எனதருமை நாட்டு மக்களே, வணக்கம். இந்த ஆண்டு கோடையின் வெப்பம் மறக்க முடியாத அனுபவமாக அமைந்திருக்கிறது. அதே வேளையில் நாம் மழையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். நான் இன்று உங்களோடு உரையாடிக் கொண்டிருக்கும் வேளையிலே, ரமலான் புனித மாதம் தொடங்கி விட்டது. ரமலானின் புனிதமான மாதம் பிறந்திருக்கும் இந்த வேளையில், நான் பாரதத்திலும் உலகெங்கிலும் வாழும் மக்களுக்கு, குறிப்பாக இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த மக்களுக்கு, என் மனம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ரமலான் மாதத்தில் பிரார்த்தனை, ஆன்மிகம், அறப்பணி ஆகியவற்றிற்கு கணிசமான மகத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. உலகில் உள்ள அனைத்து சமயங்களும் பாரத நாட்டில் இருக்கின்றன என்பது நமது நாட்டின் 125 கோடி மக்களும் பெருமிதம் கொள்ள வேண்டிய விஷயம்;

இந்த மகத்தான பாரம்பரியத்தை நமக்கு நமது முன்னோர்கள் அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள் என்பதை நாம் நமது பாக்கியமாகக் கருத வேண்டும். இறைவனை நம்புபவர்களும் இருக்கிறார்கள், இந்த தேசத்தில் இறைவனை மறுப்பவர்களும் இருக்கிறார்கள், சிலை வழிபாடு செய்பவர்களும் உண்டு, சிலை வழிபாட்டை எதிர்ப்பவர்களும் உண்டு – இப்படி பலவகைப் பட்டவர்கள் நிறைந்திருப்பது நம் தேசம். பலவகையான எண்ணப்பாடுகள், பலவகையான வழிபாட்டு முறைகள், பலவகையான பாரம்பரியங்கள் என ஒன்றிணைந்து வாழும் கலை நம் உணர்வோடு கலந்து விட்டது. சமயங்கள் ஆகட்டும், வழிமுறைகள் ஆகட்டும், தத்துவங்கள் ஆகட்டும், பாரம்பரியங்கள் ஆகட்டும் – இவை அனைத்தும் நமக்கு அளிக்கும் ஒரே செய்தி – அமைதி, ஒற்றுமை, நல்லிணக்கம், என்பவை தாம்.

இந்த புனிதமான ரமலான் மாதம் அமைதி, ஒற்றுமை, நல்லிணக்கம் என்ற பாதையில் நாம் முன்னேறிச் செல்ல நமக்கு துணை இருக்கும். நான் மீண்டும் ஒரு முறை அனைவருக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த முறை நான் மனதின் குரலை வெளிப்படுத்திய போது, நான் ஒரு சொல்லைப் பயன்படுத்தி இருந்தேன், இதைக் குறிப்பாக இளைஞர்கள் குறித்து கையாண்டிருந்தேன்; ஏதாவது ஒன்றைப் புதிதாகச் செய்யுங்கள், comfort zone என்ற சொகுசு வட்டத்தை விட்டு வெளியே வாருங்கள், புதிய அனுபவங்களைப் பெறுங்கள், இந்த வயதில் தான் உங்களால் வாழ்க்கையை இப்படி வாழ முடியும், சற்று அபாயங்களை எதிர்கொள்ளுங்கள், இடர்ப்பாடுகளை சந்தியுங்கள் என்று கூறியிருந்தேன். ஏராளமானவர்கள் தங்கள் பின்னூட்டங்களைப் பதிவு செய்திருக்கிறார்கள் என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. தனிப்பட்ட முறையில் தங்கள் அனுபவங்களைப் பற்றி என்னிடம் உற்சாகத்தோடு பகிர்ந்து கொள்ள அனைவருமே விரும்பியிருக்கிறார்கள். என்னால் ஒவ்வொரு விஷயத்தையும் படிக்க முடியவில்லை,

ஒவ்வொருவர் அனுப்பியிருக்கும் செய்தியையும் என்னால் கேட்க முடியவில்லை, ஏனென்றால் அந்த அளவுக்கு வந்து குவிந்திருக்கிறன. ஆனால் தோராயமாக நோக்கும் போது, சிலர் சங்கீதம் பயில முயன்றிருக்கிறார்கள், சிலர் புதியதொரு வாத்தியத்தைக் கற்பதில் ஈடுபட்டிருக்கிறார்கள், சிலர் யூ டியூபைப் பயன்படுத்தி புதிய விஷயம் ஒன்றைக் கற்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள், புதிய மொழியைக் கற்றுக் கொள்ளும் முயற்சி செய்திருக்கிறார்கள், சிலர் சமையல் கலையில் தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள், சிலர் நாடகத்தில், சிலர் கவிதை இயற்றுவதில் என பலவகையான முயற்சிகளில் இவர்கள் ஆக்கபூர்வமாக ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தது. அவரவர் இயல்புகளை அறிந்து கொள்வது, வாழ்வது, புரிந்து கொள்வது என்ற முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு தொலைபேசி அழைப்பில் ஒலித்த உணர்வை நீங்கள் கேட்டே ஆக வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

“நான் தீக்ஷா கட்யால் பேசுகிறேன். படிக்கும் பழக்கம் என்பது கிட்டத்தட்ட என்னிடமிருந்து விடுபட்டு விட்ட நிலையில் நான் விடுமுறை நாட்களில் படிக்க முடிவெடுத்தேன். விடுதலைப் போராட்டம் பற்றி நான் படிக்கத் தொடங்கிய போது, பாரதம் சுதந்திரம் பெற எத்தனை தியாகங்களையும் போராட்டங்களையும் செயல்படுத்த வேண்டியிருந்தது, எத்தனை போராட்டத் தியாகிகள் சிறைக் கொடுமைகளை அனுபவித்தார்கள் என்பதை உணர்ந்தேன். மிகச் சிறிய வயதிலேயே மிகப் பெரிய சாதனை நிகழ்த்திக் காட்டிய பகத் சிங் அவர்களின் வாழ்க்கை எனக்கு உத்வேகம் அளித்தது, ஆகையால் இந்த விஷயம் குறித்து நீங்கள் இன்றைய தலைமுறையினருக்கு ஒரு செய்தி விடுக்க வேண்டும் என்று நான் உங்களிடம் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

