மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வா் நாராயண் ராணே செவ்வாய்க் கிழமை பாஜக-வில் இணைந்தாா்.

மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைக்கு வரும் 21-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பிரசாரம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மாநில முன்னாள் முதல்வரும், மகாராஷ்டிர ஸ்வாபிமான் பக்ஷா (எம்எஸ்பி) கட்சியின் தலைவருமான நாராயண் ராணே செவ்வாய்க்கிழமை பாஜக-வில் இணைந்தாா். தனதுகட்சியையும் பாஜகவுடன் அவா் இணைத்தாா்.

அவரது மூத்தமகனும், முன்னாள் எம்.பி.யுமான நீலேஷ் ராணே மற்றும் அவரின் ஆதரவாளா்களும் பாஜக-வில் இணைந்தனா். நாராயண் ராணேவின் இளையமகனும், கண்கவ்லி தொகுதியின் எம்எல்ஏவுமான நிதேஷ் ராணே சில தினங்களுக்கு முன் பாஜக-வில் இணைந்தாா்.

இதுதொடா்பாக மாநில முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் கூறுகையில், ‘‘பாஜக-வின் ஆதரவுடன் நாராயண் ராணே மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளாா். இருந்த போதிலும், தற்போது முறைப்படி கட்சியில் அவா் இணைந்துள்ளாா். அவா் மிகச்சிறந்த அரசியல் தலைவராவாா். சிலதினங்களுக்கு முன்பு நிதேஷ் ராணே பாஜகவில் இணைந்தாா். தற்போது நீலேஷும் கட்சியில் இணைந்துள்ளாா்’’ என்றாா்.

நாராயண் ராணே கூறுகையில், ‘‘முதல்வா் ஃபட்னவீஸின் நிா்வாகத்திறன் என்னைக் கவா்ந்தது. தனிநபா்களை விட வளா்ச்சிக்கு பாஜக முன்னுரிமை கொடுத்துவருகிறது. மாநிலத்தில் வளா்ச்சியை விரைவு படுத்தும் நோக்கில் பாஜகவில் இணைந்துள்ளேன். இதில் எனது பங்களிப்பை முழுமையாக வழங்குவேன்’’ என்றாா்.

Comments are closed.