தினார். விமானப் பயணம் என்பது பற்றி சொல்லவே தேவையில்லை. ஒரு முறை கட்சித் தொண்டர்கள் அவரை வரவேற்க சரியான நேரத்தில் வர இயலாமல் போனதால் அவர் ரயில் நிலையத்திலேயே தூங்கிய சம்பவமும் நிகழ்ந்ததுண்டு. 

அவரது இனிய குரல் திக்கெட்டிலும் எதிரொலிக்க, அனைவரையும் மயக்கும் அவரது ஹிந்தி சொற்பொழிவுகள் மக்களின் மனதில் எதிரொலித்து அவர் போதித்த மாற்று தத்துவத்திற்குள் அவர்களைக் கொண்டு சென்றது. அவரது சொற்பொழிவுகள் அவரின் கருத்துக்கு மாற்று கருத்து உடையவர்களின் எண்ணத் தடைகளையும் தகர்த்து அவரை போற்றச் செய்தது. ஆர்எஸ்எஸ்-ஐ
வெறுத்து வந்த நேரு கூட, ஒருமுறை வாஜ்பாய் நாடாளுமன்றத்தில் பேசிய உரையைக் கேட்டு, "ஒரு நாள் இவர் பிரதமர் ஆவார்' என தீர்க்க தரிசனமாக கூறினார்.

வாஜ்பாயின் கவிதை நடை பொருந்திய உரை, ஹிந்தி எதிர்ப்பு போராளியான அன்றைய திமுக தலைவர் சி.என்.அண்ணாதுரையையே, "வாஜ்பாய் பேசுவது போல் ஹிந்தி மொழி இருந்தால் எங்களுக்கு அதில் எந்த வித ஆட்சேபமும் இல்லை' என்று பேச வைத்தது. 1960-களின் இறுதியில் வாஜ்பாயின் அலை தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியது. அதுவே 1970-களில் மறுக்க முடியாத ஒன்றானது. 1980 மற்றும் 1990-களில் அவருடைய கொள்கைகள் ஏற்கப்படாத போதிலும் அவர் தனிமனிதராக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டார். பாஜகவின் தூதராக இருந்து அக்கட்சியினை எதிர்த்தவர்களையே  பின்னாளில் ஏற்றுக்கொள்ளச் செய்தவர்.  உதாரணமாக அன்றைய திமுக தலைவர் மு.கருணாநிதி வாஜ்பாய் ஏற்றுக்கொள்ளக்கூடியவர், பாஜகவைஅல்ல என்பதை உணர்த்தும் வகையில், "வாஜ்பாய் தவறான கட்சியில் இருக்கும் சரியான மனிதர்' என்று அவரைப் பற்றி குறிப்பிட்டிருந்தார். இதற்கு "மாம்பழங்கள் வேப்ப மரத்தில் வளர்வதில்லை' என்று வாஜ்பாய் அழகாக பதிலளித்திருந்தார். பாஜகவை ஏற்க மறுத்த அதே கருணாநிதி, 1998-ஆம் ஆண்டு தேர்தலின் போது, வாஜ்பாய்க்காக பாஜக தலைமையில் அமைந்த கூட்டணி கட்சிகளுக்கு வாக்கு சேகரித்தார். அதே போல 1999-ஆம் ஆண்டு பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சியிலும் இணைந்து செயல்பட்டார். இதுவே வாஜ்பாயின் தனித்துவத்தின் மகிமையாகும்.