இளைய சமுதாயம் நமது வரலாறு பற்றி, நமது சுதந்திரப் போராட்ட மாவீரர்கள் பற்றி, இந்த தேசத்துக்காக உடல், பொருள், ஆவி துறந்த தியாகிகள் பற்றித் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது எனக்கு ஆனந்தம் அளிக்கிறது. எண்ணற்ற மாமனிதர்கள் தங்கள் இளமையைச் சிறைகளில் இழந்திருக்கிறார்கள். பல இளைஞர்கள் தூக்குக் கயிறுகளை இன்முகத்தோடு முத்தமிட்டிருக்கிறார்கள். அவர்கள் சொல்லொண்ணாத் துயரத்தை எல்லாம் அனுபவித்ததால் தான், நம்மால் இன்று சுதந்திர இந்தியாவின் சுவாசக் காற்றை சுவாசிக்க முடிகிறது. விடுதலைப் போரில் எந்த மாமனிதர்கள் எல்லாம் காலம் கழித்தார்களோ, அவர்கள் எல்லாம் புத்தகம் எழுதினார்கள், படித்தார்கள், மிகப்பெரிய பணிகள் எல்லாம் புரிந்தார்கள், அவர்களின் எழுத்தும் கூட பாரதத்துக்கு சுதந்திரம் பெற்றுத் தருவதில் பெரும்பங்கு ஆற்றியிருக்கிறது.

பல ஆண்டுகள் முன்பாக நான் அந்தமான் நிக்கோபாரில் இருக்கும் செல்லுலர் சிறைச்சாலையைக் காணச் சென்றிருந்தேன்.. இன்று வீர சாவர்கர் அவர்களின் பிறந்த நாள். வீர சாவர்க்கர் அவர்கள் சிறையில் மாஜீ ஜன்மடே – माज़ी जन्मठे என்ற புத்தகத்தை எழுதினார்கள். சிறைச் சுவர்களில் அவர் கவிதைகளை எழுதினார். ஒரு சின்ன அறையில் அவரை அடைத்து வைத்திருந்தார்கள். விடுதலைப்பற்று மிக்கவர்கள் என்னென்ன கொடுமைகளை எல்லாம் தாங்கினார்கள் தெரியுமா? சாவர்க்கர் அவர்கள் எழுதிய மாஜீ ஜன்மடே – माज़ी जन्मठे புத்தகத்தை நான் படிக்க நேர்ந்த பிறகு தான், செல்லுலர் சிறைச்சாலையைக் காண வேண்டும் என்ற ஆவல் எனக்குள் எழுந்தது. அங்கே ஒரு ஒலி-ஒளிக் காட்சிக்கு ஏற்பாடு செய்கிறார்கள், அது மிகவும் உத்வேகம் அளிப்பதாய் இருக்கிறது. காலாபானி என்று அழைக்கப்படும் இந்த அந்தமான் நிக்கோபார் தனிமைச் சிறைச்சாலையில் தங்கள் இளமையை தியாகம் செய்தவர்களில் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், பாரதத்தின் அனைத்து மொழி பேசுபவர்கள் இருந்தார்கள், பல துயரங்களைச் சந்தித்தார்கள்.

இன்று வீர சாவர்க்கர் அவர்களின் பிறந்த நாள். நான் தேசத்தின் இளைய சமுதாயத்தினரிடம் கூறுவது என்னவென்றால், நமக்கு கிடைத்திருக்கும் சுதந்திரத்தின் பொருட்டு என்னவெல்லாம் கஷ்டங்களை அனுபவிக்க நேர்ந்திருக்கிறது, எத்தனை வலிகளைப் பொறுத்துக் கொள்ள வேண்டியிருந்தது என்பதையெல்லாம் நீங்கள் தனிமை சிறைச்சாலைக்குச் சென்று பாருங்கள், அதை ஏன் கொடுஞ்சிறை என்று அழைக்கிறார்கள் என்பது உங்களுக்கு அங்கே சென்ற பிறகு விளங்கும். உங்களுக்கும் வாய்ப்பு எப்போதாவது கிடைத்தால், கண்டிப்பாகச் சென்று வாருங்கள், அது ஒருவகையில் சுதந்திரப் போராட்டத்தின் புனிதத் தலம்.

