நிலத்தடி நீர்வளத்தை சிறப்பாக நிர்வகிப்பதற்காக ‘அடல் பூஜல் யோஜனா’ என்ற திட்டத்தை மத்தியஅரசு கொண்டுவந்துள்ளது. கர்நாடகா, அரியானா, மத்தியபிரதேசம், குஜராத், ராஜஸ்தான், மராட்டியம், உத்தரபிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் இத்திட்டம் அமல் படுத்தப்படும்.

இதற்கு ரூ.6 ஆயிரம் கோடி ஒதுக்கி, மத்திய மந்திரி சபை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு இத்திட்டம் அமலில் இருக்கும்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாளையொட்டி, டெல்லி விஞ்ஞான்பவனில் இந்த திட்டத்தின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. பிரதமர் மோடி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

இந்ததிட்டம் நாட்டுக்கு மிகவும் முக்கியமானது. வாஜ் பாய்க்கு அர்ப்பணிக்கப் படுகிறது. திட்டத்துக்கான செலவில் பாதித் தொகை, உலகவங்கி கடனாக பெறப்படும். மீதித்தொகை, பட்ஜெட்டில் ஒதுக்கப்படும். 7 மாநிலங்களில் 78 மாவட்டங்களில் உள்ள 8 ஆயிரத்து 350 கிராம பஞ்சாயத்துகள், இத்திட்டத்தால் பலன்அடையும்.

நிலத்தடி நீர் குறைவது, குடும்ப பிரச்சினையோ, தனிப்பட்ட பிரச்சினையோ அல்ல. இது, ஒட்டுமொத்த நாட்டையும் பாதிக்கும் பிரச்சினை. மத்தியமாநில அரசுகளுக்கிடையிலான கருத்து வேறுபாட்டால், தண்ணீர்சேமிப்பு தொடர்பாக ஒருங்கிணைந்த அணுகுமுறையை மேற்கொள்ள முடியாமல் போய்விட்டது.

தண்ணீர் பிரச்சினை மிகவும் முக்கியமானது. வாஜ்பாயின் இதயத்துக்கு நெருக்கமானது. நிலத்தடி நீர் வளம் குறைவான பகுதிகளிலும், நிலத்தடி நீர் வேகமாக குறையும் பகுதிகளிலும் இத்திட்டம் சிறப்புகவனம் செலுத்தும். 2024-ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு குடும்பத்துக்கும் குடி நீர் வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம்.

தற்போதைய நிலையில், 18 கோடி கிராமப்புற குடும்பங்களில் 3 கோடி குடும்பங்களுக்குத்தான், சுத்தமான குடி நீர், குழாய் மூலம் வினியோகிக்கப் படுகிறது. அடுத்த 5 ஆண்டுகளில், மீதி உள்ள 15 கோடி கிராமப்புற குடும்பங்களுக்கும் குழாய் மூலம் குடிநீர் வினியோகிக்க இத்திட்டம் வழிவகுக்கும்.

நிலத்தடி நீர் நிர்வாகத்தில் பொதுமக்களும் பங்கேற்க வலியுறுத்தப்படும். அனைவரும் தண்ணீரை சேமிக்கவேண்டும். தண்ணீர் பயன் பாட்டை குறைக்கக்கூடிய தொழில்நுட்பத்தை ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் உருவாக்க வேண்டும். விவசாயிகள் நுண் நீர் பாசனத்தில் கவனம்செலுத்த வேண்டும்.

தண்ணீர் குறைவாக தேவைப்படும் பயிர்களுக்கு விவசாயிகள் மாறவேண்டும். விலைமதிக்க முடியாத இயற்கை வளமான தண்ணீரை யாரும் வீணாக்க கூடாது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

 

Comments are closed.