வெற்றி-தோல்வி அணுகுமுறையில் பேதம் இல்லை 

வாஜ்பாய் தனித்துவத்தின் அடிப்படை தத்துவத்தை எவரும் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். ""குரு, இந்த உலகில்  இது சரி, இது தவறு என்று எதுவும் இல்லை. சரி, தவறு என்ற இரண்டையும் உள்ளடக்கிய கருத்துகளே  99 சதவீதம்  இருக்கும். அதனால் ஒரு கருத்தின் அனைத்து கோணங்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்'' என்று ஒருமுறை என்னிடம் அவர் கூறியுள்ளார். எத்தகைய அழுத்தத்தையும் தாங்கக் கூடிய பரந்த உள்ளத்தால் மட்டுமே இத்தகைய கண்ணோட்டத்தில் காண முடியும்.  "குறுகிய உள்ளம் கொண்டவர் எவரும் சிறந்த மனிதராவதில்லை. உள்ளம் உடைந்தவர் என்றும் மேலே உயர்வதில்லை' என்ற அவரது கூற்றே அவரின் தனித்தன்மையை எடுத்துரைக்கிறது.

அவரது கூற்றுக்கு உதாரணமாய் அவரே வாழ்ந்தும் காட்டினார். 1950 மற்றும் 60-களில் நடந்த தேர்தலில் அவரும் அவரது கட்சியும் அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்த போதும் அவர் மனம் உடையவில்லை. தில்லி நகராட்சி தேர்தலில் ஜனசங்கம் படுதோல்வியை சந்தித்த போது கூட, "ஃபிர் சுப ஹோகி(மீண்டும் விடியல் வரும்)'  படத்துக்கு செல்லலாம் என்று கூறிய வாஜ்பாய், அத்வானியுடன் திரையரங்குக்கு சென்று படத்தை ரசித்ததாக  ஒருமுறை என்னிடம் அத்வானி கூறினார். 

தோல்விகளைக் கண்டு அவர் மனம் உடைந்ததில்லை. அவரது காயங்களுக்கு அவரது கவிதைகளே மருந்து. குறுகிய எண்ணம் கொண்டவர்களிடம் தோன்றும் பகைமை உணர்வு பரந்த உள்ளத்தில் கரைந்துவிடும். வாஜ்பாயின் பரந்த உள்ளம், அனைத்து எதிரிகளையும், பகைமை உணர்வுகளையும் அவர் கடந்து செல்வதற்கு உதவியாக இருந்தது. வாஜ்பாய் சுக்ர நீதியை உள்ளார்ந்து கடைப்பிடித்தவர். "தன்னை ஒருவர் எதிரி என எண்ணினாலும், தான் யாரையும் எதிரி என எண்ணக்கூடாது'  என்பதே சுக்ர நீதி. தனக்கு எதிரிகள் யாரும் இல்லை என்ற அவரது எண்ணமே, அரசியல் எதிரிகளும் அவரை மதித்ததற்கு காரணமாக அமைந்தது. 

மென்மையில் தின்மை

மென்மையான உள்ளம் கொண்ட வாஜ்பாய் கவிஞரும், தத்துவஞானியும் மட்டுமல்லாது சக்தி வாய்ந்த அரசியல்வாதி மற்றும் வெற்றிகரமான அரசியல்  நிபுணரும் கூட. 1977-ஆம் ஆண்டு அவசர நிலை காலத்தில், மக்களின் ஆதரவை பெறுவதற்காக, பொதுத்தேர்தலை அவசரகதியில் இந்திரா காந்தி  அறிவித்தார். அப்போது நாட்டில் நிலவிய அசாதாரண சூழலை எண்ணி ஜனதா கட்சி தலைவர்கள் வருத்தமுற்றனர். அந்த சமயத்தில் ஜனரஞ்கரான வாஜ்பாய், "மாபெரும் மாநாடுகள் நடத்தப்பட வேண்டும், அதன்மூலம் நாடெங்கிலும் பேரலையை உருவாக்கி மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும்' என்று குரலெழுப்பினார். அவ்வாறே நடத்தியும் காட்டினார். மாநாடுகள் மற்றும் பேரணிகளின் விளைவாக நாடெங்கிலும் உருவான "ஜனதா அலை' தவறு இழைத்தவர்களை அந்த தேர்தலில் விரட்டி அடித்தது.