எனதருமை நாட்டு மக்களே, ஜூன் மாதம் 5ஆம் தேதி, மாதத்தின் முதல் திங்கட்கிழமை. மேலோட்டமாகப் பார்த்தால் இது வாடிக்கையானதாகத் தெரிந்தாலும், ஜூன் மாதம் 5ஆம் தேதி சிறப்பான நாள் ஏனென்றால் “உலக சுற்றுச்சூழல் நாள்” என்ற முறையில் நாம் இதைக் கடைப்பிடிக்கிறோம், இந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை connecting people to nature, இயற்கையோடு மக்களை இணைப்போம் என்பதை மையக்கருத்தாக அறிவித்திருக்கிறது. அதாவது அடிப்படைகளை நோக்கிய பயணம் என்று கொள்ளலாம்; சரி, இயற்கையோடு இணைவது என்றால் என்ன? என்னைப் பொறுத்த மட்டில், நம்மை நாம் இணைத்துக் கொள்வது, நம்மோடு நாம் இணைவது என்பது தான். இயற்கையோடு இணைப்பை ஏற்படுத்துவது என்றால், சிறப்பான பூமியை உருவாக்குவது. இதை காந்தியடிகளை விடச் சிறப்பாக யாரால் வெளிப்படுத்த முடியும். காந்தியடிகள் ஒருமுறை கூறினார் – one must care about a world one will not see, நம்மால் பார்க்க முடியாத உலகத்தின் மீது அக்கறையாக இருப்பது அதாவது நம்மால் காண இயலாத உலகத்தைப் பற்றியும் அக்கறை காட்டுவது, அதனிடம் கரிசனத்தோடு இருப்பது நமது கடமை என்றார். இயற்கைக்கு என வல்லமை உண்டு என்பதை நீங்களே கூட அனுபவித்து உணர்ந்திருக்கலாம்; சிலவேளைகளில் நீங்கள் மிகுந்த களைப்போடு வந்திருப்பீர்கள், அப்போது நீரை வாரி எடுத்து உங்கள் முகத்தில் தெளித்துக் கொண்டால், எத்தகைய ஒரு புத்துணர்ச்சியை அடைந்தீர்கள் என்பதை நினைத்துப் பாருங்கள்!! அதே போல சில வேளைகளில் நீங்கள் அயர்ந்த நிலையில் வீடு திரும்பும் போது, அறையின் சாளரங்களையும் வாயிற்கதவுகளையும் திறந்து வைத்து, சுத்தமான காற்றை ஆழமாக உள்ளிழுக்கும் போது புதிய விழிப்பு உண்டாகும். எந்த பஞ்ச பூதங்களால் நம் உடல் உருவாக்கம் பெற்றிருக்கிறதோ, அது பஞ்ச பூதங்களோடு தொடர்பு கொள்ளும் போது, புதிய சக்தி வெளிப்படுகிறது. இவை அனைத்தையும் நாம் அனுபவித்திருக்கிறோம், ஆனால் இது நம் மனங்களில் சரியாகப் பதிவு பெறாமல் போயிருக்கலாம், இவற்றை நாம் ஓரிழையில் இணைத்துப் பார்ப்பதில்லை. இதே போல எப்போதெல்லாம் இயற்கை நிலையோடு நமக்கு தொடர்பு ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் நமக்குள்ளே புதிய விழிப்பு ஊற்றெடுக்கிறது; ஆகையால் தான் ஜூன் மாதம் 5ஆம் தேதி இயற்கையோடு இணைப்பு ஏற்படுத்திக் கொள்ளும் உலகம் தழுவிய இயக்கம் என்பது நம்மோடு நாம் இணைப்பு ஏற்படுத்திக் கொள்ளும் இயக்கமாக ஆக வேண்டும். இயற்கையை நம் முன்னோர்கள் சிறப்பாகப் பேணிப் பாதுகாத்தார்கள், அதன் சில நன்மைகள் நமக்கு இன்று கிடைத்துக் கொண்டிருக்கின்றன. நாம் இயற்கையைப் பாதுகாத்தோமேயானால், நமக்குப் பின்வரும் சந்ததியினர் இதனால் பயன் அடைவர். பூமியையும் சுற்றுச்சூழலையும் சக்தியின் அடிப்படையாக வேதங்கள் காட்டியிருக்கின்றன. நம் வேதங்களில் இது நன்கு வர்ணிக்கப்பட்டிருக்கிறது. சுற்றுச்சூழல் பற்றிய முழுமையான வழிகாட்டுதலை அதர்வண வேதம் நமக்கு ஒருவகையில் அளிக்கிறது, இது பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான நூல். माता भूमि: पुत्रो अहम प्रुथिव्या: – மாதா பூமி: புத்ரோ அஹம் ப்ருதிவ்யா: என்பது நம் நாட்டில் நிலவும் வழக்கு. நம்மிடம் இருக்கும் தூய்மை பூமியின் காரணமாகவே ஏற்பட்டிருக்கிறது என்பது வேதங்களில் கூறப்பட்டிருக்கிறது. பூமி நமது தாய், நாம் அவளின் மைந்தர்கள். பகவான் புத்தரைப் பற்றிப் பேசும் போது, ஒரு விஷயம் பளிச்சிடுகிறது. மகான் புத்தரின் பிறப்பு, அவருக்கு உதித்த ஞானம், அவரது மஹா-பரிநிர்வாணம், இவை மூன்றும் மரத்தின் அடியில் தான் நிகழ்ந்தன. நம் தேசத்திலும் பல பண்டிகைகள், பல வழிபாட்டு முறைகள் –கற்றவர்கள்-கற்காதவர்கள், நகரவாசிகள்-கிராமவாசிகள், பழங்குடியினர் சமூகம் என யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும், இயற்கை வழிபாடு, இயற்கையின்பால் நேசம் என்பது இயல்பான வாழ்கைமுறையாக அமைந்த ஒன்று. என்றாலும், நாம் இதை சமகாலச் சொற்களில், தற்காலக் கருத்துக்களோடு இணைத்துப் புரிந்து கொள்வது அவசியமாகிறது.

மாநிலங்களிலிருந்து எனக்கு இப்போதெல்லாம் பல செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் மழை வந்தவுடனேயே மரம்நடுதல் என்ற பெரிய இயக்கம் தொடங்கி விடுகிறது. கோடிக்கணக்கான மரங்கள் நடப்படுகின்றன. பள்ளிக்கூடக் குழந்தைகளையும் இதில் இணைத்துக் கொள்கிறார்கள், சமூகசேவை அமைப்புகள் இதில் இணைகின்றன, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இணைகின்றன, அரசு தன் தரப்பில் முனைப்புக்களை மேற்கொள்கிறது. நாமும் கூட இந்த முறை இந்த மழைக்காலத்தில் மரம்நடுதல் பணிக்கு அதிக முக்கியத்துவமும், பங்களிப்பும் அளிக்க வேண்டும்.

