வங்கிகளில் 50 கோடி ரூபாய்க்கு அதிகமான வாராக்கடன்களை ஆய்வு செய்யும் படியும், அதுதொடர்பான புகார்களை, சிபிஐ.,க்கு தெரிவிக்கும் படியும், பொதுத் துறை வங்கிகளுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

பிரபல நகைவியாபாரி, நிரவ் மோடியும், அவரது உறவினரும், கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனஅதிபருமான, மெஹல்சோக்சியும், பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் மோசடிசெய்தது, சமீபத்தில் அம்பலமானது. இந்தசம்பவம், நாடுமுழுவதும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மத்திய நிதியமைச்சகத்தின், நிதிசேவைகள் பிரிவுசெயலர், ராஜீவ் குமார், 'டுவிட்டர்' சமூக தளத்தில் வெளியிட்ட பதிவுவிபரம்: பொதுத்துறை வங்கிகளின் மேலாண்மை இயக்குனர்கள்,தங்கள் வங்கிகளில் உள்ள, 50 கோடி ரூபாய்க்கு அதிகமான வாராக்கடன்கள் குறித்து, தீவிர ஆய்வுமேற்கொள்ள வேண்டும். அதில், மோசடி கண்டறியப்பட்டால், அதுதொடர்பாக உடனடியாக, சி.பி.ஐ.,க்கு புகார் செய்ய வேண்டும். இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய உத்தரவுப்படி, பொதுத் துறை வங்கிகளில், 50 கோடி ரூபாய்க்கு அதிகமாக நடக்கும் நிதிமோசடிகள் குறித்து, சி.பி.ஐ.,க்கு புகார் அளிக்கப்பட வேண்டும். மோசடிபுகார் விசாரணையின்போது,சி.பி.ஐ.,க்கு, சம்பந்தப்பட்ட வங்கியின் முதன்மை கண்காணிப்பு அதிகாரி முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். மேலும், வாராக்கடனாக மாறிய வங்கிகணக்கு தொடர்பாக, சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் தொடர்பான அறிக்கையை, மத்திய பொருளாதார புலனாய்வு அமைப்பிடம், வங்கிகள் கேட்டுப்பெற வேண்டும். தேவைப்பட்டால், வருவாய் புலனாய்வு. இயக்ககம், அமலாக்கத் துறை போன்றவற்றின் உதவியையும், வங்கிகள்நாடலாம்.

Leave a Reply