வாஜ்பாய் நேருவின் மென்மையையும், இந்திராவின் தின்மையையும் ஒருங்கே கொண்டவர். மென்மையான வாஜ்பாயின் உள்ளே ஒரு தேச பற்றாளனின் பேராற்றல் ஒளிந்து கிடந்தது. புத்தரையும், காந்தியையும் பின்பற்றி வந்த இந்திய தேசம் அஹிம்சை வழியிலேயே தொடரும் என்றும், கடுமையான இந்த உலகை எதிர்த்து நிற்கும் வலிமை பெறாது என்றும் வழங்கி வந்த கட்டுக்கதைகளை 1998-ஆம் ஆண்டு அவர் ஆட்சிக்கு வந்த பிறகு தவிடு பொடியாக்கினார். பொக்ரானில் அணு ஆயுத சோதனை நிகழ்த்தி உலக நாடுகளின் பொருளாதார தடைகளை எதிர்கொண்டார். எந்தவிதமான வலிமையான ஆற்றலும் இல்லாமலேயே இந்தியாவை ஒரு சக்தி வாய்ந்த நாடாக உலக நாடுகளால் ஏற்கும்படி செய்த அவர், சுதந்திர இந்தியாவை இதுவரை கண்டிராத அளவு வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு சென்றார். 

அன்னிய முதலீடு, ஏற்றுமதி போன்ற வெளிப்புற சக்திகளை பயன்படுத்தாமல், உள்நாட்டு முதலீடுகளின் மூலம் பொருளாதாரத்தில் வளர்ச்சியை ஏற்படுத்தி உலகை திரும்பி பார்க்கச் செய்தவர். 1977-78-க்கு பிறகு முதல்முறையாக 2002-2004-இல் தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு நடப்பு கணக்கு உபரியாக 20 பில்லியன் டாலர்  வரையில் பெற்று பொருளாதாரம் சிறந்து விளங்கியது. பண வீக்கம் மிகக் குறைந்து, மொத்த உள்நாட்டு உற்பத்தி வரலாறு காணாத உயர்வாக 8 சதவீதத்தை தொட்டது. அவரது தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஐந்தாண்டு கால ஆட்சியில், 6 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கியதோடு மட்டுமல்லாது இந்தியா ஒரு வளரும் பொருளாதார சக்தியாக உருவெடுத்துள்ளதை உலக நாடுகள் அடையாளம் காணும் படி செய்தார். 

இதுவே பின்னாளில் நாட்டின் தடையில்லா வளர்ச்சிக்கு வழிவகுத்தது. இருப்பினும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் நடந்தேறிய சில ஊழல்களும், முறைகேடுகளும் நாட்டின் வளர்ச்சியின் வேகத்திற்கு தடையாய் அமைந்தன. அதன் தாக்கம் இன்றளவும் நாட்டின் வளர்ச்சியை பாதித்து வருகிறது. 1950-களில் நேருவும், 1970-களின் ஆரம்பத்தில் இந்திரா காந்தியும் உலக வரைபடத்தில் இந்தியாவை முன்னிறுத்தியதற்கு பிறகு வாஜ்பாயே தேசத்தை முன்னிறுத்தினார் என்று சொன்னால் அது மிகையாகாது. 

இறுதியாக, நேருவின் இரங்கலின் போது, "உடல் நிலையில்லாதது' என்று வாஜ்பாய் கூறியவாறு, வாஜ்பாயின் உடல் அழிந்தாலும் அவரது ஆன்மா வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. தாராளவாதிகள் மற்றும் மதச்சார்பற்றவர்களிடமிருந்து வேறுபட்டு, ஒரு சக்தி வாய்ந்த இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று அவர் கண்ட கனவு தற்போது நனவாகி வருகிறது. வாஜ்பாய் எவ்வாறு மென்மையான தேசத்தை வலிமை பொருந்திய மென்மையான தேசமாக மாற்றினார் என்பது சரித்திரத்தில் நிச்சயம் இடம் பெறும்.  

நன்றி; எஸ்.குருமூர்த்தி

தமிழில்: க.நந்தினி ரவிச்சந்திரன்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.