என் இனிய நாட்டுமக்களே, ஜூன் மாதம் 21ஆம் தேதி என்பது உலகம் முழுக்க நன்கு அடையாளம் தெரிந்து கொள்ளும் நாளாக ஆகி இருக்கிறது. உலக யோகக்கலை நாள் என்ற வகையில் உலகத்தார் அனைவரும் இதைக் கொண்டாடுகிறார்கள். ஜூன் மாதம் 21ஆம் தேதி மிகக் குறுகிய காலகட்டதிலேயே உலக யோகக்கலை நாள் என்ற வகையில் உலகின் மூலைமுடுக்கெங்கும் பரவியிருக்கிறது, இது உலக மக்களை இணைக்கிறது. ஒருபுறம் உலகில் பிரிவினைவாத சக்திகள் தங்களின் மோசமான முகத்தைக் காட்டிக் கொண்டிருக்கும் வேளையில், உலகிற்கு பாரதம் அளித்திருக்கும் மிகப்பெரிய கொடை யோகக்கலை. யோகக்கலை வாயிலாக நம்மால் உலகை ஓரிழையில் இணைக்க முடியும். யோகம் என்பது எப்படி உடல், மனம், புத்தி, ஆன்மா ஆகியவற்றை இணைக்கிறதோ, அதே போல யோகத்தால் உலகையும் இணைக்க இயலும். இன்று வாழ்க்கைமுறை காரணமாக, அவசரகதி காரணமாக, பெருகிவரும் பொறுப்புகள் காரணமாக, அழுத்தம் காரணமாக, வாழ்க்கை என்பதே பெருங்கடினமாகி விட்டது. சிறுவயதிலேயும் கூட இந்த நிலை ஏற்பட்டு விட்டதை நாம் காண்கிறோம். இணக்கமில்லா மருந்துகளை எடுத்துக் கொண்டு நாட்களைக் கடத்துவது என்ற காலகட்டத்தில் அழுத்தம் நீங்கிய வாழ்க்கையை வாழ யோகக்கலை நமக்கு பேருதவியாக இருக்கும். நலன், உடலுறுதி ஆகிய இரண்டுக்கும் உத்தரவாதம் அளிக்கும் அருமருந்து யோகம். யோகம் என்பது வெறும் உடற்பயிற்சி மட்டுமல்ல. உடலால், மனதால், எண்ணங்களால், பழக்கங்களால் ஆரோக்கியம் நிறைந்த உள்ளார்ந்த பயணத்தை எவ்வாறு மேற்கொள்வது – அப்படிப்பட்ட உள்ளார்ந்த பயணத்தை நாம் அனுபவிக்க வேண்டும் என்று சொன்னால், அது யோகக்கலை மூலம் மட்டுமே சாத்தியமாகும். இரண்டு நாள்கள் முன்பாக யோகக்கலை நாளை முன்னிட்டு உலகின் அனைத்து அரசுகளுக்கும், அனைத்து தலைவர்களுக்கும் கடிதங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. கடந்த ஆண்டு நான் யோகக்கலை தொடர்பான சில போட்டிகளையும், சில பரிசுகளையும் அறிவித்திருந்தேன். மெல்ல மெல்ல இந்தத் திசையில் பணிகள் முன்னேறி வருகின்றன. எனக்கு ஆலோசனை அளிக்கப்பட்டிருக்கிறது, இந்த அடிப்படையான ஆலோசனை அளித்தவருக்கு நான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது மிகவும் சுவாரசியமான விஷயம். வரவிருக்கும் 3வது சர்வதேச யோகக்கலை நாளை ஒட்டி குடும்பத்தின் 3 தலைமுறையினர் இணைந்து ஒன்றாக யோகப் பயிற்சி மேற்கொள்ளலாமே என்று என்னை கேட்டுக் கொள்ளச் சொல்லியிருக்கிறார். தாத்தா பாட்டி, அம்மா அப்பா, மகன் மகள் என 3 தலைமுறையினர் சேர்ந்து யோகப்பயிற்சி மேற்கொண்டு, அப்படி செய்யும் புகைப்படத்தை தரவேற்றம் செய்யலாம். நேற்று, இன்று நாளை என்ற வகையில் மங்களகரமான இணைவாக இது அமையும், யோகக்கலைக்கு புதிய பரிமாணம் கிட்டும். இந்த ஆலோசனை வழங்கியவருக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன், மகளுடன் செல்ஃபி என்ற இயக்கத்தை எப்படி நாம் முன்னர் நடத்தி, அது சுவாரசியமான அனுபவமாக அமைந்ததோ, அதே போல இணைந்து யோகம் செய்யும் 3 தலைமுறையினரைப் படம் பிடியுங்கள், இது நாட்டுக்கும், உலகுக்கும் ஆர்வத்தை, உற்சாகத்தை ஏற்படுத்தும். நீங்கள் அவசியம் NarendraModiAppஇல், MyGovஇல் 3 தலைமுறையினர் எங்கெல்லாம் யோகம் செய்கிறார்களோ, அந்த தலைமுறையினரை ஒன்றாகப் படம்பிடித்து எனக்கு அனுப்பி வையுங்கள். நேற்று, இன்று, நாளையின் படமாக இது அமையும். இது ஒளிமயமான எதிர்காலத்துக்கான உத்தரவாதத்தை அளிக்கும். உங்கள் அனைவருக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன். சர்வதேச யோகக்கலை நாளுக்கு இன்னும் 3 வாரகாலம் இருக்கும் நிலையில், இன்றிலிருந்தே பயிற்சியைத் தொடக்கி விடுங்கள். ஜூன் மாதம் 1ஆம் தேதி முதற்கொண்டே நான் டுவிட்டரில் தினமும் யோகக்கலை தொடர்பான செய்திகள் ஏதாவது இட்டுக் கொண்டே இருப்பேன், இது ஜூன் மாதம் 21ஆம் தேதி வரை தொடரும். நீங்கள் அனுப்புவதையும் நான் பகிர்ந்து கொள்கிறேன். நீங்களும் உங்கள் பங்குக்கு யோகம் தொடர்பான விஷயங்களைப் பகிருங்கள், பரப்புங்கள், மக்களை இணையுங்கள். ஒரு வகையில் இது வருமுன் காக்கும் சுகாதாரப் பாதுகாப்பு இயக்கம். நீங்கள் அனைவரும் இதில் இணைய நான் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்.

என்று நீங்கள் எனக்கு பிரதான சேவகன் பணியை ஆற்றும் பொறுப்பை அளித்தீர்களோ? புது தில்லியின் செங்கோட்டையின் மீதிருந்து நான் ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று எப்போது உங்கள் மத்தியில் உரையாற்ற எனக்கு முதல் வாய்ப்பு கிட்டியதோ? அப்போதே நான் தூய்மை பற்றிப் பேசினேன். அன்று தொடங்கி நான் பாரதம் முழுக்க பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப்பயணங்களை மேற்கொண்டிருக்கிறேன். மோடி எங்கு செல்கிறார்? மோடி என்னவெல்லாம் செய்தார்? என மிக உன்னிப்பாக சிலர் கவனிப்பதை நான் கவனித்திருக்கிறேன். ஒரு சுவாரசியமான தொலைபேசி அழைப்பு எனக்கு வந்தது, அதில் கூறப்பட்ட விஷயம் பற்றிய கண்ணோட்டத்தில் நான் யோசித்ததில்லை. ஆனால் அப்படிப்பட்ட மாறுபட்ட கண்ணோட்டத்தை எனக்கு ஏற்படுத்தியதற்கு என் நன்றிகள். இந்த தொலைபேசி அழைப்பு உங்களுக்கும் அப்படி ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.

“வணக்கம் மோடி அவர்களே, நான் மும்பையிலிருந்து நைனா பேசுகிறேன். மோடிஜி நீங்கள் எங்கெல்லாம் செல்கிறீர்களோ, அங்கிருக்கும் மக்கள் எல்லாம் தூய்மை குறித்து அதிக கவனம் செலுத்துகிறார்கள் என்பதை தொலைக்காட்சியிலும், சமூக வலைத்தளங்களிலும் இப்போதெல்லாம் நான் அடிக்கடி பார்க்கிறேன். மும்பையாகட்டும், சூரத் ஆகட்டும், உங்கள் அழைப்புக்கு செவிசாய்த்து மக்கள் சமூகமாக, தூய்மையை இயக்கமாகவே உள்வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். பெரியவர்கள் ஒருபுறம் என்றால், குழந்தைகள் மத்தியிலும் தூய்மை குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. பலமுறை அவர்கள் பெரியவர்கள் தெருக்களில் அசுத்தப்படுத்துவதை தட்டிக்கேட்பதை நான் பார்த்திருக்கிறேன். காசியின் படித்துறைகளில் நீங்கள் தூய்மை தொடர்பான இயக்கத்தைத் தொடக்கி வைத்த பின்னர், உங்களிடமிருந்து உத்வேகம் அடைந்து அது பேரியக்கமாகவே வடிவெடுத்து விட்டது.”

நீங்கள் கூறுவது சரி தான், நான் எங்கெல்லாம் செல்கிறேனோ, அங்கெல்லாம் அரசு இயந்திரம் தூய்மைப்பணியை மேற்கொள்கிறது, ஆனால் இப்போதெல்லாம் சமூகமட்டத்திலேயே கூட தூய்மை கொண்டாட்டமாகவே ஆகி வருகிறது. நான் செல்வதற்கு 5 நாட்கள், 7 நாட்கள், 10 நாட்கள் முன்பாக என, கணிசமான அளவு தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெறுகின்றன. ஊடகங்களும் இதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றன. சில நாட்கள் முன்பாக நான் குஜராத்தின் கட்ச் பகுதிக்குச் சென்றிருந்தேன். மிகப்பெரிய அளவில் தூய்மை இயக்கம் அங்கே நடைபெற்றது. இதை நான் இணைத்துப் பார்க்கவில்லை, ஆனால் இந்த தொலைபேசி அழைப்பு எனக்கு வந்த பிறகு தான், ஆமாம் இந்த விஷயம் சரி தானே என்று எனக்கு உதித்தது. நாடு எந்த அளவுக்கு இத்தனை சிறப்பாக, உன்னிப்பாக கவனிக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளும் போது எத்தனை ஆனந்தமாக இருக்கிறது தெரியுமா!! இதை விடப் பெரிய மகிழ்ச்சி, என் பயணத்தோடு தூய்மை இணைக்கப்படுகிறது என்பது தான். பிரதம மந்திரியை வரவேற்க மற்ற தயாரிப்பு முஸ்தீபுகள் எல்லாம் நடப்பது சகஜம், ஆனால் தூய்மைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவது அலாதியான மகிழ்ச்சி அளிக்கிறது. இது தூய்மையை விரும்பும் யாருக்குமே ஒரு ஆனந்தம் அளிக்கக் கூடியது தான், கருத்தூக்கம் அளிக்கக் கூடியது தான். தூய்மைப் பணிக்கு வலுகூட்டும் அனைவருக்கும் என் உளமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒருவர் எனக்கு ஒரு ஆலோசனை வழங்கி இருக்கிறார். உள்ளபடியே இது நகைச்சுவை மிகுந்த ஆலோசனை தான். இதை நிறைவேற்ற முடியுமா முடியாதா என்று என்னால் கூற முடியவில்லை. மோடி அவர்களே, உங்களை நிகழ்ச்சிக்கு அழைக்க வருபவர்களிடம், நீங்கள் என்னை அழைக்க விரும்பினால், தூய்மை எப்படி இருக்கும்? எத்தனை டன் குப்பைக் கூளங்களை நீங்கள் எனக்கு அளிப்பீர்கள்? அதன் அடிப்படையில் தான் என்னால் என் பயணத்தை உறுதி செய்ய இயலும் என்று கூறுங்கள் என்று சொல்லியிருக்கிறார் அழைத்தவர். கருத்து என்னவோ நன்றாகத் தான் இருக்கிறது ஆனால் இதைப் பற்றி நான் சிந்திக்க வேண்டும். ஓர் இயக்கம் உருவாக வேண்டும் என்பது என்னவோ சரிதான், பொருட்களைப் பரிசாகக் கொடுப்பதை விட, இத்தனை டன்கள் குப்பைக் கூளங்களை நான் அகற்றுவேன் என்பது சிறப்பானது தான். இதன் மூலம் எவ்வளவு பேர்கள் நோய்வாய்ப்படாமல் நாம் காப்பாற்ற முடியும், சிந்தியுங்கள். எத்தனை மனிதநேயம் மிக்க செயலாக இது இருக்கும், யோசியுங்கள். ஒரு விஷயத்தை நான் உறுதியாக கூறுகிறேன், இந்தக் குப்பைக் கூளங்கள் இருக்கிறதே இதை நாம் கழிவுகளாகப் பார்க்கக் கூடாது, செல்வமாகக் கருத வேண்டும், இவை ஒரு ஆதாரம். ஒருமுறை நாம் குப்பைக் கூளங்களை செல்வமாகக் கருத முற்பட்டு விட்டால், கழிவுப்பொருள் மேலாண்மை தொடர்பான பல புதுப்புது வழிமுறைகள் நம் முன்னே தோன்றத் தொடங்கும். Start-upஇல் இணைந்திருக்கும் இளைஞர்கள் கூட புதிய புதிய திட்டங்களை முன்னெடுத்து வருவார்கள். புதிய புதிய கருவிகளைப் படைப்பார்கள்.

பாரத அரசு மாநில அரசுகளின் துணை கொண்டு நகரப் பிரதிநிதிகள் உதவியோடு, கழிவுப்பொருள் மேலாண்மை தொடர்பான ஒரு மிகப்பெரிய மகத்துவம் நிறைந்த இயக்கம் நடத்த முடிவு செய்திருக்கிறது. ஜூன் மாதம் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் நாளன்று நாட்டின் சுமார் 4000 நகரங்களில் திடக்கழிவு, திரவக்கழிவு ஆகியவற்றை சேகரிக்கத் தேவையான பொருள்கள் கிடைக்கவிருக்கின்றன. இருவகையான குப்பைத்தொட்டிகள் அளிக்கப்படவிருக்கின்றன, ஒன்று பச்சை நிறத்தில், இரண்டாவது நீல நிறத்தில். இருவகையான கழிவுப்பொருட்கள் வெளிப்படுகின்றன – ஒன்று திரவக் கழிவு, மற்றது உலர் கழிவு. நாம் ஒழுங்குமுறையைப் பின்பற்ற வேண்டும், 4000 நகரங்களில், இந்தக் குப்பைத் தொட்டிகள் வைக்கப்படவிருக்கின்றன. உலர் கழிவை நீலநிறத் தொட்டியில் போட வேண்டும், திரவக் கழிவுகளை பச்சை நிறக் குப்பைத் தொட்டியில் இட வேண்டும். சமையலறைக் கழிவுகள் போன்றவற்றில் காய்கறிகளில் தேவையற்றவை, மிச்சமீதி உணவு, முட்டையோடுகள், மரங்களின் இலைதழைகள் போன்றவை அனைத்தும் மக்கும் கழிவுகள், இவற்றை பச்சைக் குப்பைத் தொட்டியில் போட வேண்டும். இவையனைத்தும் வயல்களில் பேருதவியாக இருக்கும். நாம் வயல்வெளிகளின் நிறமான பசுமையை நினைவில் கொண்டால், பச்சைக் குப்பைத் தொட்டிகளில் எதைப் போட வேண்டும் என்பது நினைவுக்கு வந்து விடும். இரண்டாவது வகை குப்பை இருக்கிறதே, அது காகிதக் குப்பைகள், அட்டைப் பெட்டிகள், இரும்புச் சாமான்கள், கண்ணாடித் துண்டுகள், துணிகள், பிளாஸ்டிக், பாலித்தீன், உடைந்து போன டப்பாக்கள், ரப்பர் பொருட்கள், உலோகங்கள் என பல பொருட்கள் இதில் அடங்கும் – இவையனைத்தையும் உலர்ந்த குப்பைகளுக்கான தொட்டியில் இட வேண்டும். இவை மீண்டும் இயந்திரங்களில் இட்டு மறுசுழற்சி செய்யப்படும். எவற்றால் மீண்டும் எந்தப் பயனும் ஏற்படாதோ, அவற்றை நீலநிறக் குப்பைத் தொட்டியில் போட வேண்டும். இப்படிப்பட்ட நல்ல பழக்கத்தை நாம் ஏற்படுத்திக் கொள்வோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. தூய்மையை நோக்கி ஒவ்வொரு முறையும் நாம் ஓர் புதிய அடியை எடுத்து வைக்க வேண்டும். அப்போது தான் நாம் காந்தியடிகளின் தூய்மை பற்றிய கனவை முழுமையாக நிறைவேற்ற முடியும். இன்று நான் மிக்க பெருமிதம் பொங்க ஒரு விஷயத்தை குறிப்பிட வேண்டும் – ஒரே ஒரு மனிதன் மனதில் உறுதி பூண்டு விட்டானேயானால், அது எத்தனை பெரிய மக்கள் இயக்கமாக மாற முடியும் என்பது தான் அது. தூய்மை பற்றிய பணியும் அப்படிப்பட்டது தான். சில நாட்கள் முன்பாக ஒரு விஷயம் காதில் வந்து விழுந்தது. மும்பையில் அசுத்தமான கடற்கரை என்று கருதப்படும் வெர்சோவா பீச் இன்று சுத்தமான, அழகான கடற்கரையாக மாறி இருக்கிறது. இது திடீரென ஏற்பட்டது அல்ல. சுமார் 80-90 வாரங்கள் வரை குடிமக்கள் இடையறாது முயற்சிகள் மேற்கொண்டு, வெர்சோவா கடற்கரையை முற்றிலுமாக மாற்றியிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கில் குப்பை கூளங்கள் அகற்றப்பட்ட பிறகு, வெர்சோவா கடற்கரை தூய்மையும் அழகும் நிறைந்ததாக மாறியிருக்கிறது. இதற்கான ஒட்டுமொத்த பொறுப்பையும், வெர்சோவா குடியிருப்பு தன்னார்வலர்கள் ஏற்றுக் கொண்டார்கள். அஃப்ரோஸ் ஷா என்ற ஒரு நல்ல மனிதர் அக்டோபர் மாதம் 2015ஆம் ஆண்டு முதல் இதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். மெல்ல மெல்ல இது வளர்ந்து மக்கள் இயக்கமாக உருவெடுத்தது. இந்தப் பணிக்காக அஃப்ரோஸ் ஷா அவர்களுக்கு ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம் – UNEP, மிகப் பெரிய விருது ஒன்றை அளித்தது. Champions of the Earth என்ற விருதைப் பெறும் முதல் இந்தியர் இவர் தான். நான் அஃப்ரோஸ் ஷா அவர்களுக்கும் இந்த இயக்கத்துக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எப்படி அவர் தன் பகுதியில் உள்ள அனைவரையும் இணைத்து, மக்கள் இயக்கமாக மாற்றியிருக்கிறார் பாருங்கள்!! இது அனைவருக்கும் கருத்தூக்கம் அளிக்கக் கூடிய அருமையான எடுத்துக்காட்டு.

சகோதர சகோதரிகளே, இன்று நான் மேலும் சந்தோஷமான விஷயத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ‘தூய்மையான பாரதம் இயக்கம்’ தொடர்பாக ஜம்மு காஷ்மீரத்தைச் சேர்ந்த ‘ரியாஸீ ப்ளாக்’ பகுதி, திறந்த வெளியில் மலஜலம் கழிக்கும் பழக்கத்திலிருந்து முழுமையாக விடுபட்டு விட்டது என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. நான் ரியாசீ ப்ளாக் பகுதியைச் சேர்ந்த அனைத்துக் குடிமக்களுக்கும், அந்தப் பகுதியைச் சார்ந்த அனைத்து நிர்வாகிகளுக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், அவர்கள் நல்ல எடுத்துக்காட்டாக இருக்கிறார்கள். இந்த இயக்கத்தை வழிநடத்திச் சென்றவர்கள் அந்தப் பகுதியைச் சேர்ந்த பெண்கள் என்றும், விழிப்புணர்வை ஏற்படுத்த அவர்கள் தீப்பந்த ஊர்வலங்களை மேற்கொண்டார்கள் என்றும் எனக்கு கூறப்பட்டிருக்கிறது. வீடுதோறும், தெருக்கள்தோறும் சென்று, மக்களுக்கு அவர்கள் உத்வேகம் அளித்தார்கள். அந்தத் தாய்மார்களுக்கும் சகோதரிகளுக்கும் நான் என் இதயபூர்வமான வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், அங்கே இருக்கும் நிர்வாகிகளுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன், நல்ல தொடக்கத்தை அவர்கள் ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

என் பிரியமான நாட்டுமக்களே, கடந்த 15 நாட்களாகவும், மாதங்களாகவும், தொடர்ந்து செய்தித்தாள்களிலும், டிவி சேனல்களிலும், சமூக ஊடகங்களிலும், நடப்பு அரசின் 3 ஆண்டுகால செயல்பாடுகள் பற்றி கட்டுரைகள் வந்தவண்ணம் இருக்கின்றன, விவாதங்களும் பகுப்பாய்வுகளும் நடைபெற்று வருகின்றன. 3 ஆண்டுகள் முன்பாக நீங்கள் எனக்கு பிரதான சேவகன் என்ற பொறுப்பை அளித்தீர்கள். ஏகப்பட்ட ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டுள்ளன, ஏராளமான கருத்துக் கணிப்புக்கள் வந்திருக்கின்றன. நான் இவற்றையெல்லாம் மிகவும் ஆரோக்கியமான அறிகுறிகளாகவே காண்கிறேன். கடந்த 3 ஆண்டுக்காலம் ஒவ்வொரு உரைகல்லிலும் உரைத்துப் பார்க்கப்பட்டது. சமுதாயத்தின் அனைத்து மட்டங்களிலும் இருக்கும் மக்களும் இதை ஆய்வு செய்திருக்கிறார்கள். மக்களாட்சி முறையில் இது சிறப்பான செயல்பாடாகும். மக்களாட்சியில் அரசுகள் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் என்பது என் தெளிவான, ஆணித்தரமான கருத்து, மகேசர்களான மக்களிடம், ஆற்றிய பணிக்கான கணக்கை சமர்ப்பித்தே ஆக வேண்டும். நேரம் செலவிட்டு, எங்கள் பணியை ஆழமாக அலசி ஆராய்ந்து, ஆலோசனைகள் கூறி, ஆதரித்து, குறைகளை வெளிப்படுத்திய அனைவருக்கும் நான் என் நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன், இந்த விஷயங்களை நான் மிகுந்த மகத்துவம் நிறைந்தவையாக மதிக்கிறேன். கருத்தில் கொள்ளத்தக்க முக்கியமான பின்னூட்டங்களை அளித்தவர்களுக்கும் நான் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னென்ன குற்றம்குறைகள் இருக்கின்றனவோ, அவை வெளிப்படுத்தப்படும் போது தான், சீர்செய்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படுகிறது. செயல்பாடு நன்றாக இருக்கலாம், குறைவான நன்மைகள் பயக்கலாம், மோசமாக இருக்கலாம், எப்படி இருந்தாலும், அவற்றிலிருந்து கற்க வேண்டும், இதன் வாயிலாகத் தான் முன்னேற்றம் காண முடியும். ஆக்கபூர்வமான விமர்சனம் மக்களாட்சி முறைக்கு வலு சேர்க்கிறது. விழிப்புணர்வுமிக்க நாட்டுக்கு, பகுத்தறிவு நிறைந்த தேசத்துக்கு, இந்த அலசலும் ஆராய்ச்சியும் மிகவும் அவசியமான ஒன்றாகும்.

என் நேசம்நிறை நாட்டுமக்களே, நானும் உங்களைப் போன்ற சாதாரண குடிமகன் தான், சாதாரண குடிமகன் என்ற முறையில் நல்லவை கெட்டவை என அனைத்தும், எந்த எளிய குடிமகனையும் பாதிப்பதைப் போலவே, என்னையும் பாதிக்கின்றன. ‘மனதின் குரலை’ சிலர் தரப்பு உரையாடலாகப் பார்க்கிறார்கள், சிலர் இதை அரசியல் கண்ணோட்டத்தில் விமர்சிக்கிறார்கள். ஆனால் ‘மனதின் குரல்’ என்ற நிகழ்ச்சி, பாரதத்தின் ஒவ்வொரு குடும்பத்தின் உறுப்பினராக என்னை மாற்றும் என்று நான் இதைத் தொடங்கிய போது உள்ளபடி நினைத்துக் கூட பார்க்கவில்லை, இதை மிக நீண்ட அனுபவத்திற்குப் பிறகு நான் உணர்கிறேன். ஏதோ குடும்பத்தின் மத்தியில், வீட்டில் அமர்ந்து கொண்டு, வீட்டு விஷயங்கள் பற்றிப் பேசுவதாகவே எனக்குப் படுகிறது. ஏராளமான குடும்பத்தவர்கள் என்னோடு இந்த விஷயங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். எளிய மனிதன் என்ற முறையில், என் மனதில் ஏற்படுத்தும் பாதிப்பை நான் பகிர்ந்து கொள்கிறேன். 2 நாட்கள் முன்பாக குடியரசுத் தலைவர் மாளிகையில், மேதகு குடியரசுத் தலைவர், மேதகு குடியரசுத் துணைத்தலைவர், மேதகு நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் அனைவரும் ‘மனதின் குரல்’ பற்றிய பகுப்பாய்வு நூல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். ஒரு தனிநபர் என்ற முறையில், எளிய குடிமகன் என்ற முறையில், இந்த நிகழ்வு எனக்கு அதிக உற்சாகம் ஏற்படுத்திய ஒன்று. நான் குடியரசுத் தலைவருக்கும், குடியரசுத் துணைத் தலைவருக்கும், மக்களவைத் தலைவர் அவர்களுக்கும் கடமைப் பட்டிருக்கிறேன், இத்தனை உயர் பதவிகளில் இருப்பவர்கள் எல்லாம், தங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி, ’மனதின் குரலுக்கு’ முக்கியத்துவம் அளித்தார்கள். ஒரு வகையில் ‘மனதின் குரல்’ புதிய பரிமாணத்தை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. நமது நண்பர்கள் சிலர், ‘மனதின் குரல்’ புத்தகம் மீதான பணிகளில் ஈடுபட்டிருந்த போது, என்னுடன் சில சமயம் உரையாடினார்கள். சில காலம் கழித்து இதோடு தொடர்புடைய ஒரு விஷயம் பற்றி எனக்குத் தெரிய வந்த போது, நான் ஆச்சரியப்பட்டுப் போனேன். அபுதாபியில் அக்பர் சாஹப் என்ற பெயரில் அழைக்கப்படும் ஒரு கலைஞர் வசிக்கிறார். அக்பர் சாஹப் ஒரு கருத்தை முன்வைத்தார் – ‘மனதின் குரலில்’ எந்த விஷயங்கள் பற்றியெல்லாம் பகிர்ந்து கொள்ளப்பட்டதோ, அவற்றிற்கான வரிவடிவத்தை தனது கலை வாயிலாக தயார் செய்து அளிக்க விரும்புவதாகத் தெரிவித்தார், அதுவும் ஒரு ரூபாய் கூட பெற்றுக் கொள்ளாமல். தனது அன்பை வெளிப்படுத்தும் முறையில் அக்பர் சாஹப் மனதின் குரலுக்கு கலைவடிவம் அளித்தார். நான் அக்பர் சாஹபுக்கு கடன் பட்டிருக்கிறேன்.

என் பாசம்நிறை நாட்டுமக்களே, அடுத்த முறை நாம் சந்திக்கும் வேளையில் நாட்டின் அனைத்து இடங்களிலும் மழைக்காலம் வந்திருக்கும், பருவநிலை மாறி இருக்கும், தேர்வுகளின் முடிவுகள் வந்திருக்கும், மீண்டும் கல்வி கற்றல் தொடங்கி இருக்கும். மழை வந்தாலே புதிய மகிழ்வான சூழல், புதிய வாசம், புதிய மணம் தான். வாருங்கள் நாமனைவரும் இணைந்து இந்த சூழலில், இயற்கையை நேசித்து முன்னேறிச் செல்வோம். உங்கள் அனைவருக்கும் என் பலப்பல நல்வாழ்த்துக்கள். நன்றி.

'மன் கீ பாத்' தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியது

Leave a Reply